சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளையில், நகைக்கடை கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற தனிப்படை கொள்ளையர்களை மடக்கி பிடித்தபோது ராம்புர்கலான் என்ற கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார்..
மற்றொரு ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்..
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த முகேஷ்குமார் ( 37). கடந்த 15 வருடங்களாக சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலையில் ‘மகாலட்சுமி தங்க மாளிகை’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்..
நவம்பர் மாதம் 16-ம் தேதி மதியம் இவர் கடையின் மேல் தளத்தில் துளையிட்டு உள்ளே இறங்கிய இரண்டு வட மாநில நபர்கள் நகைக்கடையில் இருந்த 3கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர்..
போலீஸ் விசாரணையில், மேல் தளத்தில் உள்ள கடையை சமீபத்தில் ராஜேஷ் என்பவர் வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது..
அவரையும் அவரது கூட்டாளிகளையும் போலீசார் தேடினர். சிசிடிவி பதிவில் கொள்ளையர்கள் நகைகளுடன் சாதாரணமாக நடந்து செல்லும் காட்சிப் பதிவு கிடைத்தது..
இந்த கொள்ளை தொடர்பாக ஏற்கனவே நான்கு பேர் கைதாகிய நிலையில், மேலும், சிலர் ராஜஸ்தானுக்கு தப்பி சென்றதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்களை பிடிக்க 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது..
மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் போலீஸார் ராஜஸ்தான் சென்றனர்..
ஒரு மாத தேடுதல் வேட்டையில் கொள்ளையர்கள் தினேஷ், சௌத்ரி பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் எல்லையில் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருபதாக கிடைத்த தகவலை அடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு சென்றனர்..
இன்று அதிகாலை 2-30 மணி அளவில் அங்குள்ள ஒரு வீட்டில் கொள்ளையர்கள் பதுங்கி இருந்ததை அடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்..
அப்போது கொள்ளையர்கள் அவர்களை நோக்கி சுடவே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்..
கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்கவும் நிலைமையை கண்டறியவும் இணை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையில் தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் விரைகின்றனர்..
சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி(48)நெல்லை மாவட்டம் மூவிருந்தாளியை சேர்ந்தவர்..
ஆவடியில் வசிக்கிறார். மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஒரு பையன் லயோலா கல்லூரியில் முதலாம் ஆண்டும், இன்னொரு மகன் எட்டாம் வகுப்பும் படிக்கின்றனர்..
கொள்ளையர்களை பிடிக்க சென்றதில் இன்ஸ்பெக்டர் உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக