புதன், 21 பிப்ரவரி, 2018

குவாட்டரும், ஸ்கூட்டரும் கண்டிப்பாக இல்லை.. இலவசங்களுக்கு நோ சொன்ன கமல்ஹாசன் !!


குவாட்டரும், ஸ்கூட்டரும் கண்டிப்பாக இல்லை.. இலவசங்களுக்கு நோ சொன்ன கமல்ஹாசன் !!


எம்என்எம் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஸ்கூட்டர், குவாட்டர் போன்ற இலவசங்கள் கண்டிப்பாக கிடைக்காது என்றும், வேலைவாய்ப்பு பெருக வேண்டும், வசதி வாய்ப்பு பெருக வேண்டும் அதன் மூலம் நீங்களே மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித்தரும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்தார்.
மதுரையில் 21-ந் தேதி மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவிக்கப்போவதாக கூறிய நடிகர் கமலஹாசன், இது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வந்தார். பல அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி கமல்ஹாசன் மதுரையில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார்.
இதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் சென்றார். ராமேசுவரத்தில் இருந்து, ‘நாளை நமதே’ என்ற பெயரில் நேற்று அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
நேற்று காலை ராமேசுவரத்தில் உள்ள, மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் இல்லத்துக்கு சென்று அவரது அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயரை சந்தித்து பேசிய கமல்ஹாசன், பின்னர் மீனவர்களை சந்தித்து பேசினார்.
அதன்பிறகு ராமேசுவரத்தில் பேய்க்கரும்பு என்ற இடத்தில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய பின், ராமநாதபுரத்துக்கு சென்று பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு மதுரை திரும்பினார். மதுரை வரும் வழியில் பரமக்குடி, மானாமதுரையில் மக்களை சந்தித்தார்.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் கட்சி தொடக்கவிழா பொதுக்கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் கலந்துகொள்வதற்காக, கமல் நற்பணி இயக்கத்தினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அங்கு வந்து குவிந்து இருந்தனர்.
கமல்ஹாசன், காளவாசல் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அங்கிருந்து மாலை 6.40 மணிக்கு ஒத்தக்கடை மைதானத்திற்கு காரில் புறப்பட்டார்.வழியில், அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற கமல்ஹாசன் அங்கு தங்கி இருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.
பின்னர் ஒரே காரில் கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் ஒத்தக்கடை பொதுக்கூட்டத்துக்கு புறப்பட்டனர். அவர்கள் பொதுக்கூட்ட மைதானத்தை வந்து அடைந்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர்.
இந்த கூட்டத்தில் பொது மக்கள் கேட்டிருந்த பல கேள்விகளுக்கு கமல் பதில் அளித்தார்.அப்போது நீங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் இலவசமாக தருவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன்.
நாங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஸ்கூட்டர், குவாட்டர் போன்ற இலவசங்கள் கண்டிப்பாக கிடைக்காது என பதில் அளித்தார். வேலைவாய்ப்பு பெருக வேண்டும் அதன் மூலம் . வசதி வாய்ப்பு பெருக வேண்டும் என கூறிய கமல் , நீங்களும் மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித்தரும் நிலை உருவாகும் என குறிப்பிட்டார்.
ஊழலை ஒழிக்க என்ன வழி? நீங்கள் ஒழிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், எல்லா குறைகளும் பேராசையால் வந்தவை என்றும், எல்லோரும் சேர்ந்து ஊழல் செய்துவிட்டு என்னை மட்டும் ஒழிக்க சொன்னால் எப்படி? என்றார்.
ஊழலை நான் மட்டும் ஒழிக்க முடியாது. நாம் ஒன்று சேர்ந்துதான் ஒழிக்க வேண்டும் என்றும் கமல் உறுதியாக பதில் அளித்தார்.


மக்களின் கேள்விகளும் கமலின் அசத்தல் பதில்களும்...!

கேள்வி : எத்தனை நாட்களுக்கு தாக்கு பிடிப்பீர்கள்?
பதில்: என் மூச்சு உள்ளவரை தாக்கு பிடிப்பேன்.
கேள்வி : ஸ்கூட்டர், குவாட்டர் போன்ற இலவசங்கள் உங்கள் ஆட்சியில் வருமா?
பதில் : கண்டிப்பாக கிடைக்காது. வேலைவாய்ப்பு பெருக வேண்டும். வசதி வாய்ப்பு பெருக வேண்டும். நீங்களுக்கு மற்றவருக்கு ஸ்கூட்டர் வாங்கித்தரும் நிலை உருவாக வேண்டும்.
கேள்வி: ஊழலை ஒழிக்க என்ன வழி? நீங்கள் ஒழிப்பீர்களா?
பதில்: எல்லா குறைகளும் பேராசையால் வந்தவை. தேவைகளுக்கு அனைத்தும் இங்கு உண்டு. எல்லோரும் சேர்ந்து ஊழல் செய்துவிட்டு என்னை மட்டும் ஒழிக்க சொன்னால் எப்படி? ஊழலை நான் மட்டும் ஒழிக்க முடியாது. நாம் ஒன்று சேர்ந்துதான் ஒழிக்க வேண்டும்.
கேள்வி: தமிழை காக்க என்ன வழி?
பதில்: நீயும் நானும் தமிழில் பேசினாலே போதும்.
தமிழ் அழியாது. எந்த மொழியையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழை மறக்காமல் பேசிக்கொண்டிருந்தாலே போதும்.
கேள்வி : உங்களுக்கு எந்த தலைவர் பிடிக்கும். வழிகாட்டி யார்?
பதில் : உங்களுக்கு பல சாமிகள் பிடிக்கிறது. நான் ஏன் என்று கேட்கிறேனா? அதுபோல் என்னையும் விட்டுடுங்களேன். எனக்கு பினராயி விஜயனை, அரவிந்த் கெஜ்ரிவால், காந்தி, அம்பேத்கார், நேரு, என நிறைய பேரை பிடிக்கும். மறைந்தவர்களை விட வாழ்ந்து செயலில் ஈடுபட்டு கொண்டிருப்பவர்களை மதிக்கிறேன்.
கேள்வி: இவ்வளவு நாள் எங்கு இருந்தீர்கள்?
பதில்: இவ்வளவு நாள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன். இனி உங்கள் இல்லங்களில் இருப்பேன்.
கேள்வி: உங்கள் வாரிசுகள் அரசியலுக்கு வருவார்களா?
பதில்: நீங்கள் தான் என் வாரிசுகள். நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். என் பெண்கள் அவர்கள் விரும்பினால் வரட்டும். இல்லெயென்றால் இருக்கட்டும். அது அவர்கள் முடிவு.
கேள்வி: காவிரி பிரச்சனைக்கு என்ன தீர்வு?
பதில்: முறையான உரையாடல் நடந்தது என்றால் எந்த மாநிலத்திடமும் எதையும் பேசி பெற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக