டி.என்.பி.எல். கிரிக்கெட்: இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!!
August 16,2019
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் கோபிநாத் ஆகியோர் களமிறங்கினர். இதில் கோபிநாத் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரைத்தொடர்ந்து கங்கா ஸ்ரீதர் ராஜூ 4 ரன்னிலும், விஜய் சங்கர் 1 ரன்னிலும் கேட்ச் ஆகினர். அதற்கு பின் கவுசிக் காந்தி 22 ரன்னிலும், சுஷில் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சசிதேவ் மற்றும் முருகன் அஸ்வின் அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். இதில் பொறுப்பாக ஆடிய சசிதேவ் 44 ரன்களிலும், அடுத்து வந்த ஹரிஷ்குமார் 1 ரன்னிலும், சித்தார்த் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. கடைசியில் முருகன் அஸ்வின் 28 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் ஜெ.கவுசிக் மற்றும் அபினவ் 2 விக்கெட்டுகளும், ரோகித் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. பெரியசாமி பந்து வீச்சில், ஜெகதீசன் மற்றும் சதுர்வே டக் அவுட்டாகி வெளியேறினர். அதற்கு பின் ஹரி நிஷாந் 4 ரன்னில் கேட்ச் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த சுமந்த் ஜெயின் மற்றும் அபினவ் அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். இதில் அபினவ் 21 ரன்னிலும், அடுத்து வந்த விவேக் 23 ரன்னிலும் கேட்ச் ஆகினர்.
அதற்கு பின், பொறுப்பாக ஆடிய சுமந்த் ஜெயின் 46 ரன்களிலும், முகமது 15 ரன்னிலும், ரோகி 2 ரன்னிலும், ஜெ.கவுசிக் ரன் எதுவும் எடுக்காமலும், ஆட்டமிழந்தனர்.
இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசியில் பிரணேஷ் மற்றும் சிலம்பரசன் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய பெரியசாமி 5 விக்கெட்டுகளை சாய்தார். மேலும் அலெக்சாண்டர் 2 விக்கெட்டுகளும், ஹரிஷ்குமார் மற்றும் விஜய் சங்கர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக