ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

ஏன்பௌத்தம்தழுவாமல்...இஸ்லாம்தழுவினர்? இதுவேஆய்வு! முனைவர் திருமா விசிக தலைவர்


ஏன்பௌத்தம்தழுவாமல்...இஸ்லாம்தழுவினர்? இதுவேஆய்வு!
முனைவர் திருமா விசிக தலைவர்

பரபரப்பான தமிழக அரசியல் பணிகளுக்கிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இது ஒன்றும் படிக்காமலோ, அல்லது சிபாரிசின் அடிப்படையிலோ, அல்லது செல்வாக்கினை பயன்படுத்தியோ வாங்கிக் கொண்ட கெளரவ பட்டம் அல்ல. பிஎச்டி என்னும் ஆராய்ச்சி மேற்கொண்டு களப்பணி ஆற்றி பெற்ற டாக்டர் பட்டம் ஆகும். அவர் எடுத்துக் கொண்ட தலைப்பின் பெயர் மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் ஒரு ஆய்வு'என்பதுதான். மீனாட்சிபுரம் தமிழக மக்களால் என்றென்றும் மறக்க முடியாத ஒரு கிராமம். நெல்லை மாவட்டத்தில் உள்ளது. 1981-ம் ஆண்டு ஏராளமானோர் இந்த கிராமத்தில் மதம் மாறிய நிகழ்வு பெரும் விவாதங்களையும், சர்ச்சைகளையும், கிளப்பிவிட்டு அதிர்வுகளை ஏற்படுத்தியது.

அதனால்தான் இந்த மீனாட்சிபுரத்தினை அவர் ஆய்வுக்காக மேற்கொண்டார். இதனை எவ்வளவோ அரசியல் வேலைகளுக்கு இடையே பொறுப்புடன் முடித்து அதனை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து வைவாவையும் முடித்துவிட்டு அசத்தி விட்டார் திருமாவளவன். மீனாட்சிபுரத்தை திருமாவளவன் ஏன் தேர்ந்தெடுத்தார், ஆய்வின் முடிவு என்ன, தாக்கம் என்ன, மாற்றம் என்ன, இவை அனைத்தையுமே கேள்விகளாக தொடுத்து "நிகழ்வு செய்திகள் ®"சார்பாக அவரிடம் கேட்கப்பட்டது. அவற்றுக்கு திருமாவளவன் அளித்த பதில்கள்தான் இவை:

#கேள்வி: உங்களுடைய பிசியான அரசியல் செடியூலில் எப்படி ஆய்வு செய்வதற்கெல்லாம் நேரம் ஒதுக்கினீர்கள்?

#பதில்: நேரம் ஒதுக்குவதில் கடுமையான நெருக்கடி இருந்தது. சிரமங்களும் இருந்தன. இருந்தாலும் நேரடையாககிராமத்திற்கு சென்று மக்களை சந்திக்க 3 நாட்களை இதற்கென ஒதுக்கி கொண்டேன். அந்த 3 நாட்களும் கிராமத்திலேயே தங்கி இருந்து அவர்களிடம் கேள்வித் தாள்களை கொடுத்து, அதற்குரிய பதில்களை அவர்களிடம் பதில்களை பெற்று டேட்டா கலெக்‌ஷன் என்ற தகவல் சேகரிப்பு பணியினை நிறைவு செய்தேன். அதன்பிறகு அதை வைத்து உரிய வல்லுநர்களை கலந்து பேசி குறிப்பாக புள்ளியல் துறை சார்ந்த கலந்து பேசி ஆய்வை மேற்கொண்டோம்.

#கேள்வி: வட மாவட்டத்தைச் சேர்ந்த நீங்கள் ஏன் ஆய்வுக் களமாக தென் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தீர்கள்? குறிப்பாக மீனாட்சிபுரம் பற்றி ஆய்வு செய்ய முடிவு செய்தீர்கள்?

#பதில்: இதில் வட மாவட்டம், தென்மாவட்டம் என்கிற பாகுபாடு இல்லை. நான் மாநில கல்லூரியில் மாணவனாக இருந்த காலத்தில் இந்த மத மாற்றம் குறித்து அப்பவே ஊடகங்களில் தெரிவித்திருக்கிறேன். அகில இந்திய அளவில்அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மறைந்த வாஜ்பாய் அவர்கள், நேடிடையாக அந்த கிராமத்திற்கு வந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான யோகேந்திர மகந்த் அந்த கிராமத்திற்கு சென்றார். அதைபோல தமிழகத்தை சேர்ந்த இளையபெருமாள் அவர்களும் அந்த கிராமத்திற்கு சென்றிருக்கிறார். இதையெல்லாம் அப்போதே செய்தித்தாள்களில் நான் படித்திருக்கிறேன். அப்போதே கிராம மக்கள் ஒரு மதத்தைவிட்டு இன்னொரு மதத்திற்கு போகிறார்களே, அதுவும் இஸ்லாம் மதத்தை ஏற்கிறார்களே, இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்ற வேட்கை எனக்குள் எழுந்தது. பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது, அவரை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. சென்னை பல்கலைக்கழத்தில் நான் படித்தபோது எனக்கு எனக்கு பேராசிரியராக இருந்தவர். அவரிடம்தான் நான் 2 வருடங்கள் படித்தேன். எனவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரான பிறகு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனது ஆராய்ச்சி குறித்து அவரிடம் தெரிவித்தேன். இருவரும் கலந்து பேசினோம்.

அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். அவரது கண்காணிப்பு மற்றும் ஒத்துழைப்போடு தான் இந்த ஆராய்ச்சியை நான் மேற்கொண்டேன்.

#கேள்வி: நீங்கள் ஏன் மத மாற்றத்தைப் பற்றி ஆய்வுத் தலைப்பாக எடுத்தீர்கள்? அம்பேத்கர், அயோத்திதாசர் போன்றவர்கள் பௌத்தத்தை மதமாற்றத்தை வலியுறுத்திய நிலையில் நீங்கள் ஏன் இஸ்லாம் மத மாற்றம் பற்றி ஆய்வு செய்தீர்கள்?

#பதில்: அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் தனிப்பெரும்தலைவர். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அவரை தலைவராக ஏற்று கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மக்கள் அகில இந்திய அளவில் பௌத்தத்தை தழுவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பௌத்தத்தை தழுவுவதற்கு பதில், ஏன் இஸ்லாம் மதத்தை தழுவுகிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

இதுதான் நான் ஆராய்ச்சி செய்வதற்கான முக்கியமான காரணம். ஆகவே இந்த ஆய்வு எனக்கு என்ன விடையை தருகிறது என்றால், கிறிஸ்தவம், பௌத்தம் போன்ற மதங்களை காட்டிலும் இஸ்லாம் சாதிக் கொடுமைகளுக்கு எதிரானதாக, அல்லது சாதியை ஒழிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது என்பதை உணர்ந்துதான் இந்த மக்கள் இவ்வாறு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு புரிய வந்துள்ளது.

#கேள்வி: அரசியல்வாதிகள் பலரும் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி கௌரவ டாக்டர் பட்டம் பெறுகையில், நீங்கள் படித்து வாங்கியிருக்கிறீர்கள். இதைப்பற்றி உங்களுடைய கருத்து?

#பதில்: டாக்டர் பட்டம் வாங்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. அதற்காகவும் இதை நான் செய்யவில்லை. இந்தசாதி ஒழிப்பு களத்தில் நான் நீண்ட காலமாகவே பணியாற்றி கொண்டிருக்கிறேன். அதில் மதமாற்றம் என்பது முக்கியமானஒரு நிகழ்வு. அம்பேத்கர் அவர்கள் 1956-ம் ஆண்டு பல லட்சக்கணக்கான மக்களோடு பௌத்தத்தை தழுவினார். சாதியை ஒழிப்பதற்கு அது ஒரு வழிமுறை. அதுபோல் இங்கே தமிழகத்தில் இஸ்லாம் மதத்தை ஒரு கிராமமே கிட்டத்தட்ட 200 குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவுகிறார்கள். இந்த செயல்பாட்டை அதன் வரலாற்று பின்னணியோடு பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருந்தது. மதமாறிய பிறகு அவர்களின் சமூக அந்தஸ்து, பொருளாதார தகுதி, கல்வித்தகுதி எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதையும் காணவேண்டும். அதை அறிவியல்பூர்வமான வழிமுறைகளோடு ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே இதற்காகத்தான் இந்த ஆய்வில் ஈடுபட்டேனே தவிர டாக்டர் பட்டம் கிடைக்க வேண்டும் என்று படிக்கவில்லை. வரலாற்று உண்மைகளையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் என்னை இதில் ஈடுபடுத்தி கொண்டேன்.

#கேள்வி: 1.உங்களுடைய ஆய்வில் நீங்கள் எந்த மாதிரியான முடிவைக் கண்டடைந்தீர்கள்?

2.மீனாட்சிபுரத்தில் மதம்மாறிய மக்களின் தற்போதைய சமூக பொருளாதார நிலை என்னவாக இருக்கிறது?

#பதில்: கண்டிப்பாக அவர்களின் சமூக தகுதி மாறியிருக்கிறது. 37 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களை பள்ளர்கள் என்று இழிவுபடுத்திய சமூகம் இன்றைக்கு இஸ்லாமியர்களாக பார்க்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

அப்படி பார்க்கிறபோது, "வாங்க பாய்..." என்று அழைக்கும் என்ற ஒரு நிலையை கண்ணெதிரே என்னால் பார்க்க முடிகிறது. அவர்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இப்போது பிறவி இஸ்லாமியர்களாக அதாவது BORN MUSLIMS -களாக வளர்ந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு சமூக ரீதியான எந்த ஒடுக்குமுறையோ இழிவோ எதுவும் கிடையாது. பொருளாதாரத்திலும் அவர்கள் மேம்பட்டிருக்கிறார்கள். அயல்நாடுகளுக்கும் மிக எளிதாக வேலைக்கு செல்கிறார்கள்.

கோரைக் குடிசைகள் எல்லாம்இப்போது மாறி 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டியிருக்கிறார்கள். அதுபோல பொது இடங்களில், வணிக வளாகத்தேயே ஒருவர் கட்டியிருக்கிறார்கள். ஒருகாலத்தில் அவருக்கு பெட்டிக்கடை கூட திறக்க முடியாத நிலை இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக