செவ்வாய், 5 டிசம்பர், 2017

அம்பேத்கர் இது வெறும் பெயரல்ல, இந்த நாட்டின்_கௌரவம், உலகின் உன்னதம்!



அம்பேத்கர் இது வெறும் பெயரல்ல, இந்த நாட்டின்_கௌரவம்,  உலகின்  உன்னதம்!

இந்திய தலைவர்களுள் கல்வித்துறையில் யாரும் எட்ட முடியாத சாதனையாக உலகில் மூன்று முன்னணி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற அறிஞராக...

உலக பேரறிஞர்கள் காரல் மார்க்ஸ், கன்பூஸியஸ், அரிஸ்டாட்டில், டால்ட்ஸ்டாய், பெர்னாட்சா இந்த வரிசையில் முதல் இடத்தில் வைத்து உலகம் போற்றும் பேரறிஞராய்...

சட்டம் பயின்ற வழக்கறிஞராக, சட்டத்துறை வல்லுனராக...

பரோடா மன்னரின் இராணுவ செயலாளராக...

கல்லூரி பேராசிரியராக, கல்லூரி முதல்வராக...

மகத் குளத்தில் அனைத்து மக்களும் நீர் அருந்தும் உரிமையை நிலைநாட்டிட மக்களை திரட்டி அகிம்சை வழியில் போராடிய சமூக போராளியாக...

கடவுளின் முன்னே அனைவரும் சமம் என்பதை உணர்த்திட காலாரம் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தி இந்து மதத்தை புனரமைக்க விரும்பிய நன்னெறியாளராக...

இரண்டாயிரம் ஆண்டுகள் அடிமைத்தளையிலிருந்த கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்த ஈடு இணையற்ற இரட்சகராய்...

வட்டமேஜை மாநாட்டில் இந்திய விடுதலைக்கான காரணங்களை அச்சமின்றி ஆணித்தரமாக அறிவித்த உண்மையான தேசிய தலைவராக...

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த ஊமைகளின் தலைவன் பகிஷ்கரித் பாரத், சமத்துவம் மற்றும் ஜனதா(மக்கள்) போன்ற பத்திரிக்கைகளின் ஆசிரியராய்...

எண்ணற்ற தலைப்புகளில் வரலாற்று ஆவணங்களாய் புத்தகங்கள் எழுதிய களைப்புறாத எழுத்தாளராய்...


தொழிலாளர் உரிமைக்களுக்காக போராடிய சுதந்திர தொழிற்கட்சியின் தலைவராய்...

மும்பை சட்டமன்றத்தில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பே பல புரட்சிகர சட்டங்கள் கொண்டுவர உறுதுணையாக இருந்த மதிப்புமிக்க உறுப்பினராய்...

வயது வந்த அனைவருக்கும் ஓட்டுரிமை என்கிற முழக்கத்தை உறுதியாக முன்மொழிந்த மிகப்பெரிய ஜனநாயகவாதியாக...

வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் நல அமைச்சராக உயர்கல்வித்துறை அமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக பல்வேறு பொறுப்புகள் வகித்து தொழிலாளர் நலச்சட்டங்கள் பல நிறைவேற்றிய அறிவுசார் அமைச்சராய்...

கிழக்கிந்தியாவை செழுமையாக்கி, அப்பகுதி மக்களை வெள்ள சேதங்களில் இருந்து நிரந்தரமாக காத்தது மட்டுமின்றி அவர்கள் வாழ்வை வளமாக்கிய தாமோதர் அணைக்கட்டு திட்டநாயகராய்...

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கி, இந்தியாவை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் உண்மையான ஜனநாயக குடியரசாக உருமாற்றிய இந்திய அரசியலமைப்பு சாசனத்தந்தையாக...

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராய் இருந்து ஏராளமான மக்கள் நலச்சட்டங்கள் இயற்றி மக்களுக்காக உழைத்த மகத்தான தலைவராய்...

பெண்களின் உரிமையை பாதுகாக்கவும் அவர்களின் அடிமைத்தளையை வேரறுக்கவும் தாம் வரைந்தளித்த இந்து சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றவிடாமல் தடுத்த பழமைவாதிகளை கண்டித்து மத்திய அமைச்சர் பதவியை தூக்கி எறிந்த, கொள்கைக்காக வாழ்ந்த கறைபடியாத அரசியல் தலைவராய்...

மக்களை சாதியின் அடிப்படையில் அடுக்குகளாய் பிரித்து அடிப்படை உரிமைகளையும் அனைத்து வாழ்வுரிமைகளையும் மறுத்து ஆளுக்கு ஒரு நீதி, சாதிக்கு ஒரு சட்டம் என அநீதி கற்பித்த மனு(அ)நீதியை கொளுத்தி பொசுக்கிய புரட்சியாளராய்...

புத்தரும் அவர் தம்மமும் என்கிற புனித நூலை புத்த மதத்திற்கு அளித்து பௌத்தம் இந்தியாவில் மீண்டும் புத்தொளி வீசி தழைத்து வளரச் செய்த புனிதராய்...

இந்துவாகப்பிறந்தேன், ஆனால் இந்து என்கிற இழிவுடன் இறக்க மாட்டேன்  என சொல்லி, எந்த மார்க்கம் மனிதனை சமத்துவத்துடன் நடத்தி இழிவுகளில் இருந்து விடுதலை அளிக்கவல்லது என 35 ஆண்டுகாலம் பல்வேறு மத ஆராய்ச்சிக்குப்பின் சமத்துவம் போதிக்கும் பௌத்த மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்து, 1956 அக்டோபர் 14 அன்று நாக்பூரில் ஒரே நாளில் ஐந்து லட்சம் மக்களுடன் பௌத்தம் ஏற்றதும், 16 அக்டோபர் 1956 அன்று சந்திராபூர் என்னும் இடத்தில் ஒரு லட்சம் மக்கள் அம்பேத்கரின் அடிச்சுவட்டை பின்தொடர்ந்து பௌத்தத்தில் இணைந்த நிகழ்வும் நடத்தி சரித்திரம் படைத்த உலகின் ஒரே தலைவர் நாம் கண்ட புத்தராய்...

இப்படி இன்னும் பலவாய் உலகின் நமக்கு தெரிந்த எந்த மனிதரையும் இவருடன் ஒப்புமை செய்ய முடியாத அளவில் உயர்ந்த மாமனிதராய் தலைவர்களுள் தலைவராய் டாக்டர் அம்பேத்கர் திகழ்கின்றார்.

1956 டிசம்பர் 5 - ம் நாள் தன் உதவியாளர் ராட்டுவிடம் புத்தம் சரணம் கச்சாமி (நான் புத்தரிடம் சரணடைகிறேன்) எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். அதன் பின் அவர் எழுதிய புத்தரும் தம்மமும் என்கிற நூலுக்கு முன்னுறை எழுதி முடித்துவிட்டு படுக்கைக்கு சென்றார். மறுநாள் 1956 டிசம்பர் 6 - ம் நாள் புத்தருள் தன்னை ஐக்கியப்படுத்தி மகாபரிநிர்வாண நிலை அடைந்தார் (இயற்கை எய்தினார்). ஔி வீசி ஜொலித்துக் கொண்டிருந்த, இதுவரை இப்பூவுலகம் கண்டிராத இந்த நட்சத்திரம் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வில் ஔியேற்றிவிட்டு தன்னை மறைத்துக்கொண்ட நாள் 6 டிசம்பர் 1956. மும்பை தாதர் என்னுமிடத்தில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இறுதி ஊர்வலத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அழுத வண்ணம் அவர்களின் இரட்சகரை பின்தொடர்ந்து சென்றனர்.

ஒரு மனிதனின் பிறப்பு பல கோடி மக்களின், பலநூற்றாண்டின் இழிவை நீக்கி விடுதலைப் பெற்ற மனிதர்களாய் செய்தது என்றால் அது உலகில் டாக்டர் அம்பேத்கர் என்கிற மாமனிதர் ஒருவரின் பிறப்பே ஆகும்.

ஜெய்பீம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக