அமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா!
சென்னை: பஸ் மீது கல்லெறிந்த வழக்கில் குற்றவாளி என்று தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது பதவியை ராஜினாா செய்துள்ளார்.
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார் முதல்வர். இதைத் தொடர்ந்து ரெட்டி ராஜினாமா செய்தி வெளியானது.
1998 ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய போராட்டத்தில்தான் அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், பஸ் மீது கல்லெறிந்ததாக பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
1998ல் பேருந்துகள் மீது கல்வீசியதாக தொடரப்பட்ட வழக்கு 20 வருடமாக நடந்தது. இதில் இவருக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாலகிருஷ்ண ரெட்டி 3 ஆண்டு சிறை தண்டனையும் 10,500 ரூபாய் அபராதமும் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாலகிருஷ்ண ரெட்டி மேல் முறையீடு செய்யவுள்ளதால் அதற்கு வசதியாக தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 1 மாத காலத்திற்கு தீர்ப்பு செயல்படுத்தப்பட மாட்டாது.
இதையடுத்து, சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆலோசனை செய்தார். அப்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்தார்.
இதையடுத்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் ரெட்டியின் ராஜினாமா குறித்த முறையான அறிவிப்பு வெளியானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக