ஞாயிறு, 31 டிசம்பர், 2017

CURRENT AFFAIRS

CURRENT AFFAIRS..

தமிழ்நாடு

1. சாக்பீஸ் கார்விங் முறையில் 1,330 "அ" எழுத்துகளைக் கொண்டு திருவள்ளுவர் உருவம்: சீர்காழி இளைஞர் சாதனை!
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த சட்டநாதபுரத்தைச் சேர்ந்தவர் நகை தொழிலாளி அன்பழகனின் மகன் அரவிந்தன் (21) 3அடி உயரத்தில் கார்விங் முறையில் சாக்பீஸால் 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில் தமிழின் முதல் எழுத்தான "அ" என்ற எழுத்தை 1,330 எண்ணிக்கையில் சாக்பீஸ்களை செதுக்கி உருவாக்கினார். பின்னர், அந்த எழுத்துகளைக் கொண்டு, திருவள்ளுவர் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

2. 365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை
சிவகங்கை ஓவியர், 365 நாட்களுக்கும் தலா ஒரு மூலிகை மூலம் காலண்டர் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.சிவகங்கையைச் சேர்ந்த ஓவியர் என்.முத்துக்கிருஷ்ணன். 1988 முதல் அஞ்சல் அட்டையில் மாத இதழை நடத்தி வருகிறார். அட்டையின் இருபுறமும் பொதுஅறிவு, சிரிப்பு, கேள்வி-பதில் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இந்த இதழ் தமிழகம் மட்டுமின்றி அந்தமான், கேரளா மற்றும் சண்டிகார், டில்லி, மும்பை போன்ற வெளிமாநில பகுதிகளுக்கும் சிங்கப்பூர், பர்மா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதற்கு லிம்கா சாதனை, அசிட் உலகச் சாதனை விருதுகளும் கிடைத்துள்ளன. இந்த இதழுக்கு இலவச இணைப்பாக 2004 முதல் ஆண்டுதோறும் காலண்டர்களை வெளியிட்டு வருகிறார். 2004 ல் அரை இஞ்சில் 1330 திருக்குறளுடன் கூடிய காலண்டரை தயாரித்தார். தொடர்ந்து 13 ஆண்டுகளாக புதுப்புதுவிதமான காலண்டர்களை வெளியிட்டு வருகிறார். இந்த ஆண்டு 365 நாட்களுக்கும் தலா ஒரு மூலிகை மூலம் காலண்டர் தயாரித்துள்ளனர்.

3. டீ டம்ளர் மீது30 வினாடிகளில் 50 தண்டால் எடுத்து சாதனை :
திண்டுக்கல்லை சேர்ந்த யோகா மாஸ்டர் டீ டம்ளர்களின் மீது 30 வினாடிகளில் 50 தண்டால் எடுத்து சாதனை செய்துள்ளார். 2013 ல் விருதுநகரை சேர்ந்த பாஸ்கரன் இருளப்பன் என்பவர் டீ டம்ளர்களின் மீது 30 வினாடிகளில் 35 தண்டால் எடுத்து சாதனை படைத்தார். இந்த சாதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம் பெற்றுள்ளது. இந்த சாதனையை திண்டுக்கல்லை சேர்ந்த யோகா மாஸ்டர் அப்துல்ரகுமான் முறியடித்தார். ஸ்போர்ட்ஸ் இன் யு அகாடமி சார்பில் அவர் இரண்டு டம்ளர்களின் மீது கைகளையும், மற்றொரு டம்ளரில் இரு கால்களையும் வைத்தப்படி 30 வினாடிகளில் 50 தண்டால் எடுத்தார். இது கடந்த சாதனையை விட அதிகம். இவரின் சாதனைகள் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

4.  கால்நடை திருவிழா
நம் நாட்டு கால்நடைகளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை நகர மக்களுக்கு எடுத்துரைக்கவும், இயற்கை விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு, இயற்கை வளத்துடன் உள்ள தொடர்பை விளக்கவும், சென்னையில், "செம்புலம் 18” என்ற கால்நடை திருவிழா, நடத்தப்பட உள்ளது. சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில், ஜன., 5, 6 தேதிகளில் திருவிழா நடக்கிறது. முதல் முறையாக நடக்கும் இவ்விழாவில், மாடு, குதிரை, எருமை, நாய், கோழிகள் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட இனங்களைச் சார்ந்த, 30 ஆயிரம் கால்நடைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. அதில், உள்நாட்டு கால்நடைகளை பல தலைமுறைகளாக வளர்க்கும் விவசாயிகளை, பொதுமக்கள் சந்தித்து, உரையாடலாம். இதுதவிர, சுவையான இயற்கை உணவுகளை உண்ணவும், பாரம்பரிய விளையாட்டுகளை பார்க்கவும், நகரவாசிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தென்னிந்திய இயற்கை வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர், ஜிதேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.


இந்தியா

1.  முத்தலாக் தடை மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது
முஸ்லிம் கணவர் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. அதையடுத்து உடனடியாக மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் "முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா" பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் மசோதாவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மசோதாவில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்தனர். ஆனால் அந்த திருத்தங்கள் குரல் ஓட்டு மூலம் நிராகரிக்கப்பட்டன. அதன்பிறகு சபையில் மசோதா நிறைவேறியது.

2.  அனைத்து இல்லங்களுக்கும் தடையில்லா மின்சாரம்
இன்னும் மின்சார விநியோகம் கிடைக்கப்பெறாமல் உள்ள 1694 இல்லங்களுக்கு டிசம்பர் 2018-க்குள் மின் விநியோகம் வழங்கப்படும். இந்த வீடுகளுக்கும் மின் விநியோகம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வரும் மார்ச் 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் விநியோகம் வழங்கப்படும். மார்ச் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தடையில்லா மின்சாரம் வழங்க தவறும் பட்சத்தில், மின்விநியோக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும். நாட்டில் உள்ள மின்சார உட்கட்டமைப்பை மேம்படுத்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது என மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய மின்சார துறை மந்திரி ஆர்.கே சிங் தெரிவித்துள்ளார்.

3.  உத்தரகாண்டில் மிதமான நிலநடுக்கம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மாலை 4:50 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.கடந்த 11-ம் தேதி இதே பகுதியில் 5.5 ரிக்டராக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

4. உலக இனிப்புத் திருவிழா!
தெலங்கானாவில் ஜனவரி 13ஆம் தேதி முதல் உலக இனிப்புத் திருவிழா கொண்டாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக இனிப்புத் திருவிழா ஜனவரி 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை செகந்தராபாத்தில் உள்ள பயிற்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவில் இந்தியாவின் 25 மாநிலங்களைச் சேர்ந்த இனிப்புகள், வெளிநாட்டைச் சேர்ந்த இனிப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட இனிப்புகள் காட்சிக்கு வைக்கப்படும்.
அனைத்து மாநிலங்களின் இனிப்புகளைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த விழாவின் முக்கிய நோக்கம் எனச் சுற்றுலா மற்றும் பண்பாட்டுச் செயலாளர் பி.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இனிப்புத் திருவிழாவின்போது சர்வதேசப் பட்டம் பறக்கவிடும் திருவிழாவும் நடத்தப்படும்.


உலகம்

1.  ஜெருசலேம் நகரில் டிரம்ப் பெயரில் ரெயில் நிலையம்
டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேம் நகருக்கு புதிய சுரங்க ரெயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை இஸ்ரேல் நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி இஸ்ரேல் கட்ஸ் தாக்கல் செய்தார். அப்போது அவர், மேற்கு சுவர் மற்றும் பழமை நகருக்கு இடையே பூமிக்கு அடியில் 3 கி.மீ. தூரத்துக்கு சுரங்க ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளதாவும், இந்த ரெயில் பாதையில் 2 ரெயில் நிலையங்கள் இடம் பெறும் என்றும் அறிவித்தார். அவற்றில் பழமை நகரில் அமைக்கப்படும் ரெயில் நிலையத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பெயர் சூட்டப்படும் என இஸ்ரேல் நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி அறிவித்தார்.

2. அதிக வாராக்கடன் நாடுகளில் இந்தியாவுக்கு 5வது இடம்
வங்கி வாராக்கடன் அதிகமுள்ள நாடுகளில், இந்தியா, 5வது இடத்தை பிடித்துள்ளது. "பிரிக்ஸ்" நாடுகளின் வங்கி துறையில், அதிகளவில் வாராக்கடனுடன், இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஸ்பெயின் உள்ளிட்ட, பி.ஐ.ஐ.ஜி.எஸ்., நாடுகளில், அதிக வாராக்கடனில், இந்தியா, 5வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில், கிரீஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், இத்தாலி ஆகியவை உள்ளன. இந்தியாவின் வாராக்கடன் விகிதம், 9.85 சதவீதமாக உள்ளது. இது அடுத்துள்ள ஸ்பெயின் நாட்டின் 5.28 சதவீதத்தை விட, 4 சதவீதம் அதிகமாகும். ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், தென் கொரியா, பிரிட்டன் ஆகியவை, மிகக் குறைந்த வாராக்கடனை வைத்துள்ளன. இவற்றின் வாராக்கடன், 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

3.  ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை கற்று கொண்ட கொரில்லா
கோகோ எனும் பெண் கொரில்லா குரங்கு சைகை மொழியில் மனிதர்களோடு உரையாடுகிறது. ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை புரிந்துகொள்ள முடியும் என மனித மிருக உரையாடல் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்த பென்னி என்பவர் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1. உலக ரேபிட் செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்!
சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ரியாத் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 9-வது சுற்றில் ஆனந்த் வென்று ஆச்சர்யப்படுத்தினார். 15 சுற்றுகளின் முடிவில் ஆனந்த் உள்ளிட்ட மூவர் 10.5 புள்ளிகள் பெற்று முதலிடம் வகித்தார்கள்.
ஒரு தோல்வியும் அடையாமல் ஆறு வெற்றிகள், 9 டிராக்கள் மூலம் முதல் இடத்தைப் பிடித்தார் ஆனந்த். பிறகு டை பிரேக் முறையில் உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஆனார் ஆனந்த். டை பிரேக் போட்டியில் ரஷ்யாவின் ஃபெடோசீவை 1.5-0.5 என்கிற கணக்கில் தோற்கடித்ததால் சாம்பியன் பட்டம் ஆனந்துக்கு வழங்கப்பட்டது.

2.  ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள்
கடந்த 9ஆம் தேதி நடந்த “Murali Goodness Cup” போட்டித் தொடர், இலங்கையின் முன்னாள் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றது.இந்த தொடரில் விளையாடிய 15 வயதான நவிந்து பகாசரா, தொடரின் இறுதிப் போட்டியில் ஒரே ஓவரில் (no ball உட்பட) ஏழு சிக்ஸர்களை விளாசி சாதனைப் படைத்தார். அவரின் இந்த சாதனைப் பாராட்டிய முரளிதரன், பகாசராவை வாழ்த்தியதோடு, கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக கூறினார்.


விருதுகள்

1. மாரத்தான் யோகா: சென்னை பெண் கின்னஸ் சாதனை!
தொடர்ந்து யோகா செய்து சென்னையைச் சேர்ந்த கவிதா பரணிதரன் புதிய கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார். மூன்றரை வயது குழந்தைக்கு தாயானவர் இவர்.
டிசம்பர் 23-ந் தேதி காலை 7 மணியளவில் இவருடைய மாரத்தான் (தொடர்ச்சியாக ஒரு செயலைச் செய்வது) யோகா தொடங்கியது. இதன்மூலம் 5-ஆம் நாளான டிசம்பர் 28-ந் தேதி (இன்று) பிற்பகல் 02:02 மணியளவில் இவர் முந்தைய மாரத்தான் யோகா கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்து மாரத்தான் யோகாவில் ஈடுபட்டு வரும் கவிதா, டிசம்பர் 30-ந் தேதி வரை இதை நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாசிக்கைச் சேர்ந்த பிரதன்யா பாட்டீல், இதே வருடம் ஜூன் மாதம் 16-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிய மொத்தம் 103 மணிநேரங்கள் தொடர்ந்து மாரத்தான் யோகா செய்து கின்னஸ் உலக சாதனைப் படைத்திருந்தார்.


முக்கிய நியமனங்கள்

1. ஜிம்பாப்வே துணை அதிபரானார் கான்ஸ்டன்டினோ சிவெங்கா!
ஜிம்பாப்வேயில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தி வந்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலகக் காரணமான அந்த நாட்டின் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா (61), அந்த நாட்டின் துணை அதிபராக பொறுப்பேற்றார்.
கான்ஸ்டன்டினோவும், முகாபே அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த கெம்போ மொஹாதியும் துணை அதிபர்களாக பொறுப்பேற்றனர்.


அறிவியல் தொழில்நுட்பம்

1.  ஏவுகணைகளை நடுவானில் வழி மறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
எதிரி நாட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் இந்தியாவை தாக்க வந்தால் அதனை இடைமறித்து தாக்கும் அதிநவீன வான் பாதுகாப்பு சூப்பர்சானிக் ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. தயாரித்து உள்ளது. இதன் நீளம் 7½ மீட்டர் ஆகும். இந்த ஆண்டு ஏற்கனவே 2 தடவை வெற்றிகரமாக நடந்த சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை 3–வது தடவையாக நடந்தது. ஒடிசா மாநிலத்தில் வங்காளவிரிகுடா கடலில் அமைந்துள்ள அப்துல்கலாம் தீவில் இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றது. ஒடிசாவில் பலசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து எதிரி நாட்டு ஏவுகணை போல் "பிரித்வி" ஏவுகணை ஒன்று ஏவப்பட்டது. அந்த ஏவுகணையை வழிமறித்து தாக்குவதற்காக, வங்கக்கடலில் அமைந்துள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து சூப்பர்சானிக் ஏவுகணை ஏவப்பட்டது. நடுவானில், பிரித்வி ஏவுகணையை சூப்பர்சானிக் ஏவுகணை வழி மறித்து வெற்றிகரமாக தாக்கியது. இச்சோதனை வெற்றிகரமாக முடிந்ததால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


பொருளாதாரம்

1.  செய்தித்தாள் நிறுவனம் ரூ.264 கோடி லாபம்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், 2016 - 17ம் நிதியாண்டில், நிகர லாபம், 264.56 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. இதில், தமிழக அரசின், 75 சதவீத பங்கு ஈவுத் தொகை, 18.33 கோடி ரூபாய். இதற்கான வரைவு காசோலையை, தொழில் துறை அமைச்சர், எம்.சி. சம்பத், முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினார்.அதேபோல், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தமிழக அரசின் பங்கு ஈவுத் தொகை, 3.03 கோடி ரூபாய். இதற்கான காசோலையையும், முதல்வரிடம் அமைச்சர் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக