ஞாயிறு, 16 டிசம்பர், 2018

டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...!

டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...!

 
hony-doctorate-to-9-years-girls-in-yoga
யோகாவில் பதினான்கு உலக சாதனைகளை படைத்துள்ள ஒன்பதே வயதான நெல்லையைச் சேர்ந்த பிரிஷாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த பிரிஷா, பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரிஷாவின் தாயார் தேவிபிரியாவும் யோகா செய்வதால், அவரும் பிரிஷாவுக்கு பெரும் உதவியாய் இருந்து வருகிறார். அதனால் இளம் வயதிலேயே மாநில மற்றும் தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்று, நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 

ஆசனத்தில் பெரும் சவாலான 'கண்ட பேருண்டா' என்ற ஆசனத்தை வேகமாகச் செய்வதில் பிரிஷா, கடந்த ஆண்டு நவம்பரில், கண்ட பேருண்டா ஆசனத்தை ஒரு நிமிடத்தில் 16 முறை செய்து உலக சாதனை படைத்தார்.  2017 டிசம்பரில், ’ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்’ சாதனை நிகழ்ச்சியில் சாதனை படைத்தார். மலேசியாவில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தங்கத்தைத் தட்டிச் சென்றார்.  

ஒன்பது வயதிற்குள் 14 உலக சாதனையை யோகாவிலும், நீச்சலிலும் படைத்துள்ளார் பிரிஷா. மாவட்ட, மாநில, தேசிய, உலக அளவில் என 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார், பிரிஷா. 

பிரிஷாவின் திறமையைக் கண்டு வியந்த புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பிரிஷாவுக்கு ஏராளமான பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதில் சில... யோகா ராணி, யோகா கலா, யோகா ஸ்ரீ, யோகா ரத்னா, யோகா செல்வி, ஆசனாஸ்ரீ முதலியவை. இளம் சாதனையாளர் என்ற பட்டத்தையும் விட்டுவைக்கவில்லை. 

இவரது தாயாரும், பாட்டியும் யோகாவில் கை தேர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரே சமயத்தில் நீருக்குள் மூழ்கி ஆசனம் செய்வதே அடுத்த சாதனை எனக் கூறியுள்ளார் சாதனைச் சிறுமி பிரிஷா. 

2019 ஜனவரி 26ஆம் தேதி பிரிஷாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. 9 வயதில் டாக்டர் பட்டம் பெறும் முதல் சிறுமி நம் தமிழகத்தைச் சேர்ந்த பிரிஷா தான் என்றால், அனைவரையும் வியப்பிற்குள் ஆழ்த்துகிறது. 

நமது தாயகத்திற்கு பெருமை சேர்க்க இவரது சாதனைகள் இன்னும் தொடர,  வாழ்த்துகிறது. ! நன்றி நியூஸ் டிஎம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக