ஞாயிறு, 7 ஜூன், 2020

புத்துயிர் பெற்ற ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம்


 புத்துயிர் பெற்ற ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம்.

 *தென்காசி* மாவட்டத்தின் வறண்ட பகுதிகளில் ஒன்றாக விளங்கும் கீழப்பாவூர், கடையம், ஆலங்குளம் ஒன்றிய பகுதிகள் பயன்பெறும் வகையில் ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நபார்டு வங்கி மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 66 ஆண்டு கால மக்களின் கனவு நனவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தென்காசி  மாவட்டத்தில் விவசாயத்திற்கு மிகவும் பிரசித்திப் பெற்ற பகுதி கீழப்பாவூர் ஒன்றியம். இதன் வடபகுதிகளான கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, குலசேகரப்பட்டி, மேலப்பாவூர், சடையப்புரம், கருமடையூர், மூலக்கரையூர், சாலைப்புதூர், மகிழ்வண்ணநாதபுரம், பெத்தநாடார்பட்டி, அருணாப்பேரி, நாகல்குளம், ராஜபாண்டி, வெள்ளகால், கழுநீர்குளம், மேலபட்டமுடையார்புரம், அடைக்கலப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் நெல், மிளகாய், தக்காளி, சிறிய வெங்காயம், பல்லாரி, வெண்டைக்காய், சுரைக்காய், அவரைக்காய், பூசணிக்காய், தடியங்காய் உட்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்த பகுதிகளுக்கு மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியான புளியரை, கண்ணுப்புளிமெட்டு, செங்கோட்டை பகுதியில் இருந்து சிற்றாறு மூலம் மேலப்பாவூர், கீழப்பாவூர் பெரியகுளம், அருணாப்பேரி, நாகல்குளம் மற்றும் சாலைப்புதூர் கடம்பன்குளத்துக்கு தண்ணீர் வருகிறது. இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன.
இதேபோல் ராமநதி மூலம் கடையம், மந்தியூர், கோவிந்தபேரி, பாப்பாங்குளம், பொட்டல்புதூர், மாதாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களுக்கும், கடனாநதி மூலம் ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், மன்னார்கோவில், பிரம்மதேசம், சிவசைலம், கருத்தப்பிள்ளையூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களுக்கும் பாசன வசதி பெறுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நநாடகா, ஆந்திரா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. கீழப்பாவூர் ஒன்றியத்தின் வடபகுதியில் விவசாயம் செழித்தாலும், அதன் நடுப்பகுதி மற்றும் கடையம், ஆலங்குளம் ஒன்றியத்தின் ஒரு பகுதிகளுக்குட்பட்ட குத்தாலப்பேரிகுளம், நாராயணப்பேரி குளம், சென்னெல்தாகுளம், புதுக்குளம், நாராயணப்பேரி முடித்தான்குளம், பத்மநாதப்பேரிகுளம், புங்கன்குளம், கைக்கொண்டார்குளம், வெள்ளாளன்புதுக்குளம், மைலப்புரம் ஆலந்தாகுளம், தெற்கு மடத்தூர் வடக்கு மற்றும் தெற்கு குளங்கள், பண்டாரகுளம் உள்ளிட்ட 15 குளங்கள் தண்ணீர் பெருகாமல் வறண்டே காணப்படுகின்றன.
இதன் காரணமாக திப்பணம்பட்டி, கல்லூரணி, சிவநாடானூர், நாட்டார்பட்டி, ஆவுடையானூர், அரியப்புரம், சென்நெல்தாபுதுக்குளம், பூவனூர், சிவநாடானூர், மைலப்புரம், வெங்கடாம்பட்டி, சின்னநாடானூர், தெற்கு மடத்தூர், வெய்க்காலிபட்டி, கரிசலூர் உட்பட  100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாயத்தை கைவிட்டு வேலை தேடி வெளியூருக்கு சென்று விட்டனர். பலரும், விவசாய நிலங்களை கிடைத்த விலைக்கு விற்கும் அவலத்துக்கு தள்ளப்பட்டனர். ஒரு சில விவசாயிகள்  கிணற்று தண்ணீர் மூலம் நெல், பல்லாரி, தக்காளி,  மிளகாய், வெ ண்டை, சிறிய வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பல்வேறு இன்னல்களுக்கு இடையே மகசூல் எடுக்கின்றனர். இந்நிலை தற்போதல்ல... கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. மேலும் அரியப்புரம், ஆவுடையானூர், திப்பணம்பட்டி, சென்னெல்தாபுதுக்குளம், நாட்டார்பட்டி, கொண்டலூர், பூவனூர், சிவநாடானூர், மைலப்புரம், வெங்கடாம்பட்டி, சின்னநாடானூர், தெற்கு மடத்தூர், பொட்டல்புதூர், வெய்க்காலிபட்டி, கரிசலூர், பாவூர்சத்திரம் செட்டியூர் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.
இந்த பகுதியில் உள்ள குளங்களை நிரப்புவதற்கும், கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் ராமநதி - ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு. இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென விவசாயிகளும், பொதுமக்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2005ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நெல்லையில் நடந்த விழாவில் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் ரூ.3.64 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். ஆனாலும் இத்திட்டம் கிடப்பில் ேபாடப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு கீழப்பாவூர் மற்றும் கடையம் ஒன்றிய பகுதி விவசாயிகளை கொண்ட ராமநதி மேல்மட்ட கால்வாய் போராட்டக்குழு உருவாக்கப்பட்டு, பாவூர்சத்திரத்தில் மாபெரும் விவசாயிகள் மாநாட்டை  நடத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனால் இத்திட்டம் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வேகத்தை ஏற்படுத்தியது. மேலும் இத்திட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தி சட்டசபையில் அப்போதைய தென்காசி எம்எல்ஏ சரத்குமாரும் தொடர்ந்து வலியுறுத்தினார்.
இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரின் உத்தரவுப்படி தலைமை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இத்திட்டத்திற்கு ரூ.42 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று ஒப்புதலை பெற்றனர். இத்திட்டத்தின் அவசியத்தை உணர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2015 செப்.25ம் தேதி தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் ராமநதி ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் ரூ.42 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்.கடந்த 2015 டிச.22ம் தேதி இதற்காக அரசாணை வெளியிடப்பட்டு அதன் பின் ஆய்வு பணிக்காக ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்து மண் பரிசோதனை, கால்வாய் செல்லும் பாதையில் தனியார் மற்றும் அரசு நிலங்கள் எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும் என்பது போன்ற பணிகள் 2016ம் ஆண்டு நிறைவு பெற்று வரைவு திட்டம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்பட்டது.
ஆனால் வழக்கம்போல் பைல்கள் தேங்கிக் கிடந்தன. இதையடுத்து தற்போதைய தென்காசி எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் இத்திட்டத்தின் அவசியம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து 2017-2018ம் ஆண்டுகளில் நிலம் கையகப்படுத்துவதற்கான கால்வாய் செல்லும் பாதைகள் உள்ள தனியார் நிலங்களில் நில அளவை பணிகள் நிறைவுற்று 80% நிலம் உரிமையாளர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது. இந்நிலங்களை கையகப்படுத்துவதற்கான நிர்வாக ஒப்புதல் பெறும் கோப்பு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு அதில் பலமுறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக நிர்வாக ஒப்புதல் பெறும் கோப்பு தற்போது நிதி துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. நிர்வாக ஒப்புதல் கிடைத்தவுடன் நிலங்கள் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கால்வாய் வெட்டும் பணிக்கான மதிப்பீடு திருத்தி அமைக்கப்பட்டு முன்பு 42 கோடி என்று இருந்த மதிப்பீடு தற்போது 41.08 கோடியாக மறுமதிப்பீடு செய்து இந்த கோப்பு அரசின் பரிந்துரையுடன் நபார்டு வங்கியின் ஒப்புதலுக்கு கடந்த 2019 ஜூலை மாதம் அனுப்பப்பட்டது. விவசாயத்தின் முக்கியத்துவம் கருதி நபார்டு வங்கி இத்திட்டத்தை மேற்கொள்ள நிதியுதவி வழங்க முடிவு செய்து அறிவித்தது. இதையடுத்து ராமநதி - ஜம்புநதி பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில்  இத்திட்டத்திற்கு ரூ.41.50 கோடி ஒதுக்கீடு கடந்த 26.2.2020ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 66 ஆண்டுகால கனவு திட்டம் விரைவில் தொடங்கும் என்பதால் இப்பகுதி விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக