வியாழன், 8 நவம்பர், 2018

தியேட்டருக்கே போகவேண்டாம்... ஆத்திரத்தில் பாக்கியராஜ் வெளியிட்ட 'சர்கார்' படத்தின் முழுக்கதை


*தியேட்டருக்கே போகவேண்டாம்... ஆத்திரத்தில் பாக்கியராஜ் வெளியிட்ட 'சர்கார்' படத்தின் முழுக்கதை*

_நேற்று முதல் அனைத்து மீடியா நபர்களையும் அழைத்து ஏ.ஆர்.முருகதாஸ் தன் தரப்பு நியாயத்தைச் சொல்கிறேன் என்கிற பெயரில் இயக்குநர் கே. பாக்கியராஜை கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார். பதிலுக்கு பாக்கியராஜ் சும்மா இருப்பாரா? அவர் பார்க்காத திரைக்கதையா?? என்ன நடந்துச்சுன்னா... என்று துவங்கி சந்தடி சாக்கில் 'சர்கார்' படத்தின் முழுக்கதையையும் வெளியிட்டுவிட்டார்._

அவர் வெளியிட்டிருக்கும் 'சர்கார்' கதை இதுதான்.

விஜய் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர். தமிழர். ஒரு பெரிய மல்டி நேஷனல் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருப்பவர். அப்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வருகிறார் விஜய்.
ஆர்வத்துடன் ஓட்டுப் போட வந்த விஜய்க்கு பெரும் ஏமாற்றம். கையில் அடையாள அட்டை வைத்திருந்தும் அவருடைய ஓட்டை அவருக்கு முன்பாகவே யாரோ ஒரு இந்தியனோ, தமிழனோ போட்டுவிட்டு போய்விட்டான். இதனால் கோபப்படுகிறார் விஜய். அதிகாரிகளிடம் சண்டையிடுகிறார். ஆனாலும் ஓட்டளிக்க முடியவில்லை.

இதனால் கோபமடையும் இவர் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். போராடுகிறார். அந்தத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இடையில் அத்தேர்தல் ரத்தானதால் அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகளின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறார் விஜய்.

"தேர்தலில் நிற்பதும், பிரச்சாரம் செய்வதும், செலவு செய்வதும் எத்தனை பெரிய கஷ்டம் தெரியுமா. இப்போ போட்ட காசெல்லாம் போச்சு.. யார் தருவா.. உனக்கு அரசியலை பத்தி என்ன தெரியும்..? என்று அவர்களெல்லாம் விஜய்யின் தன்மானத்தைச் சீண்டிவிட.. இப்போது விஜய் அதே தொகுதியில் துணிச்சலாக சுயேட்சையாக நிற்க முடிவெடுக்கிறார். இதுதான் இடைவேளை போர்ஷன் என்கிறார்கள்.

இதற்குப் பின் அதே தொகுதியில் தேர்தல் பிரச்சாரம். விஜய்யைத் தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்கும் சூழ்ச்சிகள். எதிர்ப்புகள்.. அடிதடி. கலாட்டா.. இது எல்லாவற்றையும் முறியடித்துவிட்டு களத்தில் நின்று வெற்றியும் பெற்று விடுகிறார் விஜய்.

அதிசயத்திலும் அதிசயமாக தமிழக சட்டமன்றத்தில் அப்போது தொங்கு சட்டசபை உருவாகிவிடுகிறது. ஒரேயொரு உறுப்பினர் ஆதரவு இருந்தால்தான் ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலைமை. இப்போது அந்த ஒரேயொரு சுயேட்சை உறுப்பினர் சாட்சாத் நம்ம விஜய்தான்.

விஜய்யிடம் இரு தரப்பினரும் ஆதரவு கேட்கிறார்கள். எப்படியாவது நம்ம கட்சி ஆட்சியில் இருந்தால் போதும் என்று நினைக்கும் இரு கட்சியினருமே விஜய்யையே முதல்வராக்கவும் சம்மதம் கொடுக்கிறார்கள். "விஜய் முதல்வரானால் போதும். நாங்கள் அவருக்குக் கீழ் அமைச்சர்களாக இருந்து கொள்கிறோம்." என்று இரு கட்சிகளின் தலைவர்களும் சொல்லிவிடுகிறார்கள்.

ஆனால் விஜய் கடைசி டிவிஸ்ட்டாக "நான் மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு நினைச்சுத்தான் இந்தத் தேர்தலில் நின்றேன். முதலமைச்சராகணும் என்று நினைக்கவில்லை.

 இப்போது முதல்வராக ஆனேன் என்றால் என்னால் உங்களை வைத்துக் கொண்டு நல்லது செய்ய முடியாது. அதனால் நான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன். அப்போதுதான் இந்த ஆட்சியின் குற்றம், குறைகளைச் சொல்லி திருத்த முடியும். ஆகவே, நல்லதொரு எதிர்க்கட்சி உறுப்பினராக எனது தொகுதி மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன்." என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.

நன்றி.சுபம்.
Dailyhunt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக