வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

மிஸ்டர் கழுகு: தனிக்கட்சி ஐடியாவில் ஓ.பி.எஸ்?



மிஸ்டர் கழுகு: தனிக்கட்சி ஐடியாவில் ஓ.பி.எஸ்?

 கழுகார்

‘‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே...’’ எனப் பாடியபடி வந்தார் கழுகார்.

‘‘யாரைச் சிங்கம் என்கிறீர்?’’ என்றோம்.

‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சொல்கிறேன். பூ ஒன்று புயலாகி வருவதாகத் தகவல்கள் சொல்கின்றன’’ என்றபடி ஆரம்பித்தார் கழுகார்.

‘‘2017 பிப்ரவரியில் அமைதியாக தியானப் புரட்சி செய்து, சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார் ஓ.பி.எஸ். இப்போது தேனியில் செயல் வீரர்கள் கூட்டத்தில் சத்தமாகப் பேசியதன் மூலம், எடப்பாடிக்கு எதிராகத் திரியைக் கொளுத்தியுள்ளார் ஓ.பி.எஸ்.’’

‘‘அது ஏதோ தினகரனுக்கு எதிராகப் பேசியது போலத்தானே இருக்கிறது?’’

‘‘மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும். ஆனால், இதை முதல்வர் - துணை முதல்வர் மோதலாகத்தான் சொல்கிறார்கள். எடப்பாடிக்கும் பன்னீருக்கும் செல்வாக்கையும், செல்வத்தையும் பகிர்ந்துகொள்வதில்தான் பிரச்னை. அடுத்தடுத்து சத்தமில்லாமல் எடப்பாடி செய்யும் உள்குத்து வேலைகளால் பன்னீர் உச்சகட்ட எரிச்சல் அடைந்துள்ளார்.

ஓ.பி.எஸ்ஸை வெறுப்பேற்ற கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களைப் பயன்படுத்துகிறார் எடப்பாடி. அவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைக் கச்சிதமாகச் செய்து, அவ்வப்போது பன்னீர்செல்வத்துக்குக் கண்ணீர் வரவழைக்கிறார்கள்.”

‘‘ஓஹோ.’’

‘‘கடந்த வாரம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘தினகரன் அணியில் உள்ள தங்க தமிழ்ச்செல்வன் எங்கள் பக்கம் வந்தால், அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக உறுதி மொழி கொடுத்திருந்தோம்’ என்று குறிப்பிட்டார். அதுவரை உள்ளுக்குள் கசந்து கொண்டிருந்த பன்னீருக்கும் எரிச்சல் உச்சத்தில் ஏறியது. தேனி அரசியலில் பன்னீருக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் ஜென்மப் பகை. அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்போம் என்று பேசியதில் பன்னீர் கோபம் எல்லை கடந்தது. சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை சம்பந்தமான ஒரு விஷயம் பேசப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறையின் சார்பில்தான் அதிகமான வேலைகள் நடக்கின்றன. அது தொடர்பான ஆதாயங்கள் எதுவும் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பக்கம் வருவதில்லை. ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகு சுமார் 2,000 நிர்வாகிகளை எடப்பாடியும் பன்னீரும் இணைந்து நீக்கியுள்ளனர். ‘இந்த இடங்களுக்குப் புதிய ஆட்களைப் போட மறுக்கீறீர்கள். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்ற சூழலில் எல்லாரையும் நீக்கிக் கொண்டே இருந்தால், கட்சியை எப்படிக் காப்பாற்றுவது... தேர்தலை எப்படிச் சந்திப்பது’ என்று எடப்பாடியிடம் கேட்டுள்ளார் பன்னீர். இந்தப் பதவிகளை இருவரின் ஆதரவாளர்களுக்குள் பகிர்ந்துகொள்வதில் சிக்கலாம். அதில் வாக்குவாதமாகி, அந்தக் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறும் மனநிலைக்கு வந்தார் ஓ.பி.எஸ். அதற்கு மறுநாள்தான் தேனியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ் அதிரடியாகப் பேசினார் என்கிறார்கள்.’’



‘‘தேனியில் மோடி பெயரை இழுத்து ஓ.பி.எஸ் பேச என்ன காரணம்?”

‘‘பிரதமர் மோடியைப் பற்றி வேண்டுமென்றேதான் பன்னீர் குறிப்பிட்டார். ‘மோடி சொன்னதால்தான் எடப்பாடியுடன் இணைந்தேன்’ என்றார் அவர். இதன்மூலம், ‘தனக்கும் எடப்பாடிக்கும் நடக்கும் பஞ்சாயத்தை டெல்லிதான் தீர்த்து வைக்க வேண்டும்’ என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ‘இல்லாவிட்டால், விலகிச்சென்று தனிக்கட்சி தொடங்கும் ஐடியாவில் இருக்கிறார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்..’’

‘‘சரி, எடப்பாடி என்ன திட்டத்தில் இருக்கிறார்?’’

‘‘எடப்பாடியோடு சசிகலாவின் தம்பி திவாகரன் நல்ல தொடர்பில் இருக்கிறார். ‘இந்த ஆட்சி கவிழ்ந்துவிட்டால், சசிகலா குடும்பம் கட்சியைக் கைப்பற்றிவிடும்’ என்ற கணிப்பு எடப்பாடிக்கு இருக்கிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், தினகரனைச் சமாளிக்க திவாகரன் தேவை என்பதால், எடப்பாடி இதைச் செய்கிறார். அதோடு, தினகரனிடமும் மூத்த அமைச்சர் ஒருவரைத் தூது அனுப்பியுள்ளார். ‘ஒருவேளை சசிகலா குடும்பம் கட்சியில் மீண்டும் தலைதூக்கினால், ஓ.பி.எஸ்ஸைப் பலிகொடுத்துவிட்டு, நாம் அவர்களிடம் சரண்டராகிவிடுவோம்’ என்பது எடப்பாடியின் எண்ணமாக இருக்கிறது என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.’’

‘‘தினகரனின் தனிக் கட்சி ஆரம்பிக்கும் திட்டம் என்ன ஆனது?’’

‘‘அதை நோக்கித்தான் தினகரன் நகர்ந்து கொண்டிருக்கிறார். அதுதான் தனக்கு நல்லது என்றும் அவர் திட்டவட்டமாக நம்புகிறார். அதுபற்றி சசிகலாவிடம் பேசுவதற்குத்தான் பிப்ரவரி 19-ம் தேதி திங்கள்கிழமை பெங்களூரு பயணம். அதில், எடப்பாடி-ஓ.பி.எஸ் மோதல், திவாகரன் - எடப்பாடி கூட்டு, பி.ஜே.பி-யுடன் விவேக்கும் கிருஷ்ணப்பிரியாவும் வைத்துள்ள தொடர்புகள் என எல்லாவற்றைப் பற்றியும் விவாதித்திருக்கிறார். அதோடு ஜெயா டி.வி-யையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறார் தினகரன்.’’

‘‘ஜெயா டி.வி விவேக் கட்டுப்பாட்டில்தானே இருந்தது?’’

‘‘ஆம். ஆனால், அது தனக்குச் சாதகமாக இல்லை என்று தினகரன் கருதுகிறார். அந்தத் தொலைக்காட்சியைக் கையில் வைத்துக்கொண்டு விவேக் தனி லாபி செய்கிறார் என்பது தினகரனின் எண்ணம். அதனால், அதையும் தன் வசப்படுத்த நினைக்கிறார். ‘நிகழ்ச்சிகளின் பொறுப்பை விவேக் பார்த்துக்கொள்ளட்டும். செய்திகளை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கேட்டுள்ளார் தினகரன். தினகரனின் இந்த மூவ்மென்ட்டைப் புரிந்துகொண்ட விவேக், ‘ஒரு நிறுவனத்துக்கு இரண்டு நிர்வாகிகள் இருக்கமுடியாது; மொத்தமாக நான் சேனலைப் பார்த்துக்கொள்வதென்றால் சரி. இல்லையென்றால், எனக்கு சேனலே தேவையில்லை’ என்று சசிகலாவுக்குச் செய்தி அனுப்பியுள்ளாராம். இந்தப் பஞ்சாயத்தால் விவேக் இரண்டு வாரங்களாக ஜெயா டி.வி அலுவலகத்துக்கு வரவில்லையாம்’’ என்ற கழுகார், கிளம்பும் நேரத்தில் ஒரு தகவலைச் சிதறவிட்டுவிட்டுப் போனார்.

‘‘அடுத்த வாரம் அகமதாபாத்தில் மிக முக்கியமான சந்திப்பு ஒன்றை டெல்லி பி.ஜே.பி நடத்த உள்ளது. அது நடந்தால், தமிழக அரசியலில் எல்லாம் தலைகீழாக மாறும்!”

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், வி.ஸ்ரீனிவாசுலு



அச்சுறுத்தியவருக்கு அதிகபட்ச தண்டனை!

சென்னை மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கத்தில், ஆறு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் மரணத் தண்டனை அளித்துள்ளார். 2017 பிப்ரவரி மாதம் நிகழ்ந்த இந்தக் கொடூரம், தமிழகத்தையே உலுக்கியது. ஐ.டி ஊழியரான 24 வயது தஷ்வந்தை அப்போது குண்டர் சட்டத்தில் கைது செய்தது போலீஸ். ஆனால், சில வாரங்களிலேயே அவரை ஜாமீனில் விடுவித்தது பெரும் சர்ச்சையானது. அந்த நேரத்தில் தன் அம்மா சரளாவைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு மும்பைக்கு ஓடினார் தஷ்வந்த். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர் பிடிபட்டார். ஹாசினி வழக்கில் இவ்வளவு சீக்கிரம், இவ்வளவு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதை ஹாசினியின் பெற்றோரே எதிர்பார்க்கவில்லை. வழக்கு நடக்கும்போதெல்லாம் ஹாசினியின் அப்பாவை அச்சுறுத்திக்கொண்டிருந்த தஷ்வந்த்துக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கியுள்ளார் நீதிபதி. உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் சமீபத்தில் ஆறு பேருக்கு மரணத் தண்டனை வழங்கப்பட்டது. கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது, கொடூரமான குற்றங்களைக் குறைக்க வேண்டும்.

விஜயகாந்திடம் கமல் சொன்ன பன்ச்!

அரசியல் கட்சி தொடங்குவதற்குமுன் தனக்கான ஆதர்ஷ மனிதர்களையும் நண்பர்களையும் கமல் சந்தித்தார். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், ‘கமல் நிச்சயம் நல்ல அரசியல் பண்ணுவான்’ என்று யாரிடமோ சொன்னாராம். அதைக் கேள்விப்பட்டு சேஷனைச் சந்தித்தார் கமல். சேஷன், ‘எந்தச் சந்தேகம் இருந்தாலும் எப்ப வேணுமானாலும் சந்திக்கலாம்’ என்றாராம்.



இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவையும் கமல் சந்தித்தார். அப்போது, தான் எழுதிய ‘ஹே ராம்’ பட திரைக்கதைப் புத்தகத்தை நல்லகண்ணுவுக்குத் தந்தார். ‘உங்களின் கொள்கை, செயலைப் பொறுத்து உங்கள் அரசியல் பற்றிய என் கருத்தைச் சொல்கிறேன்’ என்றாராம் நல்லகண்ணு.

ரஜினியிடம், ‘‘உங்களைப் பார்க்க வருகிறேன்’’ என்று கமல் சொல்ல, ‘‘சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன், வந்துடுங்க” என்றாராம் ரஜினி. ரஜினி சாப்பிட்டு முடிப்பதற்குள் கமல் போய்விட்டாராம். வாழ்த்து பரிமாறிக்கொண்டவர்கள், ‘‘நாம் அரசியலில் எதிரெதிர் அணியில் நின்றாலும் இதே கண்ணியத்தைக் காக்க வேண்டும்’’ என்று பேசிக்கொண்டார்களாம். அன்று இரவே தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார் கமல். ஸ்டாலின்தான் கமலை வரவேற்று அழைத்துச்சென்றார். கருணாநிதியிடம் தன் அரசியல் அறிவிப்பு குறித்து தெரிவித்திருக்கிறார் கமல். அதைப் புரிந்துகொண்ட கருணாநிதியும் ஏதோ பேச முற்பட்டிருக்கிறார்.

விஜயகாந்தை அவரின் கோயம்பேடு அலுவலகத்தில் சந்தித்தார் கமல். “நீங்கள்லாம் கண்டிப்பா வரணும் கமல்’’ என்று அவரை விஜயகாந்த் கட்டிப் பிடித்துக்கொண்டார். ‘‘நீங்க ‘அரசியலில் ரஜினி, கமலுக்கு நான்தான் சீனியர்’னு பேட்டி கொடுத்திருந்தீங்க. அது உண்மைதான். அந்த சீனியரிடம் வாழ்த்து பெறத்தான் வந்தேன்’’ என்றாராம் கமல். அதை ரசித்து சிரித்தாராம் விஜயகாந்த்.



 நடிகரும் முன்னாள் எம்.பி-யுமான ராமராஜனை அ.தி.மு.க-வில் யாரும் கண்டுகொள்ளவில்லையாம். உடல்நிலை மோசமானபோது, தொலைபேசியில்கூட அவரை யாரும் நலம் விசாரிக்கவில்லை. அதேசமயத்தில், தினகரன் பக்கம் இருந்து அவருக்கு அழைப்பு வந்தபடி உள்ளது. அதனால் அணிமாறலாமா என்ற யோசனையில் இருக்கிறார்.

 தினகரன் தஞ்சாவூரில் நடத்திய சுற்றுப்பயணத்தில் வைக்கப்பட்ட பேனர்களில் சசிகலாவின் படம் அதிகம் இடம்பெறவில்லை. வைத்த சிலரும் ஸ்டாம்ப் சைஸுக்கு மட்டுமே படம் போட்டிருந்தனர். ஆனால், சசிகலாவின் உதவியாளராக ஒரு காலத்தில் இருந்த கார்டன் சிவா உள்ளிட்ட சிலர் சசிகலாவின் படத்தைப் பெரிதாகப் போட்டே பேனர்கள் வைத்திருந்தனர்.

 வருமானவரித்துறையில் சுமார் 350 ஃபைல்களை முன்பிருந்த ஓர் உயர் அதிகாரி குளோஸ் பண்ணிவிட்டார். அவரின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு, அவரை வேறு ஊருக்கு மாற்றிவிட்டார்கள். புதிதாக அந்தப் பதவியில் வந்து உட்கார்ந்தவர், அதில் 300 ஃபைல்களை மீண்டும் ஓப்பன் பண்ணிவிட்டாராம். அதில் சம்பந்தப்பட்ட வி.ஐ.பி-கள் மிரண்டு கிடக்கிறார்கள்.

 தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அலுவலகம் நாமக்கல் மாளிகையின் 7-வது மாடியில் உள்ளது. இங்குள்ளவர்களுக்கு உயர் அதிகாரி ஒருவர் மெமோ, தண்டனை என வாரி வழங்குகிறாராம். ‘‘அந்த அதிகாரி டார்ச்சர் தாங்கலை. ஒருநாள் 7-வது மாடியிலிருந்து யாராவது குதித்துவிடுவார்கள்’’ என்று தலைமைச் செயலக அலுவலர் சங்கத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

 விவசாயத்துறையின் செயலாளராக இருப்பவர் ககன் தீப் சிங் பேடி. இதே துறையின் அமைச்சர் துரைக்கண்ணுவின் மருமகன் வைப்பதுதான் எல்லாவற்றிலும் சட்டமாம். சின்னச்சின்ன விஷயங்களில்கூட துறையில் இவர் செய்யும் நெருக்கடிகளும் தலையீடும் செயலாளருக்குப் பிடிக்கவில்லையாம். பனிப்போர் நடக்கிறது.

 ரஜினியின் ‘2.0’ படம் அநேகமாக வரும் ஆகஸ்டு 15-ம் தேதி ரிலீஸ் ஆகலாம். அதையொட்டி ரஜினியின் தமிழக சுற்றுப்பயணமும் இருக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக