வெள்ளி, 8 நவம்பர், 2019

மதுரை மீனாட்சியை தரிசிப்பவர்களுக்கு லட்டு பிரசாதம்.



இன்று முதல் மதுரை மீனாட்சியை தரிசிப்பவர்களுக்கு லட்டு பிரசாதம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சார்பில், பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை, தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம், இன்று(நவ.,8) காலை துவக்கி வைத்தார்.

மதுரையில், உலக புகழ் பெற்ற, சுந்தரேசுவரர் - மீனாட்சி கோவில் உள்ளது. தினமும், ஏராளமான பக்தர்கள், இக்கோவிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இலவசமாக லட்டு பிரசாதம் வழங்குவது குறித்து, தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன்படி, நடப்பாண்டு தீபாவளி முதல், லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கட்டமைப்பு வசதிகள் முடிவடையாமல் இருந்ததால், திட்டமிட்ட படி வழங்கவில்லை.

தற்போது லட்டு தயாரிக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, கட்டமைப்பு வசதிகள் முழுமையடைந்துள்ளன. இதையடுத்து, முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம், மீனாட்சி அம்மன் கோவிலில், இலவச லட்டு பிரசாதம் வழங்குவதை, இன்று காலை துவக்கி வைத்தார். இன்று முதல், மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு வரும் பக்தர்களுக்கு, கூடல்குமாரர் சன்னிதி முன் லட்டு பிரசாதம் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக