திங்கள், 30 செப்டம்பர், 2019

திருப்பதி திருக்குடைகள் கவுனி தாண்டின! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


திருப்பதி திருக்குடைகள் கவுனி தாண்டின!
லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஏழுமலையானை எப்போதும் நீங்காதிருக்கும் ஆதிசேஷன் அம்சம்தான் திருக்குடைகள். பெருமாளுக்கு உகந்த அஷ்ட மங்கள பொருட்களில் ஒன்றான திருக்குடைகள், திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, ஹிந்து தர்மார்த்த சமிதியின் சார்பில் தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன் சமர்ப்பிக்கப்படுகின்றன.


திருக்குடைகள் தரிசித்தால் மங்களம் பெருகும், வறுமை நீங்கும், நோய் நொடிகள் விலகும். நாட்டில் சுபிட்சம் பெருகும், மழை பெய்யும், வியாபாரம் அபிவிருத்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆண்டுக்கான, திருப்பதி திருக்குடை ஊர்வல தொடக்க விழா சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் நேற்று காலை 10.31 மணிக்கு தொடங்கியது. விசுவ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்ரி வரவேற்றார். விசாகா ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்வரூபானந்தேந்ரா சரஸ்வதி மகா சுவாமி மற்றும் விசாகா ஸ்ரீ சாரதா பீடம் உத்தர பீடாதிபதி ஸ்வத்மனந்தேந்த்ர சரஸ்வதி சுவாமி ஆகியோர் அருளாசி வழங்கி, திருக்குடை ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.


விசுவ இந்து பரிசத் – தமிழ்நாடு நிறுவனரும், இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலருமான வேதாந்தம், இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினரும் உளுந்துார்பேட்டை எம்எல்ஏவுமான குமரகுரு, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் சிறப்பு அழைப்பாளர் சேகர்ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் தொடங்கி, என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை விழியாக திருக்குடை ஊர்வலம் சென்றது. வழிநெடுக லட்சக்கணக்கான பக்தர்கள், விரதமிருந்து, குடும்பத்துடன் தரிசித்தனர். திருக்குடைகள் மீது பூக்களை, மாலைகளை வீசி, தொட்டு வணங்கி, தங்கள் பிரார்த்தனைகளை செலுத்தினர். தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 5.45 மணிக்கு யானை கவுனியை திருக்குடைகள் தாண்டின.


திருக்குடைகள், அக்டோபர் 2ம் தேதி, மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானுார் சென்றடைகிறது. அக்டோபர் 3ம் தேதி திருமலையில் மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக