செவ்வாய், 3 டிசம்பர், 2019

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் கவனிக்கவேண்டியது

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் கவனிக்கவேண்டியது.

*வேட்பு மனுத் தாக்கலின் போது :*

*கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுபவர்* மனுக்கள் வாங்குவது, கொடுப்பது, சமர்ப்பிப்பது எல்லாமே உங்கள் பஞ்சாயத்து அலுவலகத்திலேயே நடைபெறும். தேர்தல் அலுவலர் உங்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து உங்கள் மனுக்களைப் பெற்றுக் கொள்வார். நீங்கள் கவனிக்க வேண்டியது, *உங்கள் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட ஏதோ ஒரு வார்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் போதுமானது. நீங்கள் போட்டியிடும் வார்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும் எனக் கட்டாயம் இல்லை.* ஆனால் உங்களை முன்மொழிபவர் மற்றும் வழிமொழிபவர் ஆகியோரின் பெயர் சம்பந்தப்பட்ட வார்டு வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டியது கட்டாயம்.

*பஞ்சாயத்துத் தலைவருக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள்* தங்களுக்கான மனுக்களைப் பெறுவது, சமர்ப்பிப்பது எல்லாமே சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அதாவது யூனியன் ஆபீஸில் தான் இருக்கும். தேர்தல் அலுவலர் யார் என்ற விவரம் ஒன்றிய அலுவலகம் சென்றால் தெரிந்துகொள்ளலாம்.
ஒன்றிய அலுவலகத்தில் அவர்கள் தெரிவிக்கும் தொகையை (தோராயமாக ரூபாய் 100) செலுத்தி உங்கள் ஊராட்சி வாக்காளர் பட்டியலைப் பெற்றுக் கொள்ளவும். இணையதளத்திலும் வாக்காளர் பட்டியல் இருப்பதால் கட்டாயம் உங்கள் ஊராட்சி வாக்காளர் பட்டியலை வைத்துக் கொள்ளவும்.

*உங்கள் பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரும், அதேபோல உங்களை முன்மொழிபவர் வழிமொழிபவர் ஆகியோரின் பெயரும்
 இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.*

தற்போது பயன்படுத்தப்படும் வேட்புமனுவை ஒன்றிய அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும்.

*வேட்புமனு படிவத்தோடு உறுதிமொழி பத்திரமும் சமர்ப்பிக்க வேண்டும்.* பொதுவாக 20 ரூபாய் பத்திரத்தில் உறுதிமொழி பத்திரம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். தற்போது அது மாறி இருக்கலாம். இப்போது எந்த விலைக்குப் பத்திரம் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிந்து பின் பயன்படுத்தவும். *நீங்கள் வாங்கும் பத்திரம் தேர்தல் அறிவிக்கை வந்த தேதிக்குப் பிறகு வாங்கினால் நல்லது. அதாவது ஆறாம் தேதி(06.12.2019) அன்று முதல் நீங்கள் பத்திரம் வாங்கி பயன்படுத்தலாம்.*

*வேட்புமனுவையும் உறுதிமொழிப் பத்திரத்தையும் முழுவதுமாக தட்டச்சு செய்து (கம்ப்யூட்டரில் டைப் செய்து) பயன்படுத்தவும். கையில் எழுதுவதைத் தவிர்க்கவும்.*

*உறுதிமொழி பத்திரத்தில் குற்ற வழக்குகள் விவரம் மற்றும் சொத்து விவரம் ஆகியவற்றைக் கவனமாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.*  குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளில் நீதிமன்றத்தால்
தண்டனை வழங்கி தங்கள் மீது தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டால் போதுமானது. இதற்கென ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

அதேபோன்று *தங்களின் முழுமையான சொத்து விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.* நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் தங்கள் தாய், தந்தையர் பெயரில் உள்ள சொத்துக்களையும் தங்கள் மீது உள்ள சொத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் திருமணமான ஆணாக இருந்தால் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகள் பெயரில் உள்ள சொத்து விவரங்களையும், தங்கள் பெயரில் உள்ள சொத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும். அதேபோல நீங்கள் திருமணமான பெண்ணாக இருந்தால் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகள் மீது உள்ள சொத்து விவரங்களையும் தங்கள் மீது உள்ள சொத்து விவரங்களையும் தவறாமல் குறிப்பிட வேண்டும். ஆனால் *இதற்கென சொத்து பத்திரம் போன்ற பிற ஆவணங்களை இணைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக