பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் 4 முறை தனிப்பட்ட சந்திப்புகளுடன் 7 மணி நேரத்தை ஒன்றாகச் செலவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை வரும் ஸி ஜின்பிங் கிண்டியில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் தங்குகிறார்.
மறுநாள் 12ம் தேதி பிற்பகல் அவர் மாமல்லபுரத்திற்குச் செல்கிறார். அங்கு மோடியும் ஜின்பிங்கும் அர்ச்சுனன் தபசு, பஞ்சரதம் மற்றும் குகைக் கோயில்களைப் பார்வையிடுகின்றனர். தொடர்ந்து குகைக் கோயிலில் நடக்கும் கலாச்சார நிகழ்வுகளை பார்வையிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தையில், அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய ராணுவம் மேற்கொள்ளும் ராணுவ ஒத்திகை தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 75 நிமிடங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. பின்னர் இரு தலைவர்களும் மீண்டும் சென்னை வந்து தங்குகின்றனர்.
3ம் நாளில் மோடியும், ஸி ஜின்பிங்கும் மீண்டும் மாமல்லபுரம் செல்லும் அவர்கள் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் சுமார் 40 நிமிடங்கள் தனியாக சந்தித்துப் பேசுகின்றனர். தொடர்ந்து உயர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மதிய உணவுக்குப் பின்னர் இரு தலைவர்களும் அதே விடுதியில் மீண்டும் சந்தித்துப் பேச உள்ளனர். இந்த நிகழ்ச்சிகள் முடிவடைந்தபின் ஸி ஜின்பிங் சென்னை சென்று அங்கிருந்து பெய்ஜிங் புறப்பட்டுச் செல்கிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது டோக்லாம் பிரச்னை, காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக