150 தொகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு :
உளவுத்துறை அறிக்கை: ஆளும் மேலிடம் அதிர்ச்சி
நடிகர் ரஜினி, அரசியல் கட்சி துவக்குவதற்கு முன்னரே, அவருக்கு, 150 தொகுதிகளில் கணிசமான செல்வாக்கு உள்ளதாக, உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, ரஜினியை, அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்து, நெருக்கடி கொடுக்க, அமைச்சர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும், அ.தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
சமீபத்தில், சென்னை, மதுரவாயலில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்த, எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழாவில், ரஜினி பங்கேற்றார், அப்போது அவர், 'எம்.ஜி.ஆர்., கொடுத்த நல்லாட்சியை, நானும் கொடுப்பேன்' என, பேசியதன் வாயிலாக, அ.தி.மு.க., தொண்டர்களை கவர்ந்தார். கடந்த, 9ம் தேதி, சென்னையில் நடந்த, 'காலா' பட பாடல்கள் வெளியீட்டு விழாவில், 'சிவாஜி திரைப்படத்தின் வெற்றி விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன்னை புகழ்ந்து பேசினார்' என, கூறியதோடு, அவரது குரலை மீண்டும் கேட்க, ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதன் வாயிலாக, தனக்கு எதிரி,கருணாநிதி அல்ல என்பதை, தி.மு.க.,வினருக்கு தெரிவித்திருக்கிறார். தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையை ஏற்க விரும்பாதவர்கள், தன் பக்கம் வர வேண்டும் என்றும் விரும்புகிறார்.
தமிழக அரசியலில், ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத வெற்றிடத்தை, தன்னால் நிரப்ப முடியும் என, நம்புகிறார். அமெரிக்காவுக்கு ரஜினி சென்றிருந்த நேரத்தில், '234 சட்டசபை தொகுதிகளிலும், அவருக்கு செல்வாக்கு எப்படி உள்ளது' என்ற, 'சர்வே' உளவுத்துறை தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், 150 தொகுதிகளில், ரஜினிக்கு கணிசமான ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, தலித் சமுதாய ஓட்டுகள், 15 சதவீதம்; மொழி வாரியாக உள்ள சிறுபான்மையினர் ஓட்டுக்கள், 8 சதவீதம்; மற்ற சமுதாய ஓட்டுகள், 15 சதவீதம் அவருக்கு கிடைக்குமாம். அதாவது, 35 முதல், 40 சதவீத ஓட்டுக்கள், ரஜினி கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என, சர்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அதிர்ச்சி அடைந்த ஆளுங்கட்சி மேலிடம், ரஜினியை அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்து, அவருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என, அமைச்சர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு, 'ரஜினி ஆட்சியை பிடிக்க முடியாது, காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம்' என, கிண்டலாக பேசி, ஒரு சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். அதேபோல், அமைச்சர் ஜெயகுமார், 'நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் ரஜினி; காணாமல் போய் விடுவார்' என்றார். 'டிவி' விவாதங்களில் பேசுகிற ஆளுங்கட்சி நிர்வாகிகளும், ரஜினியை கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளனர்.இவ்வாறு ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக