வியாழன், 7 டிசம்பர், 2017

1956,டிசம்பர் - 7 அண்ணலின் இறுதி ஊர்வலமும், உடல் தகணமும்...



1956,டிசம்பர் - 7 அண்ணலின் இறுதி ஊர்வலமும், உடல் தகணமும்...

1956 டிசம்பர் 6 ஆம் தேதி அண்ணல் புது டெல்லியில், அலிப்பூர் சாலையில் இருந்த 26 ஆம் எண்ணுடைய இல்லத்தில் பரிநிப்பானம் அடைந்தார். செய்தி அறிந்த மக்களும் அரசியல் தலைவர்களும் அண்ணலின் வீட்டுக்கு விரைந்தனர். அன்றைய பிரதமர் நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் அண்ணலின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மாநிலங்களவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
தனிவிமானத்தில் அண்ணலின் உடலை பம்பாய்க்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டு, இல்லத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக டெல்லி டிகோடா விமான நிலையத்திற்கு மக்கள் திரளோடு அண்ணலின் உடல் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. தனி விமானத்தில் சவிதா அம்மையார், மகன் யஷ்வந்த் ராவ், ரட்டு, பிக்கு ஆனந்த கௌசல்யன் உள்ளிட்டோரோடு அண்ணலின் உடல் பம்பாய்க்கு பயணமானது.
பம்பாய் சாந்தக்குரூஸ் விமான நிலையத்திலிருந்து, அண்ணலின் வீடான ராஜகிருகம் வரை ஆயிரக்கணக்கான மக்கள் அண்ணலின் உடல் வருகைக்காக பல மணி நேரம் காத்துக் கிடந்தனர். நள்ளிரவு கடந்து அதிகாலை மூன்று மணிக்கு சாந்தாக் குரூஸ் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது அண்ணலின் உடல். விமான நிலையத்திலிருந்து அண்ணலின் உடல் மக்கள் திரள் சூழ, ராஜகிருகத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அன்று பம்பாயில் மட்டுமல்ல, மகாராஷ்டிரம் முழுவதுமே இயல்பு வாழ்க்கை முடங்கிக்கிடந்தது. கடைகளும் இல்லை, கம்பெனகளும் இல்லை. எங்கும் அண்ணலின் மறைவுத் துயரே நிலவியது.
டிசம்பர் 7 ஆம் தேதி, பிற்பகல் மூன்று மணிக்கு மேல், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், புத்தர் சிலையொன்று தலைமாட்டில் அமைக்கப்பட்டு, அண்ணலின் உடல் இறுதிப் பயணம் நடத்தப்பட்டது. தேசத்தில் பல பகுதிகளிலிருந்து குவிந்திருந்த இலட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் விட்டபடி அண்ணலின் உடலை பின் தொடர்ந்தார்ககள். சாலையின் இரு புறங்களிலிலுமிருந்த கட்டிடங்களில் இருந்து மக்கள் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர். இறுதியாக, தாதர் சுடுகாட்டில் அண்ணலின் உடலுக்கு சுமார் 10 இலட்சம் பேர் அஞ்சலி செலுத்தினர். அண்ணலின் புதல்வர் யஷ்வந்த் ராவ் அவர்கள், இரவு 7.30 மணிக்கு அண்ணலின் உடலுக்கு தீ மூட்டினார். அண்ணலின் சிதையில் தீ சுடர்விடும் போது, அங்கே கூடியிருந்த மக்கள் கூட்டம் கதறி அழுது துயரில் மிதந்தது.
மக்களின் கண்ணீர் கடலுக்கும் நடுவே அக்னித்தீவாக காட்சியளித்த அண்ணலின் சிதையின் முன், ஐம்பதாயிரம் பேர் பௌத்தம் தழுவினார்கள்.
அண்ணலின் உடல் பயணப்பட்ட 'வின்செண்ட் சாலை' பிறகு,
'பாபா சாகேப் அம்பேத்கர் சாலை' என்று பெயர்பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக