மதுரை பேந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது!!!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்-சங்கர் சிமெண்ட் சார்பில் டிஎன்பிஎல் லீக் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி லீக் துவக்க சுற்று ஆட்டங்கள் சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கலில் தொடங்கி நடைபெற்று வந்தன. இந் நிலையில் 31 ஆட்டங்கள் முடிந்து புள்ளிகள் அடிப்படையில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற மதுரை பேந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திண்டுக்கல் அணி தரப்பில் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
துவக்கமே சரிவு: ஹரி நிஷாந்த் 1, பாலச்சந்தர் அனிருத் 4, சதுர்வேதி 9, வருண் தோடாத்ரி 0, மோகன் அபிநவ் 1, விவேக் 13 என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 7.4ஆவது ஓவரின் போது 6 விக்கெட் இழப்புக்கு திண்டுக்கல் அணி 42 ரன்களுடன் தள்ளாடிக் கொண்டிருந்தது.
கேப்டன் ஜெகதீசன் மட்டுமே நிலைத்து ஆடினார். மற்ற வீரர்கள் அவருக்கு துணை நிற்கவில்லை. ராமலிங்கம் ரோஹித் 15 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.
ஜெகதீசன் 51: 1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 44 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ஜெகதீசன் ஆட்டமிழந்தார். இறுதியில் மொகமது 17, சிலம்பரசன் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து திண்டுக்கல் அணி 117 ரன்களையே எடுத்தது.
மதுரை தரப்பில் அபிஷேக் தன்வர் 4-30, லோகேஷ் ராஜ் 3-31, வருண் சக்கரவர்த்தி 2-9 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
118 ரன்கள் இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் அணி களமிறங்கியது.
ஆரம்பமே அதிர்ச்சி: மதுரை அணி தரப்பில் அருண்கார்த்திக், தலைவன் சற்குணம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். எனினும் அதற்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. திண்டுக்கல் அணியின் சிலம்பரசன் அபாரமாக பந்துவீசி தொடர்ந்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். தலைவன் சற்குணம், துஷார் ரஹேஜா, ரோஹித் ஆகியோர் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர். அப்போது முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டை இழந்து 2 ரன்களுடன் மதுரை தள்ளாடியது.
பின்னர் சிறப்பாக ஆடி தலா 4 சிக்ஸர், பவுண்டரியுடன் 50 பந்துகளில் 75 ரன்களை குவித்த அருண் கார்த்திக், 49 பந்துகளில் 38 ரன்களை குவித்த ஷிஜித் சந்திரன் ஆகியோர் மதுரை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். 17.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து மதுரை அணி 119 ரன்களுடன் வெற்றி பெற்றது.
திண்டுக்கல் தரப்பில் சிலம்பரசன் 3-23 விக்கெட்டை வீழ்த்தினார். அருண் கார்த்திக் போட்டி நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதன்முறையாக மதுரை பேந்தர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக