தடையை மீறி இந்தியாவுக்குள் நுழைந்த பி.டி கத்திரி... வேடிக்கை பார்க்கிறதா மத்திய அரசு?!
இந்தியாவிற்குள் பி.டி கத்திரிக்காயைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் பன்னாட்டு நிறுவனங்களால் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டாலும், 2010-ம் ஆண்டு இந்தியாவில் பி.டி கத்திரிக்காய் பயிரிடத் தடை விதிக்கப்பட்டது. இன்று வரை அந்தத் தடை இருந்தாலும், 9 வருடங்கள் கடந்து இன்று இந்திய வயல்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது விவசாய ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரியானா மாநிலத்தின் ஃபாடேஹாபாத் மாவட்டத்தில் ஒரு விவசாயி சட்ட விரோதமாக
பி.டி கத்திரிக்காய் பயிரிட்டுத் தொடர்ச்சியாக விற்பனை செய்து வருவதையும் அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். அந்த விவசாயி பயிரிட்ட கத்திரிக்காய்களைப் பரிசோதனைக்காக ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆய்விலும் பி.டி கத்திரிக்காய் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிராகப் போராடும் குதார்தி கேட்டி அபியான் (Kudarti Kheti Abhiyan) என்ற அரியானா அமைப்பைச் சேர்ந்த ஆர்வலர் ராஜிந்தர் சவுத்ரி இது குறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது, "இந்த விவகாரம் குறித்து மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (Genetic Engineering Appraisal Committee) மற்றும் மாநில வேளாண்துறையிடம் ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மாநில அரசு உறுதி அளித்துள்ளது. இந்த பி.டி கத்திரிக்காய் ஒரு இடைத்தரகர் மூலம் அந்த விவசாயிக்கு விற்கப்பட்டுள்ளது. சில பெரிய நிறுவனங்களின் நடவடிக்கைகளால் அப்பாவி விவசாயிகள் தடை செய்யப்பட்ட இந்த கத்திரிக்காயை பயிரிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அந்த விவசாயி மரபணு மாற்று விதைகள் விற்பனை நிறுவன இடைத்தரகரிடம் ஒரு நாற்று 8 ரூபாய் என்ற விதத்தில் 3,000 நாற்றுகளை வாங்கி இரண்டு இடங்களில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டதாகத் தெரிவித்தார். அந்த விவசாயி நிலத்தில் உள்ள பயிர்கள் அழிக்கப்பட வேண்டும். இதுபோல் வேறு விவசாயிகளிடம் தடை செய்யப்பட்ட பி.டி கத்திரிக்காய்களின் நாற்று விற்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்" என்கிறார்.
இதுபற்றி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வத்திடம் பேசினோம். "2010-ம் வருடம் தடை வாங்கினோம். 9-வருடங்கள் கழித்து நிலத்தில் இருக்கிறது. இதில் இருந்து மத்திய அரசு எந்த அளவிற்கு விழிப்புடன் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இக்குழு மான்சான்டோவுக்கு ஏஜென்ட்டாகத் தான் இருக்கிறது. இப்போது குற்றம் சாட்டியிருப்பது வெறும் வாய்ச்சொல் அல்ல, ஆதாரபூர்வமான அறிக்கையால் சொல்லியிருக்கிறோம். இதற்கு மேலும் மௌனம் காப்பது தவற்றுக்குத் துணை போவதாகத் தானே அர்த்தம். இது தவிர, இதற்கு முன்னர் சோளம், சோயா போன்ற பயிர்களுக்கும் புகார் கொடுத்திருக்கிறோம். அப்போது நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது கத்திரி உள்ளே நுழைந்திருக்காது. இனி மத்திய அரசும் சுற்றுச்சூழல் அமைச்சகமும் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். முன்னர் முதல்வர்களாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மரபணு விதைகளை எதிர்த்து நின்றனர். அதனால் தமிழகம் உட்பட 14 மாநிலங்கள் பி.டி கத்தரியைத் தடை செய்தது. 2010-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்துக் கேட்பு நடத்தி தடை விதித்தார். ஆனால், இன்று பின் வாசல் வழியாகக் கள்ளத்தனமாக நுழைந்திருக்கிறார்கள். இப்போது பயன்படுத்தியிருக்கும் விதை மான்சான்டோவின் விதை தான் என்றாலும், கேள்வி எழுப்பினால் இல்லை என அந்த நிறுவனம், விலகிக் கொள்ளும். பி.டி கத்தரியைப் பரவலாக விதைக்க ஆரம்பித்து விட்டால் பாரம்பர்ய கத்திரி இனங்கள் இல்லாமல் போகும். மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதை மனிதனால் தடுக்கவா முடியும். முழுமையாகத் தடுக்க கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு இந்தியா முழுவதும் கத்திரிக்காய் உற்பத்தியை நிறுத்த வேண்டும். நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம். மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் உடனடியாக தலையிட வேண்டிய விஷயம்." என்றார்
பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து பேசும் போது, "2000-ம் ஆண்டில் பல இடங்களில் சட்ட விரோதமாகப் பயிரிடப்பட்டு வந்தது. அதைக் காரணம் காட்டித் தான், 2002-ம் ஆண்டு பருத்தி அனுமதி கொடுக்கப்பட்டது. அதேபோலத் தான் இப்போது நடத்தப் பார்க்கிறார்கள். பி.டி கத்திரி வந்து விட்டதே இனி எப்படி தடுக்க முடியும் என அனுமதி கொடுக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் தடை செய்யப்பட்ட விதைகள் 9 வருடங்களுக்குப் பின்னர், இப்போது நிலத்தில் இருக்கிறது என்றால், முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டியது, மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு தான். ஆனால், இன்று நிரூபித்து, புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது, மான்சான்டோவிற்கு ஆதரவான நிலையை அக்குழு எடுத்திருப்பதாகவே காட்டுகிறது. நேரடியாக இந்தியாவிற்குள் கொண்டு வராமல் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் அனுமதி கொடுக்கப்பட்டு இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுகிறது. இதனை கார்ப்பரேட்டுகளின் செல்லப்பிள்ளையான இப்போதைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது. இதற்கு அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. விவசாயிகள் கத்திரி விதைகள் வாங்கும் போது கம்பெனி பெயரைப் பார்த்து வாங்க வேண்டும். இந்தியாவில் ஒரு விவசாயி பஸ் ஸ்டாண்டில் இருந்து மரபணு மாற்றுக் கத்திரி நாற்றுகளை வாங்கி விதைத்து விட முடிகிறது. அனுமதி இல்லாத ஒரு பொருளை மார்க்கெட்டில் உலவ விட்டிருக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த பி.டி கத்திரி நாற்று கம்பெனியிடம் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும். சுற்றுச்சூழல் துறை, மத்திய சுகாதார அமைச்சகம், மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு ஆகிய துறைகளில் ஒன்று கூட இதுவரை வாய் திறக்கவில்லை. இது உள்ளே நுழைந்து விட்டால் அடுத்ததாக அனைத்து மரபணு மாற்று உணவுப் பொருட்கள் எல்லாமே உள்ளே நுழையும் வாய்ப்புகள் அதிகம். இதனை மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
இதுபற்றி பேசிய மரபணு மாற்று உணவு எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகை ரோகிணி பேசும் போது, "பி.டி கத்திரிக்காய்கள் சட்ட விரோதமாகப் பயிரிடப்படுவதற்கு அரசு நிறுவனங்களின் மெத்தனம் தான் காரணம். 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியை சந்தித்து பி.டி கத்திரி பற்றி எடுத்துச் சொன்னோம். நீண்ட நேர உரையாடலைக் கேட்ட பின்னர், அவர் ஏற்றுக் கொண்டு பி.டி கத்திரி எதிர்ப்போம் என அறிவித்தார். அதன் பின்னர் முதல்வராக வந்த ஜெயலலிதாவும் பி.டி கத்திரியை எதிர்த்தார். இந்தியாவில் தமிழகம் உட்பட 14 மாநிலங்கள் எதிர்த்தன. 9 வருடங்களுக்கு முன்னர் தடை வாங்கியிருந்தோம். இப்போது பின் வாசல் வழியாக பி.டி கத்திரி உள்ளே நுழைந்திருக்கிறது. இதனை உடனடியாக தடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளோம். இது ஒரு நாட்டின் உணவு சம்பந்தப்பட்ட விஷயம். இதனைத் தடுக்க வேண்டிய மத்திய அரசோ வேடிக்கை பார்க்கிறது வேதனையளிக்கிறது" என்றார்.
தடை செய்யப்பட்ட பி.டி கத்தரிக்காய் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். பி.டி கத்தரிக்காய் எங்கெல்லாம் பயிரிடப்படுகிறது என முழு வீச்சில் சோதனை நடத்திக் கண்டுபிடிக்க வேண்டும் என்று விவசாய நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல் 2017-ம் ஆண்டு மரபணு மாற்றப்பட்ட சோயா, குஜராத்தில் பயிரிடப்படுவதாக மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தெற்கு ஆசியாவிலேயே வங்கதேசத்தில் முதன்முதலாக பி.டி கத்திரி அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது தோல்வியடைந்திருக்கிறது என யு.பி.ஐ.என்.ஜி அமைப்பு பி.டி விவசாயிகளைச் சந்தித்து நடத்திய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முடிவு இனி மத்திய அரசின் கைகளில் தான் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக