ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட் : போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்...
*சென்னை:-* போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலைநிறுத்தத்தை திரும்ப பெறுமாறு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பையடுத்து போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் இன்றை முடிவுக்கு வந்துள்ளது. பொங்கல், வயதானவர்கள், மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு பணிக்கு திரும்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த 8 நாட்களாக போராட்டத்தால் தமிழகம் ஸ்தம்பித்தது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வு விசாரித்தது.
*பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார்*
தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சு நடத்த தயார் என்று நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்தது. ஆனால் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க முடியாது என போக்குவரத்து துறை செயலாளர் நீதிமன்றத்தில் கூறினார். 0.13 காரணி ஊதிய உயர்வு வித்தியாசம் தான் பிரச்சனையாக உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் மீதான குற்ற வழக்குகளை வாபஸ் பெற அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. வேலைநிறுத்தம் செய்த நாட்களுக்கு சம்பளம் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இந்த பதிலை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுப்பு தெரிவித்தனர். அரசு தொழிற்சங்கங்களும் விட்டுகொடுத்து போகுமாறு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.
*அரசு தரப்பு*
2.44 ஊதிய மடங்கை 2.57-ஆக உயர்த்துவது குறித்து மத்தியஸ்தர் முடிவு செய்யட்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 2.57 என முடிவு செய்தால் 2.44 மடங்கு உயர்வு தன்னிச்சையாக காலாவதியாகிவிடும். மேலும் பேச்சுவார்த்தை நடத்தும் தேதியை மத்தியஸ்தரே முடிவு செய்வார் எனவும் அரசு தரப்பில் வாதிட்டனர். அதனால் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டியதில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
*தொழிற்சங்கம் கோரிக்கை*
வேலைநிறுத்த நாட்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கம் தரப்பு கோரிக்கை வைத்தது. குற்ற வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 0.13 காரணி ஊதிய உயர்வுதான் பிரச்சனையாக உள்ளது, இது தொடர்பாக நடுவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
*உயர்நீதிமன்றம் திட்டவட்டம்*
நீதிமன்றம் மக்கள் பாதிப்பை மட்டமே முதன்மையாக எடுத்துக்கொள்ள முடியும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். ஊழியர்கள் நலனுக்காக மத்தியஸ்கரை நியமிக்க அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. பொது நலனை பார்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
*தொழிற்சங்கத்துக்கு நீதிமன்றம் கேள்வி*
ஒட்டு மொத்த மக்கள் நலனா? போக்குவரத்து ஊழியர் நலனா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இடைக்காலமாக ஏற்றுக்கொண்டு சமரச பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளனர்.
*மத்தியஸ்தர் நியமனம்*
இதற்கிடையே ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச ஓய்வு பெற்ற நீதிபதி இ.பத்மநாபனை மத்தியஸ்தராக உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. பொதுமக்கள் நலன்கருதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. போக்குவரத்து கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தம் குறித்து மத்தியஸ்தர் விசாரிப்பார் என நீதிமன்றம் கூறியுள்ளது. போக்குவரத்து தொழிற்சங்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 0.13 ஊதிய வித்தியாசம் குறித்து மத்தியஸ்தர் பேச்சுவார்த்தைக்கு நடத்துவார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மத்தியஸ்தர் நியமனத்தை அடுத்து 8-நாட்கள் நடந்து வந்த போராட்டம் இன்றே முடிவுக்கு வருகிறது. இதையடுத்து பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக