“கோட்பாட்டு யுத்தத்தில் மட்டுமல்ல
தேர்தல் களத்திலும் சாதிய மதவாத சக்திகளை எதிர்ப்போம்”
தேசம் காப்போம் மாநாட்டில்
எழுச்சித்தமிழர்
தொல். திருமாவளவன் உரை
———————————-
என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளுக்கும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பணிவார்ந்த வணக்கம்.
இம்மாநாட்டில் பங்கேற்று எம்மைப் பெருமைப்படுத்தியுள்ள தோழமை கட்சிகளின் தலைவர் பெருமக்கள் யாவருக்கும் முதலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கௌதம புத்தர் காலத்தில் தொடங்கிய கோட்பாட்டு யுத்தம் இன்று விடுதலைச்சிறுத்தைகளின் காலம் வரையிலும் தொடர்கிறது. அதற்கான சாட்சியமே இந்த மாநாடு.
பழைய வரலாற்றைத் திருத்திப் புதிய வரலாறு படைக்க இருக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இம்மாநாடு, இந்திய அரசியலில் “சனாதனமா? சனநாயகமா? “ கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு மாபெரும் உரையாடலைத் தொடங்கி வைப்பதாகவும் அதனை இருதுருவ மையமாக்கி மேலும் கூர்மைப்படுத்துவதாகவும் அமையும்.
பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த தேசம் சனாதனக் கோட்பாட்டை மையமாகக் கொண்டே இயங்கி வருகிறது. அதாவது, இது ‘சனாதன இந்தியா’ வாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மனு என்பவர் வரையறுத்த ‘மனு ஸ்மிருதி’ அல்லது ‘மனு தர்மம்’ என்னும் ‘மனு சட்டமே’ அடிப்படையாய் இருந்தது. இன்று அதனை அடியோடு மாற்றிவிட்டு, முற்றிலும் புதியதொரு ‘சனநாயக இந்தியா’வைக் கட்டமைக்கும் வகையில், புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த ‘இந்திய கட்டமைப்புச் சட்டம்’ என்னும் ‘அரசமைப்புச் சட்டம்’ அடிப்படையாக உள்ளது.
மக்களை வருணம், சாதி, குலம், கோத்திரம் போன்றவற்றின் அடிப்படையில், பிறப்பை அளவுகோளாகக் கொண்டு ‘உயர்வு- தாழ்வை’க் கற்பித்து, அதனையே ஒரு சமூகக் கட்டமைப்பாக நிலைப்படுத்தியிருக்கும் ஆதிக்க சனாதனிகள், சனாதன இந்தியாவை அப்படியே கட்டிக் காப்பாற்ற வேண்டுமென துடியாய்த் துடிக்கின்றனர். அதில் சிறு சிராய்ப்பும் ஏற்பட்டுவிடாமல், பாகுபாடுகளாலான பழைமையைப் பாதுகாக்கவும் தொடர்ந்து தக்கவைக்கவும் வேண்டுமென பதையாய்ப் பதைக்கின்றனர்.ஆகவேதான் அவர்கள், புரட்சியாளர் அம்பேத்கர் வடிவமைத்த
இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பகையாகக் கருதுகின்றனர். அதனைத் தூக்கி எறிந்துவிட்டு, மனுச் சட்டத்தையே இந்தியாவின் அதிகாரபூர்வமான அரசமைப்புச் சட்டமாக அறிவித்திட பல்வேறு சதிமுயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
சட்டத் திருத்தங்கள், அரசாணைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் போன்றவற்றின் மூலமாக அரசியலமைப்புச் சட்டத்தைப் படிப்படியாக நீர்த்துப்போகச் செய்யும்வகையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். சான்றாக, அண்மையில் பிரதமர் நரேந்திர
மோடியின் தலைமையிலான ‘சனாதன வல்லரசு’ , பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டுவந்து, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான சமூகநீதியின் வழியில் அமையும் சமத்துவத்தைச் சிதைக்கும் சதித் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
முன்னேறிய சாதிகள் என்னும் சமூகப் பிரிவினருக்கு உதவுவதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கும் அதேவேளையில், சமூகநீதியின் வழியில் கட்டமைக்கப்படும் சமூக சமத்துவத்தை முற்றிலும் அழித்தொழிப்பதே அவர்களின் அடிப்படையான- முதன்மையான நோக்கமாகும். சமூகநீதியை அழிப்பதன்மூலமே சமத்துவத்தைத் தடுக்க முடியும். சமத்துவத்தைத் தடுப்பதன் மூலமே அரசமைப்புச் சட்டத்தைச் சிதைக்க முடியும். அரசமைப்புச் சட்டத்தைச் சிதைப்பதன் மூலமே சனநாயக இந்தியாவைக் கட்டமைக்கும் முற்போக்கான முயற்சியை முறியடிக்க முடியும். சனநாயக இந்தியாவைக் கட்டமைக்கும் முயற்சியை முறியடிப்பதன் மூலமே சனாதன இந்தியாவைத் தக்கவைத்து பாதுகாக்க முடியும். இதுதான் பாரதிய ஜனதாவின் தலைமையிலான பிற்போக்கு சனாதன சக்திகளின் நோக்கும் இலக்கும் ஆகும். இன்றைய சூழலில் சனாதன சக்திகளின் இத்தகைய போக்குதான், மலர்ந்து வரும் புதிய சனநாயக இந்திய தேசத்துக்கு எதிரானதொரு பேராபத்தாகும்.
