வெள்ளி, 14 ஜூலை, 2017

EXCLUSIVE : பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா, ரகசியமாக காரில் வெளியில் சென்று வந்தாரா? பரபரப்பு கடிதம்.



EXCLUSIVE : பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா, ரகசியமாக காரில் வெளியில் சென்று வந்தாரா? பரபரப்பு கடிதம்.

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா, ரகசியமாக காரில் வெளியில் சென்று வந்தாரா? ஜெயிலர் ஒருவர் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுத்ததற்கு ரூ. 2 கோடி வரை லஞ்சம் பெற்றதாக  கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.சத்திய நாராயணா மீது எழுந்த குற்றச்சாட்டு குறித்த தகவல் டி.ஐ.ஜி. ரூபாவுக்கு  எப்படி கிடைத்தது என்ற பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.

சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக  ரூபா பொறுப்பேற்ற பிறகு அவருக்கு ஒரு மொட்டை கடிதம் வந்தது. அந்த கடிதத்தை ஜெயிலர் ஒருவர் எழுதி இருந்தார். அந்த ஜெயிலர் தனது பெயரை கடிதத்தில் குறிப்பிடவில்லை என்றாலும் கூட  பெங்களூரு பரப்பனஅக்ர ஹார சிறையில் நடக்கும் விதிமுறை மீறல்கள் குறித்து அவர் விளக்கி இருந்தார்.

அந்த மொட்டை கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:-

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி., ஐ.ஜி., சிறைச்சாலையில் இருக்கும் ஜெயிலர், சிறைக் கண்காணிப்பாளர், சிறை மருத்துவர், சிறை காவலாளிகள், பாரா போலீசார் ஆகியோருக்கு கடந்த 5 மாதங்களாக கை நிறைய பணம் கொடுக்கப்பட்டது.

சிறையில் சசிகலாவுக்கு மாடுலர் கிச்சன் என்ற நவீன சமையல் அறை வசதி செய்து கொடுக்க சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டு உள்ளது. சிறையில் கொடுக்கும் வெள்ளை நிற துண்டு சீட்டினை வெளியில் உள்ள சசிகலாவின் உறவினரிடம் கொடுத்தால் அவர் வேலைக்கு தகுந்தாற்போல் பணம் கொடுப்பார்.

மேலும் சிறையில் உள்ள வி.வி.ஐ.பி. சிறைத்துறை உயர் அதிகாரி காரில்  சிறையில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரிட்டானியா அடுக்குமாடி குடியிருப்புக்கு 3 முறை சென்று வந்துள்ளார்.  மேலும்  சிறைக்குள் அனைத்து கைதிகளுக்கும் எல்லா வசதிகளும் கிடைக்கிறது. சிறை என்பது கைதிகளை திருத்தும் இடமாக இல்லாமல் உல்லாச விடுதிபோல் செயல்பட்டு வருகிறது. கைதிகளுக்கு வெளியில் இருந்து உணவு, மருந்து பொருட்கள், பேக்கரி உணவு வகைகள், சிகரெட், பீடி, குட்கா, கஞ்சா ஆகிய போதை பொருட்கள் சுலபமாக கிடைக்கின்றன.  இதற்காக பலருக்கு  லஞ்சம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக