உலகின் உயரமான சிலை: இந்தியாவின் இரும்பு மனிதர் படேல் சிலையை திறந்து வைத்து மோடி புகழாரம்!
அரசியல் கண்ணோட்டத்துடன் இந்தச் சிலையை சிலர் பார்ப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் பெரிய குற்றம் செய்தது போல் விமர்சனம் செய்கின்றனர். நாட்டின் சிறந்த மற்றும் பெரிய தலைவரை பெருமைப்படுத்துவது குற்றமா? என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் நரேந்திர மோடி!
ஆமதாபாத் : உலகின் மிக உயரமான சிலை- 597 அடி உயரமுள்ள சிலையாக, குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் இரும்பு மனிதர் என ப்படும் சர்தார் வல்லப பாய் படேலின் உருவ சிலையை, பிரதமர், நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரான சர்தார் வல்லப பாய் படேல் சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர், உள்துறை அமைச்சர் என இரண்டு பதவிகளை வகித்தவர். ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து நாடு சுதந்திரம் பெற்றதும், 500க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டவர் படேல். அதற்காக அவர் எடுத்த உறுதியான நடவடிக்கைகளுக்காக ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என வல்லபபாய் படேல் போற்றப் படுகிறார்.
வல்லபபாய் படேலை சிறுவயதிலேயே சர்தார் என சிறப்புப் பெயருடன் கிராம மக்கள் அழைத்தனர். அவரது நினைவாகவே சர்தார் சரோவர் அணை அமைக்கப் பட்டது. நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, 2013இல் நர்மதை ஆற்றின் நடுவே உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில் 597 அடி உயரத்தில் சர்தார் வல்லப பாய் படேல் சிலை அமைக்கப்படும் என்று மோடியால் அறிவிக்கப் பட்டு, திட்டம் செயல்படுத்தப் பட்டது.
படேலுக்கு சிலை அமைக்கும் பணிகள் ரூ. 2,300 கோடி செலவில் முழுமை அடைந்தன. இதையடுத்து, வல்லபபாய் படேலின் பிறந்த தினமான இன்று அவரது சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! தேசத்தை ஒன்றிணைத்த படேலின் சிலை ‘ஒற்றுமை சிலை’ என பெயரிடப் பட்டது.
குஜராத்தில் நர்மதா நதியின் நடுவில் அமைந்துள்ளது சாது பேட் தீவு. இந்தத் தீவுக்குச் செல்ல 250 மீட்டர் நீள இணைப்புப் பாலம் உள்ளது. நாட்டிலுள்ள 7 லட்சம் கிராமங்களில் இருந்து விவசாய கருவிகள் சேகரிக்கப்பட்டு, அதிலிருந்து இரும்புகள் எடுக்கப்பட்டு சிலை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயிகள் 135 டன் இரும்பை நன்கொடையாக அளித்துள்ளனராம்.
சிலை உள்ள பகுதியில் 52 அறைகள் உள்ள கட்டடம், மூன்று நட்சத்திர ஓட்டல், அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சர்தார் படேலின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையிலான பொருட்கள்அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.
சிலையின் மேற்பகுதியில் சுமார் 200 பேர் நின்று பார்க்கும் வசதி உள்ளது. இங்கிருந்து சர்தார் சரோவர் அணை மற்றும் விந்திய சாத்பூரா மலைப்பகுதிகளை 200 கி.மீ., தொலைவுக்குப் பார்க்கலாம்!
இந்தச் சிலையின் மேலும் சில சிறப்பம்சங்கள்:
* நர்மதா அணை அருகே 3.2 கி.மீ., தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது சிலை. ரூ.2,389 கோடி செலவானதாம்.
* அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையை விட 3 மடங்கு உயரமானது!
* இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும் படேலுக்கு நாடு முழுவதிலும் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
* பத்மபூஷண் விருது பெற்ற ராம் வி.சுதர் சிற்ப கலைஞரால் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
* லார்சன் டூப்ரோ நிறுவனமும், குஜராத்தின் சர்தார் சரோவர் நர்மதா நிஜாம் லிமிடெட் நிறுவனமும் இணைந்து சிலையை உருவாக்கியுள்ளன. இதனை உருவாக்க, 250 பொறியாளர்கள், 3400 தொழிலாளர்கள் இணைந்து 33 மாதங்கள் பாடுபட்டுள்ளனர்.
* உலகின் மிக உயரமான சிலையாக தற்போது கருதப்படும் சீனாவின் புத்தர் கோயில் சிலையை விட உயரமானது படேலின் சிலை.
* 553 வெண்கல பகுதிகளுடன், ஒவ்வொரு பகுதியும் 10 முதல் 15 நுண்ணிய பகுதிகள் கொண்டதாக அமைந்துள்ளது! சர்வதேச நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த வெண்கல பகுதிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
* ஒரே நேரத்தில் 200 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் 153 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் 153 வது மீட்டர் உயரத்தில் இருந்து சர்தார் சரவோர் அணையை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
* அடிப்பாகத்தில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில், படேலின் வாழ்க்கை குறித்த 40,000 ஆவணங்கள், 2,000 புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஆராய்ச்சி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று திறக்கப்பட்ட படேல் சிலையைக் காண தினமும் சுமார் 15 ஆயிரம் பார்வையாளர்கள் வருவர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் நடைபெற்ற உலகின் மிக உயரமான படேலின் சிலை திறப்பு விழாவில் தமிழக அரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.
182 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான சர்தார் வல்லப பாய் படேலின் சிலையை திறந்துவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!
முன்னதாக, சர்தார் வல்லபபாய் படேலின் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஒற்றுமையின் அடையாளமாக அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான 182 மீட்டர் உயரம் கொண்ட படேலின் சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி!
இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு தலை வணங்க வேண்டும். நாட்டிற்காக அயராது உழைத்தவர் படேல் என கூறியிருந்தார். மேலும், படேல் சிலை திறப்பு வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது என்று கூறினார் மோடி.
உலகின் மிக உயரமான சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்ட போது…
படேல் சிலையை திறந்து வைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். மிக உயரமான சிலை அமைக்கப்பட்டதன் மூலம் படேலுக்கு கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிக்கக் கூடியது. அனைவரும் இந்த நிகழ்வை கொண்டாடுகின்றனர். இந்தியாவின் ஒற்றுமையை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது. வரலாற்றில் மறக்க முடியாத நாள். இதனை வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது. இந்த நாளை ஒவவொரு இந்தியனும் மறக்க முடியாது.
குஜராத் மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்தப் பெரிய திட்டத்துக்கு மக்கள் அளித்த ஆதரவு பெருமைப்பட வைக்கிறது. படேல் இளைஞர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தார். இந்தியா கடினமாக சூழலில் இருந்த போது உள்துறை அமைச்சர் ஆனார். நான் குஜராத் முதல்வராக இருந்த போது சிலை அமைக்கும் திட்டம் தொடங்கப் பட்டது. இதனை நான் பிரதமராக வந்து திறந்து வைப்பேன் என எதிர்பார்க்கவில்லை.
படேலின் முயற்சியால் இந்தியா ஒற்றுமையாக உள்ளது. புதிய மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கான வழியைக் காட்டியவர். இந்தச் சிலையை உருவாக்க இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று சேர்ந்து, உதவி செய்து பெரிய இயக்கமாக மாற்றினர்.
அந்த வகையில், விவசாயிகளுக்கு பெருமை சேர்ப்பதாக இந்தச் சிலை உள்ளது. புதிய இந்தியா மற்றும் பழங்குடியின மக்களின் தியாகத்தை பிரதிபலிப்பதாக இந்தச் சிலை உள்ளது. இதனை உருவாக்க பல திறமைசாலிகள் பணிபுரிந்துள்ளனர்.
அரசியல் கண்ணோட்டத்துடன் இந்தச் சிலையை சிலர் பார்ப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் பெரிய குற்றம் செய்தது போல் விமர்சனம் செய்கின்றனர். நாட்டின் சிறந்த மற்றும் பெரிய தலைவரை பெருமைப்படுத்துவது குற்றமா? என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் நரேந்திர மோடி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக