தேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்ற பி.ஜே.பி
*அதிர்ச்சி தகவல், உண்மை வெளிவந்தது, முழுவதையும் படிக்கவும்*
2014 தேர்தலில் தொடங்கி, வரிசையாக நடைபெற்ற அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களிலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை 'ஹேக்' செய்துதான் பிஜேபி வெற்றி பெற்றதாக ஹேக்கர் ஒருவர் வீசியுள்ள குண்டு டெல்லி அரசியலை அதிரச் செய்துள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதில் தொடங்கி, அடுத்தடுத்து நடைபெற்ற அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களிலும் பி.ஜே.பி. வெற்றிபெற்றது மின்னணு இயந்திரங்களை `ஹேக்' செய்துதான் என ஹைதராபாத்தைச் சேர்ந்த கம்யூட்டர் ஹேக்கர் S. சுஜா என்பவர் குற்றஞ்சாட்டியுள்ளது, டெல்லி அரசியலைக் கிடுகிடுக்க வைத்துள்ளது.
ஐரோப்பாவுக்கான இந்தியப் பத்திரிகையாளர் சங்கம் லண்டனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், S.சுஜா இந்தக் குற்றச்சாட்டைப் பகிரங்கமாக முன்வைத்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவரான S.சுஜா, பாதுகாப்பு காரணமாக அமெரிக்காவிலிருந்து `ஸ்கைப்' வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக இந்நிகழ்வில் பங்கேற்றதாகக் கூறப்பட்டது. இந்நிகழ்வுக்கு, இந்தியாவிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் மட்டும் கலந்துகொண்டார். பல மூத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஜனவரி 21-ம் தேதி நடைபெற்ற நிகழ்வில், சையது சுஜா முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் `பகீர்' ரகம்!
ஹேக் பற்றிப் பேட்டியளித்த சுஜா ``நான் 2004 முதல் 2014 வரையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான `எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (இ.சி.ஐ.எல்.)' நிறுவனத்தில் பணிபுரிந்தேன். இந்நிறுவனம்தான் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கிறது. இஸ்ரோ, இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட் போன்ற அமைப்புகளுக்கும் ரேடார் தொழில்நுட்பங்களைத் தயாரித்து வழங்குகிறது.
`மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியுமா?' என்று ஜூன் 2013-ல் இ.சி.ஐ.எல். நிர்வாகிகள் எங்களை ஆய்வு செய்யச் சொன்னார்கள். எங்களது ஆய்வில், வாக்குப்பதிவு இயந்திரங்களை `ஹேக்' செய்ய முடியும் என்பதை கண்டுபிடித்தோம். குறைந்த அளவு அதிர்வெண் மூலம், வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள டிரான்ஸ்மீட்டர் சிப்புகளை ஹேக் செய்ய முடியும். இதன்மூலம் நாம் அனுப்பும் தரவுகளை வாக்குப்பதிவு இயந்திரத்துக்குள் புகுத்தி, விரும்பிய கட்சிக்கு அதிக வாக்குகள் விழுந்தவாறு தேர்தலையே மாற்றியமைக்க முடியும். அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தொடாமலேயே, இதைச் செய்து முடிக்கலாம்.
எங்கள் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்த பின்னர், பி.ஜே.பி'-யின் மஹாராஸ்டிரா தலைவர் கோபிநாத் முண்டே எங்களை வந்து சந்தித்தார். ` `ஹேக்' செய்ய முடியாத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நாம் உருவாக்குவோம்' எனக் கூறினார். அந்த நேரத்தில்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தலும் வந்தது.
ஏப்ரல் 13, 2014-ல் ஹைதராபாத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலிருந்து `சிக்னல்'கள் வெளியாவதை எனது டீம் கண்டுபிடித்தது. இயந்திரங்களை `ஹேக்' செய்து பி.ஜே.பி மோசடி செய்வது தெரியவந்தது. எங்களுக்குத் தெரிந்ததை வெளியே சொல்லாமல் இருக்க, பி.ஜே.பி தலைவர்களை `பிளாக் மெயில்' செய்ய முடிவெடுத்தோம். மே 13, 2014-ல், நான் உட்பட எனது 14 பேர் கொண்ட டீம், பி.ஜே.பி தலைவர் ஒருவரைச் சந்திக்க ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான `கிஷான்பாக்' சென்றோம்.
ஒருமணிநேரம் காத்திருப்புக்குப் பிறகு, காரில் வந்திறங்கிய அந்தத் தலைவர், எங்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் கடந்துசென்று, தன்னோடு வந்தவர்களிடம் எங்களைச் சுடச் சொன்னார். அவர்கள் எங்களைச் சரமாரியாகச் சுட்டதில், என்னுடைய டீம் மொத்தமும் கொல்லப்பட்டது. எனக்கும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால், நான் இறந்துவிட்டதாகக் கருதி, சுவராஜ் மாஸ்டா வேனில் ஏற்றி எங்கோ கொண்டு சென்றனர்.
சிறிது நேரத்தில் எனக்கு மயக்கம் தெளிந்து விழிப்பு வந்தவுடன், அங்கேயிருந்து தப்பித்து எனது நண்பர்கள் உதவியுடன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தேன். இந்தக் கொலைகளை மறைப்பதற்காக, அடுத்த நாள் மே 14-ம் தேதி, கிஷான்பாக் பகுதியில் செயற்கைக் கலவரம் ஏற்படுத்தப்பட்டது. இதில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் மூவர் இறந்ததாகக் கணக்குக் காட்டினர். உண்மையில், எனது டீம் உறுப்பினர்களின் பிணங்களை அப்புறப்படுத்தவும், இவ்விவகாரத்தை மூடி மறைக்கவுமே இக்கலவரம் ஏற்படுத்தப்பட்டது. இதை, டி.ஆர்.எஸ்., காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியினரும் கேள்வி எழுப்பவில்லை. இந்தியச் சட்டப்படி நான் இறந்துவிட்டதாகத்தான் பதிவு இருக்கிறது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை `ஹேக்' செய்துதான் 278 இடங்களை பி.ஜே.பி. கைப்பற்றியது. 201 இடங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியதற்கும் இதுதான் காரணம். ராணுவத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அலைவரிசையைக் கொண்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பி.ஜே.பி `ஹேக்' செய்துள்ளது. இதற்கான உதவியை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செய்துகொடுத்துள்ளது. இதற்குத் தேவையான குறைந்த அதிர்வெண் சிக்னல்களை ஒலிபரப்ப இந்தியா முழுவதும் ஒன்பது இடங்களில் ஜியோ மையங்கள் உள்ளன. இவற்றிலிருந்துதான் தரவுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் புகுத்தப்பட்டு `ஹேக்' செய்யப்படுகிறது. இப்பணியைச் செய்யும் ஜியோ நிறுவன ஊழியர்களுக்குக்கூட, எதற்காகத் தாங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளோம் என்பது தெரியாது.
இந்தப் பின்புலம் எல்லாம் தெரிந்ததால்தான், 2014 தேர்தல் முடிவுற்ற சில தினங்களிலேயே, பி.ஜே.பி தலைவர் கோபிநாத் முண்டே வாகன விபத்தில் கொல்லப்பட்டார். இவ்விபத்தை விசாரித்து வந்த தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரி முகமது தன்சில் அகமது, கோபிநாத் முண்டே இறப்பு, கொலை என எப்.ஐ.ஆர். போட முடிவெடுத்தபோது, ஏப்ரல் 2, 2016-ல் அவரும் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இறுதியில் பழிவாங்கும் நோக்கத்திற்காக அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் வழக்கை மூடியது.
2015-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை `ஹேக்' செய்ய பி.ஜே.பி முயற்சி செய்தது. நானும், எனது நண்பர்களும் இணைந்து அம்முயற்சியை முறியடித்தோம். பி.ஜே.பி'க்கு விழ வேண்டிய வாக்குகளை ஆம் ஆத்மிக்கு நாங்கள் மடைமாற்றியதால், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67-லில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை `ஹேக்' செய்ய பி.ஜே.பி முயன்றது. எனது டீம் அம்முயற்சியை முறியடித்ததால், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தனர்.
இந்திய தேர்தல் ஆணையம், பி.ஜே.பி., இ.சி.ஐ.எல். அமைப்புகள் எனது குற்றச்சாட்டுகளை மறுக்கும். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. உண்மை என்னவென்பதை கூறிவிட்டேன். தேர்தல் ஆணையத்திடம் 14 விதமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. நாம் கேள்வி கேட்கும் பட்சத்தில், `ஹேக்' செய்யவே முடியாத இயந்திரங்களை நம்முன்னர் வைப்பார்கள். ஆனால், தேர்தலில் பயன்படுத்துவதோ, ஹேக் செய்யக்கூடிய இயந்திரங்களைப் பயன்படுத்துவார்கள்.
இவ்விவரத்தை எல்லாம் மறைந்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷிடம் கூறினேன். அவரும் இதை வெளி உலகத்திற்குக் கொண்டு வர முயற்சி செய்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் வயர்களைத் தயாரிப்பது யார்? எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பினார். அவர் மோப்பம் பிடித்துவிட்டார் என்பதை உணர்ந்தவர்கள், அவரையும் கொன்றுவிட்டனர்.
அமெரிக்காவில் அடைக்கலம் கோருவதற்காக, என்னிடமுள்ள ஆதாரங்கள் அனைத்தையும் அமெரிக்க அதிகாரிகளிடத்தில் சமர்ப்பித்துள்ளேன். என்னை அணுகும் எந்தப் பத்திரிகையாளருக்கும் அந்த ஆதாரங்களைத் தரச் சம்மதிக்கிறேன்" என்றார்.
இவ்விவகாரத்தில் உடனடியாக ரியாக்ட் செய்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், ``பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், இ.சி.ஐ.எல். நிறுவனமும் இணைந்துதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உயர் தொழில்நுட்பத்தில், மிகுந்த பாதுகாப்பு யுக்திகளைப் புகுத்தி தயாரிக்கின்றன. இவற்றின் பாதுகாப்பைச் சோதிப்பதற்கு என்றே, ஒரு குழு 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் `ஹேக்' செய்ய முடியாது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் அந்நபர் மீது, சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசித்து வருகிறோம்" என்றுள்ளது.
லண்டனில் நடைபெற்ற இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கபில் சிபல் கலந்துகொண்டதை கடுமையாக விமர்சித்துள்ள பி.ஜே.பி, ``பிரதமர் மோடியை பதவி இறக்குவதற்கு பாகிஸ்தான் உதவியை காங்கிரஸ் நாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை" எனக் கடுமையாகச் சாடியுள்ளது. மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ``வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தழுவப் போகும் தோல்விக்கு இப்போதே காரணத்தைக் கண்டுபிடிக்கத் தொடங்கிவிட்டனர். அதனால்தான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் `ஹேக்' செய்யப்பட்டதாகப் பூச்சாண்டி கதையைப் பரப்புகிறார்கள். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கபில் சிபல் கலந்துகொண்டது நாட்டை இழிவுப்படுத்தத்தான்" என்று சீறியுள்ளார் முக்தார் அப்பாஸ் நக்வி.
கம்ப்யூட்டர் ஹேக்கர் சையது சுஜா வீசியுள்ள குண்டு, டெல்லி அரசியலை அதிரச் செய்துள்ளது. இதன் பாதிப்பு எங்கேயெல்லாம் ஏற்படப் போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.
Source: thanks - vikatan