ஆட்சி நிர்வாகத்தில் அங்கிங்கெனாதபடி அடிமுதல் நுனிவரையில் புரையோடி கிடக்கும் ஊழலை விடவும்; கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை விடவும்; மது உள்ளிட்ட பல்வேறு வகையிலான போதைப்பொருள்களால் பரவும் தீயக் கலாச்சாரத்தை விடவும்; ஏகாதிபத்திய ஆதிக்க வல்லரசுகளின் பொருளாதாரக் கொள்கைகள், அவற்றின் வழியாக நிகழும்
பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவல், ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டலை விடவும் இன்று இந்திய தேசத்தின் சனநாயகப் பரிணாம வளர்ச்சிக்கு மிகப்பெரும் தீங்காக விளங்குவது சனாதனமே ஆகும்.
ஆரியம், பார்ப்பனியம், சாதியம், இந்துத்துவம், வர்ணாஸ்ரமம், மனுதர்மம் என்றெல்லாம்
பல்வேறு சொல்லாடல்களால் அடையாளப்படுத்தப்படும் கருத்தியல் அல்லது கோட்பாடுதான் சனாதனம் ஆகும். பிராமணர்களைத் தவிர அனைத்து வருணங்கள் மற்றும் அனைத்துச் சாதிகளைச் சார்ந்தவர்களும் பிராமணர்களுக்குக் கீழானவர்களே என்கிற சமூக உளவியல் இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மேல்-கீழ் என்கிற சமூக உளவியல் பார்ப்பனர்களுக்கிடையிலும் ஆழ வேரோடிக் கிடக்கிறது. வருணங்களுக்கிடையில் மட்டுமின்றி, சாதிகளுக்கிடையில் மட்டுமின்றி, ஒவ்வொரு மனிதருக்கிடையிலும் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலும் இத்தகைய உயர்வு- தாழ்வு உளவியல் கெட்டித்தட்டிக் கிடக்கிறது. இத்தகு சமூக உளவியல் தான் சனாதனம் ஆகும்.
கடவுளின் பெயரால், புனிதத்தின் பெயரால், நம்பிக்கை, பாரம்பரியம் என்கிற பழமைவாதத்தின் பெயரால், ஆட்சியதிகாரப் பீடத்தில் கோலோச்சியவர்களைப் பயன்படுத்தி காலம் காலமாகக் கட்டிக்காப்பாற்றப்பட்டு வரும் இந்த சனாதனம், மீண்டும் இந்தியமண்ணில் பேராதிக்கம் செலுத்தி கொட்டமடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஆர்ஆர்எஸ்எஸின் அரசியல் முகமான பாரதிய ஜனதாவின் தலைமையில் இயங்கும்
சங்பரிவார்களின் ஆட்சிதான், சனாதனத்துக்கான பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. இந்நிலையில்,சனாதனத்தைப் பலவீனப்படுத்தி வீழ்த்தவும் சனநாயகத்தைப் பாதுகாத்து சமத்துவத்தை வென்றெடுக்கவும் இன்றைய உடனடித்தேவை இந்திய கட்டமைப்புச் சட்டமான அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு சனாதன சக்திகளை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கவேண்டும். அதற்கு தமிழ்நாடு உட்பட அகில இந்திய அளவில் மதசார்பற்ற சனநாயக சக்திகள் யாவரும் ஓரணியில் திரண்டு, வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.
அதற்கான ஒரு அரசியல் களமாகவே விடுதலைச்சிறுத்தைகளின் இந்த ‘தேசம்காப்போம் மாநாடு’ அமையும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அத்துடன், தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் திமுக தலைமையிலான தோழமைக்கட்சிகள் அல்லது கூட்டணிகட்சிகள் ஒருங்கிணைந்து, கோட்பாட்டு யுத்தத்தில் மட்டுமின்றி
தேர்தல் களத்திலும் சாதியவாத, வகுப்புவாத சனாதன சக்திகளை வீழ்த்துவோம் என்பதையும் உறுதிபடக்கூற விரும்புகிறேன். சனாதனத்தை வேரறுப்போம்; புரட்சிகர சனநாயகத்தை வென்றெடுப்போம் எனக் கூறி அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்கிறேன்.
நன்றி
வணக்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக