தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் காலமானார்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்
August 16,2019
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழக கிரிக்கெட் வீரருமான விபி சந்திரசேகர் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 15) காலமானார். முன்னதாக அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டது.
57 வயதாகும் விபி சந்திரசேகருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். தமிழக கிரிக்கெட் வீரரான விபி சந்திரசேகர், இந்திய அணிக்காக 1988 முதல் 1990வரையிலான காலகட்டத்தில் விளையாடி இருக்கிறார்.
இன்னும் ஆறு நாட்களில் தன் 58வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். அவர் இந்திய அணிக்கு ஏழு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி 88 ரன்கள் எடுத்துள்ளார்.
எனினும், தமிழக அணிக்காக பெரிய அளவில் ரன் குவித்துள்ளார். 81 முதல் தர போட்டிகளில் 4,999 ரன்கள் குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 237 ஆகும். ரஞ்சி தொடரில் 56 பந்துகளில் சதம் அடித்து, விரைவாக சதம் அடித்தவர் என்ற சாதனையை நீண்ட நாள் தன் வசமாக வைத்திருந்தார்.
தன் ஓய்வுக்குப் பின் கிரிக்கெட் வர்ணனையாளர், பயிற்சியாளர் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருந்தார். தமிழக ரஞ்சி அணிக்கும் சில காலம் பயிற்சியாளராக இருந்தார். அதன் பின் இந்திய அணி தேர்வுக் குழுவிலும் இடம் பெற்று இருந்தார்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு முதல் மூன்று வருடங்கள் மானேஜராக பணியாற்றினார். டிஎன்பிஎல் தொடரில் விபி காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளரும் இவரே. தனி மனிதராக ஒரு அணியை வாங்கி நடத்துவது அத்தனை சுலபமல்ல என்றாலும், கிரிக்கெட் மீது கொண்ட வேட்கை காரணமாக அதை செய்து வந்தார் சந்திரசேகர்.
சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் பிற கிரிக்கெட் வீரர்கள் விபி சந்திரசேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக