மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார்
*ராம் ஜெத்மலானிக்கு வயது 95. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. பாகிஸ்தானில் பிறந்த இவர் இந்தியா - பாக் பிரிவினையின் போது, இந்தியாவில் குடியேறினார். 17 வயதில் பாம்பே பல்கலைக்கழகத்தில் இவர் எல்எல்பி பட்டம் பெற்று வழக்கறிஞரானர். அப்போது தொடங்கிய இவரின் வழக்கறிஞர் பயணம் 2017 வரை நீடித்தது.ராம் ஜெத்மலானி மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளார். பாஜக மறைந்த தலைவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1996-2000 வரை மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்துள்ளார். அதன்பின் 2004ல் இவர் லக்னோ தொகுதியில் வாஜ்பாயை எதிர்த்து நின்று போட்டியிட்டார். ஆனால் மீண்டும் 2010ல் இவர் பாஜகவில் சேர்ந்தார். அதன்பின் ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார். ராம் ஜெத்மலானி பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவராகவும் இருந்தவர். முக்கிய வழக்குகள் பலவற்றில் இவர் ஆஜராகி வாதம் செய்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் 7 தமிழர்களுக்காக இவர் 2011ல் சென்னை ஹைகோர்ட்டில் ஆஜர் ஆனார். பாஜக மூத்த உறுப்பினர் அத்வானியின் ஹவாலா வழக்கு, 2 ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்காக ஆஜர் ஆனார்.ஜெகன் மோகன் ரெட்டி சிபிஐ வழக்கு, எடியூரப்பா பண மோசடி வழக்கு, ஆசாரம் பாபு பாலியல் குற்ற வழக்கு, லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கு, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு ஆகிய வழக்குகளில் இவர் ஆஜர் ஆகி இருக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் இவர் ஆஜர் ஆகி செய்த வாதங்கள் நாடு முழுக்க பிரபலம். இந்த நிலையில் கடந்த 2017ல் இவர் வழக்கறிஞர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதே போல் அரசியல் வாழ்க்கை, பொது வாழ்க்கை இரண்டில் இருந்தும் ஓய்வு பெற்று வீட்டில் நாட்களை கழித்துக் கொண்டார். கடந்த சில நாட்களாக இவர் உடல் நலக்குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் இன்று காலை வயோதிகம் மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக காலமானார். இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரின் உடலுக்கு இன்று முக்கிய அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக