தேசம் காப்போம் மாநாடு
ஏன்? எதற்கு?
#சனாதனமா? #சனநாயகமா?
#சனாதனம் என்றால் என்ன?
சனாதனம் என்பது பழமைவாதத்தைக் குறிக்கும். ஆனால் பழமைவாதம் என்பது காலத்தால் பழமையானது என்று மட்டுமே பொருளாகாது. மாறாக, தற்போதைய காலச் சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத, புதிய மாற்றங்களைத் துளியும் ஏற்காத, ஒரு அடிப்படைவாத கருத்தியலைக் குறிக்கும்.
இந்தச் சமூகக் கட்டமைப்பில், இன்றைக்கு பெரும்பான்மை என்னும் எண்ணிக்கை வலிமையைப் பெற்றதாகவும் காலத்தால் மிகவும் பழமையானதாகவும் ஐதீகம், பாரம்பரியம், நம்பிக்கைவாதம் என்னும் பெயரில் ஆதிக்கம் செலுத்தக் கூடியதாகவும் விளங்குவது இந்து மதமே ஆகும்.
இந்து மதம் என கடந்த சில நூற்றாண்டுகளாக அறியப்படுகிற இவ்வமைப்பானது, இஸ்லாம் கிறித்துவம் அல்லாத பல்வேறு இந்திய மதங்கள் அல்லது சமயங்கள், சிறிய சிறிய கலாச்சாரக் குழுக்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கலவையே ஆகும். குறிப்பாக சைவம், வைணவம், போன்ற மதங்கள் ஆதிகாலத்தில் ஒரே அமைப்பாக அல்லது இந்து மதமாக இருக்கவில்லை. தனித்தனி மதங்களாகவே இயங்கி வந்தன.
அதாவது சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் போன்ற பல்வேறு கலாச்சாரக் குழுக்களாக அல்லது மதங்களாக இயங்கி வந்தன. இத்தகைய அமைப்புகளின் கூட்டமைப்பாகத்தான் இன்று இந்து மதம் என்கிற ஒரு அமைப்பு உருப்பெற்று புதிய பரிமாணங்களைக் கொண்ட பேரமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
ரிக், யஜீர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வகை வேதங்களையும் மனுஸ்மிருதி என்கிற வர்ணாஸ்ரமக் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கியதே வைதீக மதமாகும். இது ஒரு குறிப்பிட்ட வர்ணப் பிரிவினருக்கு மட்டுமே உரியதாகும். அதாவது, பார்ப்பனர்கள் என்னும் சமூகப் பிரிவினருக்கும் மட்டுமே உரிய மதமாக இது இயங்கி வந்தது என அறிய முடிகிறது.
வேதங்கள் மற்றும் மனுஸ்மிருதி கோட்பாடு ஆகியவற்றின் தாக்குதலுக்குள்ளான பல்வேறு கலாச்சார அமைப்புகள், சைவம் மற்றும் வைணவம் உள்ளிட்ட பெருமத அமைப்புகள் போன்ற யாவும் காலப்போக்கில் ஒன்றுக்குள் ஒன்று கரைந்து இன்று இந்து மதம் என்கிற ஒரு புது வடிவத்தைப் பெற்று இயங்குகிறது. எனினும் இதற்கான கோட்பாடுகள் வேத மதங்களின் அடிப்படைக் கருத்தியலே ஆகும். இத்தகைய வைதீகப் பழமைவாத அடிப்படைவாதமே சனாதனம் என்பதாகும்.
பிராமணர், ஷத்திரியர், வைசியர், மற்றும் சூத்திரர் என்கிற நான்கு வர்ண கோட்பாடுகளும் அவற்றில் நிலவும் சாதிப் பிரிவுகளும் வருணம் மற்றும் சாதி ஆகியவற்றின் அடிப்படையிலான உயர்வு - தாழ்வு என்கிற பாகுபாடுகளும் தான் சனாதனம் ஆகும்!
தொட்டால் தீட்டு, நெருங்கினால் தீட்டு, கண்டாலே தீட்டு என்கிற சமூகக் கொடுமைகளை காலங்காலமாய் நடைமுறைப்படுத்திய அவலங்கள் தான் சனாதனம்!
ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனியான வாழிடங்கள், தனித் தனியான தொழில்கள், தனித் தனியான சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள், தனித் தனியான திருமண உறவுகள் மற்றும் ஈமச்சடங்குகள் உள்ளிட்ட கலாச்சார நடைமுறைகள், போன்றவற்றை நிலைப்படுத்தி தக்கவைத்துக் கொண்டிருப்பது தான் சனாதனம்!
வருண அடிப்படையில், சாதி அடிப்படையில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த குலத் தொழில்களை மீறக்கூடாது என்பதை வற்புறுத்தும், மீறினால் தண்டிப்பதும் தான் சனாதனம்!
நான்கு வருணங்களைத் தாண்டியுள்ள சமூகப் பிரவினரிடமிருந்து, அதாவது அந்த வருணங்களுக்கு உட்படாத பூர்வீகக் குடிமக்களிடமிருந்து, நிலம், கல்வி, மற்றும் அதிகாரம் போன்றவற்றைப் பறித்து அல்லது மறுத்து அவர்களைத் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்குவதும் தான் சனாதனம்!
குழந்தை திருமணத்தை நியாயப்படுத்துவதும், விதவை மறுமணத்தை தடுப்பதும், கணவன் இறந்ததும் மனைவியை உடன்கட்டை ஏற்றிப் படுகொலை செய்வது போன்ற நடவடிக்கைகளும் தான் சனாதனம்!
மாதவிடாய் காலத்திலும், கர்ப்பக் காலத்திலும் பெண்களை ஒதுக்கி வைத்து ஆணாதிக்கப் போக்குகளை நிலைப்படுத்துவதும், பெண்களைத் தாழ்மைப் படுத்துவதும் தான் சனாதனம்!
விரும்பிய மதத்தைத் தழுவுவதையோ, விரும்பியக் கடவுளை வழிபடுவதையோ அனுமதிக்காமல் தடுப்பதும், மீறினால் மதம் மாறியவர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவதும் தான் சனாதனம்! அத்துடன், இந்து மதத்துக்கு அல்லது தாய் மதத்துக்குத் திரும்புங்கள் என்று அச்சுறுத்துவதும் கும்பலாய்க் கூடிப் படுகொலைகள் செய்வதும் தான் சனாதனம்!
பசுமாட்டின் மீதும் புனிதம் கற்பித்து, பசுக்கறி, மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்று வீட்டுக்குள் புகுந்து அடித்துக் கொலை செய்வதும், மாட்டு வணிகத்தில் ஈடுபடுவோரைக் கொடூரமாகத் தாக்குவதும் தான் சனாதனம்!
லவ் ஜிஹாத், நாடகக் காதல் என்கிற பெயரால், காதல் திருமணங்களுக்கு எதிராக, வறட்டு கௌரவத்தால் பெற்றப் பிள்ளைகளையே காட்டுமிராண்டித் தனமாக ஆவணக் கொலைகள் செய்வதும் தான் சனாதனம்!
முஸ்லீம், கிறித்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை விதைப்பதும் அரசியல் ஆதாயம் கருதி வெறுப்பு அரசியலைப் பரப்புவதும் தான் சனாதனம்!
இந்து - முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தியதற்காக, இந்து மதத்தின் அதிதீவிர பற்றாளரான காந்தியடிகளையே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்ததும் தான் சனாதனம்!
ராமர் கோயிலை கட்டுவோம் என்னும் பெயரில் 400 ஆண்டுகால பழமை வாய்ந்த பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியது தான் சனாதனம்!
இந்துக்களுக்காக இருந்தாலும் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் கல்புர்க்கி, கௌரிலங்கேஷ் ஆகிய சனநாயக சக்திகளை சுட்டுப் படுகொலை செய்ததும் தான் சனாதனம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர், தோழர் ரவிக்குமார் உட்பட இன்னும் 34 பேரை இந்திய அளவில் படுகொலை செய்யப்போவதாகப் பட்டியல் வைத்திருப்பது தான் சனாதனம்!
பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அகண்ட பாரதம் என்கிற இந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுத்துவதும் தான் சனாதனம்!
ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்கிற பெயரில் பன்மைத்துவத்தைச் சிதைக்கும் போக்குகளும் இவற்றுக்கு இடம் கொடுக்காத இன்றைய அரசியலைப்புச் சட்டத்தை அடியோடு மாற்றிவிட்டு மீண்டும் மனுஸ்மிருதியையே அரசியலமைப்புச் சட்டமாக்க வேண்டுமென்று துடிப்பதும் தான் சனாதனம்!
இத்தகைய சனாதனம் மிகவும் கொடிய பயங்கரவாத கருத்தியலாகும். இது இந்திய தேசத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். சனாதனப் பயங்கரவாதம் என்னும் இக்கருத்தியல் மென்மேலும் வலிமை பெற்றால், இங்கே சனநாயகத்திற்கு பாதுகாப்பு இருக்காது. புரட்சியாளர் அம்பேத்கர் வரையறுத்து வழங்கியுள்ள அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பாதுகாப்பு இருக்காது. ஒட்டுமொத்தத்தில் இந்திய தேசத்திற்கே பாதுகாப்பு இருக்காது.
எனவே, இத்தகைய சனாதன பயங்கரவாத கருத்தியலிலிருந்தும் அதனைப் பரப்பி ஆதிக்கம் செலுத்திவரும் சனாதனிகளிடமிருந்தும் இத்தேசத்தைப் பாதுகாக்க வேண்டியது அனைத்துச் சனநாயகச் சக்திகளின் தவிர்க்க முடியாத கடமையாகும். இத்தகைய பொறுப்புணர்விலிருந்தே அனைத்து முற்போக்கு சனநாயக சக்திகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 'தேசம் காப்போம்' என்னும் இந்த அறைகூவலை விடுக்கிறது.
சனாதனமா? சனநாயகமா? என்னும் இந்த அறப்போராட்டத்தில் சனநாயகமே வெல்லும் என்கிற வகையில், நாடு தழுவிய அளிவில் மதசார்பற்ற சனநாயக சக்திகளை அரசியல் களத்தில் ஒருங்கிணைப்பதற்காகவே இம்மாநாடு!
சனாதனத்தை வேரறுப்போம்! - புரட்சிகர சனநாயகத்தை வென்றெடுப்போம்!
- #முனைவர்_தொல்_திருமாவளவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக