புதன், 22 ஏப்ரல், 2020

சம்பளத்துக்கு ஆப்பு வச்சிட்டார்

*வச்சிட்டாருய்யா.. விகடன் ஓனரும் சம்பளத்துக்கு ஆப்பு வச்சிட்டார்*

கொரோனா பரவலை மக்களுக்கு நொடிக்கு நொடி அறிவித்து அலெர்ட் செய்து வரும் ஊடக நிறுவனங்கள் இப்போது நடக்கும் ஊரடங்கால் விற்பனை குறைந்திருக்கிறது. விளம்பரங்கள் வீழ்ச்சியடைந்திருக்கிறது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வேலை நீக்கம், ஊதியவெட்டு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஊடக நிறுவன உரிமையாளர்கள் அறிவிப்பது அதிகரித்து வருகிறது..

ஏற்கெனவே 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை காரணம் காட்டி இதேபோன்று ஆட்குறைப்பு என்ற பெயரால் ஏராளமானோரை வேலைநீக்கம் செய்தனர். தற்போது ஊடக நிறுவனங்கள் ஊரடங்கை காரணம் காட்டி நிறுவன மூடலாக மாற்றப் போவதாக பயமுறுத்துகின்றன. முன்னரே நம் குரூப்-பில் சொன்னது போல் , இந்தியாவின் மிகச் செழிப்பான ஊடக நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் பெருமளவில் ஊழியர்களை வேலையை விட்டு துரத்தியிருக்கிறது. கம்யூனிஸ்ட் பாணியில் சொல்வதானால் அந்நிறுவனத்தன் செல்வ செழிப்பிற்கு இந்த தொழிலாளிகளை வேலையில் வைத்திருப்பதால் அவர்கள் எதையும் இழக்க மாட்டார்கள், அந்த நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபத்தோடு ஒப்பிட்டால் ஊழியருக்கான தொகை என்பது மிகமிக குறைவாகும். இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் லாபம் சேகரிப்பதற்கும் 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களை கூட கேள்வி கேட்பாரின்றி வெளியேற்றி இருக்கிறார்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் தான் வெளியிட்டு வரும் ஞாயிறு சிறப்பு இணைப்பு இதழை (சன்டே மேகசின்) மூடிவிட்டது. அதில் பணிபுரிந்த நோனாவாலியா தமது முகநூல் பக்கத்தில், “ எனது மேலதிகாரி பூனம்சிங் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம், சன்டே மேகசின் பிரிவில் பணிபுரியும் ஒட்டுமொத்த ஊழியர்களையும் வேலையை விட்டு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். 24 வருடங்களாக நான் நேசித்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ரொம்ப கேஷூவலாக 10 முதல் 30 சதவீதம் வரை சம்பளத்தை வெட்டிய இந்தியன் எக்ஸ்பிரஸ்இந்தியன் எக்ஸ்பிரசின் சிஇஏ ஜார்ஜ் வர்கீஸ் சில நாட்களுக்கு முன்பு தனது ஊழியர்களுக்கு ஒரு குறிப்பை சுற்றுக்கு விட்டுள்ளார். அதில் “நமது விளம்பர வருமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. கிடைக்கும் எல்லா தரவுகளும் மிக மோசமான நாட்கள் இனிமேல்தான் வரப்போகின்றன. ஊழியர்கள் 10 – 30 சதவீதம் வரை சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். நிர்வாகத்தின் உயர்நிலையில் உள்ளவர்களும், ஆசிரியர்களும் சம்பளம் இல்லாமலேயே வேலை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்

பல மாநிலங்களில், நாளிதழ்கள் தங்களது பல பதிப்புகளை மூடியுள்ளன. “நாளிதழ்கள் தினசரி வருவாய் இழப்பை சந்திப்பதாக” இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி கூறியிருக்கிறது. இதிலிருந்து மீள காகித்தின் மீதான இறக்குமதி வரி 5 சதவீதத்தையும் ரத்து செய்ய வேண்டும். 2 வருடங்களுக்கு வரி விடுமுறை வேண்டும். அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 50 சதவீதம் உயர்ந்த வேண்டும். அச்சு ஊடகங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை 100 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று கோருகிறார்கள்.

இதைபற்றியெல்லாம் பேசுகிறவர்கள் ஜர்னலிஸ்ட் என்று கெத்தாய் பணி புரியும் தொழிலாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பேசுவதே கிடையாது.சம்பளம் இல்லாத விடுமுறையை திணிக்கும் தி குவிண்ட்இணைய இதழ் தி குவிண்ட் அதனுடைய ஊழியர்களில் 50 சதவீதம் பேரை சம்பளம் இல்லாத விடுப்பில் விரட்டி இருகிறது. மற்றவர்களுக்கு சம்பள குறைப்பை செய்திருக்கிறது.

காட்சி ஊடகத்திலும் கொடுமைநாடு முழுவதும் நூற்றுக்கணக்கான காட்சி ஊடக ஊழியர்கள் தங்களது வாழ்க்கையை பணையம் வைத்து கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், ஊரடங்கின் தாக்கம் குறித்தும் செய்தி சேகரிக்கிறார்கள். சென்னையிலுள்ள சத்யம் டிவி -யில் பணியாற்றும் ஊழியர்கள் 25க்கும் அதிகமானோர்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களா

இச்சூழலிலும் ஊழியர்களாக களத்தில் செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு ஊக்கம் தர வேண்டும். மாறாக, உடனடி சம்பள வெட்டும், வேலையிலிருந்து விரட்டுவதும் ஊடகத்துறையினரின் ஊக்கத்தை பாதிக்கிறது. குறிப்பாக,  தன் சொத்தை விற்று நிர்வாகத்தை நடத்தி சாதனை புரிந்த விகடன் எம் டி பாலசுப்பிரமணியன் கட்டிக் காத்த நிறுவன ஓனர் கீழ்கணும் கடிதத்தை தன் ஊழியர்களுக்கு அனுப்பி இருக்கிறார்

அக்கடிதத்தில்

அன்புள்ள விகடன் குழும பணியாளர்களே,

உலகம் இதுவரை பார்த்திராத கொடுமையான கொரோனா நோய் பரவியிருக்கும் சோதனையான இத்தகைய காலகட்டத்தில் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் பாதுகாப்பாக இருக்க, நான் பிரார்த்திக்கிறேன்.

நம்முடைய மீடியா துறைக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. என்றாலும் நம் அனைவரின் பாதுகாப்புக் கருதி, மார்ச் 22 -ம் தேதியே 'வீட்டிலிருந்து பணி' என்பதை நாம் நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டோம்.

கடந்த ஒரு மாதகாலமாக விகடனின் நலன்விரும்பிகள், விளம்பரதாரர்கள், முகவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நிர்வாகப் பணியாளர்கள், ஓவியர்கள், கட்டுரையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என அனைவருடனும் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி வருகின்றீர்கள். தனித்தனியே இருந்தாலும், பற்பல கோணங்களில் இணைந்தே சிந்தித்து, நன்கு உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள், கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் எனக் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்து வருகிறீர்கள். உங்களின் படைப்புகள், நம் வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் என பலதரப்பட்டவர்களின் பாராட்டுதல்களையும் பெற்றுவருகின்றன என்பதைப் பெருமையுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த இக்கட்டான தருணத்தில்... கடமை என்பதையும் தாண்டி, சிறப்பாகச் செயல்பட்டதன் வெற்றியே... நமக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டுகள். இதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கிடையே, விகடன் குழுமத்தின் முக்கியமான நான்கு பிரிவுகளில், மூன்று பிரிவுகள் இந்த ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதையும் நீங்கள் நன்றாகவே அறிந்திருப்பீர்கள்.

94 ஆண்டுகளாக நமது நிறுவனத்தின் இதயமாகச் செயல்பட்ட நம் இதழ்கள் கடந்த ஒரு மாதமாக வாசகர்களை நேரடியாகச் சென்றடைய முடியவில்லை. டெலிவிஷன் தொடர்கள், காலவரையின்றி நிறுத்தப்பட்டுவிட்டன. விகடனுக்குக் குறிப்பிடத்தக்க வருவாயைத் தரக்கூடிய - வாசகர்களுக்குப் பயனளிக்கக்கூடிய விகடனின் பிரத்யேக நிகழச்சிகள் மற்றும் விகடன் குழும விருதுகள் உள்ளிட்டவையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது.

சோதனையான இந்தக் காலகட்டத்தில் நம்முடைய டிஜிட்டல் பிரிவு மட்டுமே சற்று ஆறுதல் தரும்விதத்தில் நடைபோடுகிறது. டிஜிட்டல் என்பதைப் பொறுத்தவரை, இதுகாலம் வரை அதில் நாம் செய்துவந்த முதலீடுகள் தற்போது ஓரளவுக்கு வெளிச்சத்தைக் காணஆரம்பித்துள்ளன. ஆனால், இந்த டிஜிட்டல் வளர்ச்சி வரவிருக்கும் காலகட்டத்தில் பெருகினாலும், நம்முடைய ஆதார ஸ்ருதியாக இருக்கும் இதழ்கள் அனைத்தும் பழைய நிலைக்குத் திரும்பினாலும்கூட, இந்தப் புதிய உலகில் நம்முடைய அடுத்தகட்ட பாய்ச்சல்களுக்கு அவற்றால் போதுமான அளவுக்குத் தோள்கொடுக்க முடியாது என்பதே உண்மை.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நானும் உங்களுடைய துறைத் தலைவர்களும் அலுவலகச் செலவினங்களை குறைப்பதற்காகக் கடும்முயற்சிகள் செய்துவருகிறோம். கூடவே, வருவாயைப் பெருக்குவதற்கான பல்வேறு முயற்சிகளையும் புதுப்புது யுக்திகளையும் ஆலோசித்துச் செயல்படுத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.

தற்போதைய சூழலிலிருந்து நாம் மீள்வதற்கு செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்பதுதான் நம் கண்முன்னே தெரியும் உடனடி சர்வரோகநிவராணி. இதற்காக நம்முடைய பல்வேறு துறைகளின் தலைவர்கள் (Leaders), தங்களுடைய சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர். இது, மிகவும் ஆக்கப்பூர்வமான ஒரு முடிவு.

இதைப் பெருமையுடன் நோக்கும் அதே தருணம், அனைத்துத் துறை தலைவர்களுடனும் ஆலோசித்து, கனத்த இதயத்துடன் மற்றுமொரு முடிவையும் எடுத்துள்ளோம். அதாவது, பணியாளர்கள் ஒவ்வொருவரின் மாதாந்திரச் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்பதுதான் அந்த முடிவு. இந்த 2020-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள மூன்றுமாத காலத்துக்கு இந்தச் சம்பள ஒத்திவைப்பு முதற்கட்டமாக நடைமுறையில் இருக்கும். நாட்டின் பொருளாதாரம் மற்றும் நம் அலுவலகத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கனக்கில் கொண்டு ஜூலை 2020-.ல் சம்பள ஒத்திவைப்பு மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதனடிப்படையில் சம்பள ஒத்திவைப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.

சம்பள ஒத்திவைப்பு என்பது, நிறுவனம் லாபத்துக்குத் திரும்பி, பழையபடி பணவரத்து அதிகரித்த பின் வாபஸ் பெறப்படக்கூடிய வகையிலான ஒரு திட்டமே! இத்தகைய முயற்சிதான், எந்தவொரு நிறுவனத்துக்கும் இதுபோன்ற சூழல்களில் உடனடியாகக் கைகொடுக்கக்கூடிய ஒரு யுக்தி. நம்முடைய அலுவலகத் துறைத் தலைவர்கள், நிறுவனத்தின் நிதிநிலையை நன்கு அறிந்தவர்கள். சம்பள ஒத்திவைப்பு எந்தமாதிரியான சூழலில் மறுஆய்வு செய்யப்படும் என்பதையும் அவர்கள் நன்றாக அறிந்தவர்களே. வெகுவிரைவில் சம்பள ஒத்திவைப்பு திரும்பப் பெறப்படும் வகையில் நிறுவனத்தின் நிதிநிலையை உயர்த்த அனைவரும் பாடுபடுவோம்.

நிதி பாதுகாப்பு என்பது ஒவ்வொரு குடும்பத்தையும் திறம்பட நடத்துவதற்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு குடும்பத் தலைவனாக நானும் நன்கு அறிவேன். நாம் அனைவருமே எதிர்பாராத, சிக்கலான ஒரு காலகட்டத்தைக் கடக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். செலவினங்களைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மட்டுமே இதற்கு உடனடித் தீர்வு என்பதைத்தான் அனைவருமே நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தக் கடுமையான சூழல் மிகவிரைவில் மறைந்து புதியஉலகம் தோன்றும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அத்தகைய புதியஉலகுக்கு கட்டியங்கூறுவதுபோல நம்முன்னே புதுப்புது யதார்த்தங்கள் இப்போதே வரிசைகட்ட ஆரம்பித்துள்ளன. அவற்றையெல்லாம் எதிர்கொள்ள முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையுடன் செயல்பட தொடங்குவோம், வளமான புதிய உலகத்தில் தடங்கல்கள் இன்றி நாம் பயணிப்போம். நம்முடைய வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் தேவையறிந்து புத்தாக்கங்களுடன் கடுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் செயலாற்றி, புதிய உலகத்தின் சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு சாதிப்போம்.

'வலிமையானவர்கள், புத்திசாலித்தனமானவர்கள் என்பதால் மட்டும்  இவ்வுலகில் பிழைத்திருக்க முடியாது.

மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதாலும் மட்டும்தான் எப்போதுமே பிழைத்திருக்க முடியும்'

என்று சார்லஸ் டார்வின் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த உலகம் நேரடியாக உணர்ந்து கொண்டிருக்கும் காலகட்டமிது

நாமும் மாற்றங்களுக்கு உட்படுவோம்... வெற்றிபெறுவோம். நாம் எதிர்பார்ப்பதைவிட முன்கூட்டியே வெற்றியைக் கொண்டாடும் நிலையை நோக்கி முன்னேறுவோம்.

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்...வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். தேவைப்படும் சமயத்தில் மட்டும் தக்க பாதுகாப்புக் கவசங்களுடன் வெளியில் நடமாடுங்கள்.

கொரோனா பரவலை தடுப்பதற்காகத்.  தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் போற்றுங்கள்!

நன்றி

அன்புடன்

பா.சீனிவாசன்.
இயக்குநர்
விகடன் மீடியா சர்வீசஸ் (பி) லிமிடெட்

அப்படீன்னு சொல்லி இருக்கார்

இத்தனைக்கும் இன்றைய ஊடக முதலாளிகளுக்கு (மட்டும்) நெருக்கமான பிரதமர்மோடி நிர்வாகங்கள் ஊரடங்கு நேரத்தில் சம்பளத்தை குறைக்க வேண்டாம், வேலையை விட்டு நீக்க வேண்டாம் என்றெல்லாம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை கூட சட்டை செய்யமல் அதிகரிக்கும் இந்த அடாவடி போக்குக்கு தொடர்ந்து கமா விழுந்தபடி தொடர்வதை வேதனையுடன் பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் போலிருக்கிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக