வெள்ளி, 8 டிசம்பர், 2017

மிஸ்டர் கழுகு: எடைத்தேர்தல்!

 ஜூனியர் விகடன்Dec,13th 2017  

கழுகார்

மிஸ்டர் கழுகு: எடைத்தேர்தல்!

எடைத் தட்டில் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், தினகரன் மூவரும் இருக்கும் ஜூ.வி அட்டையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்து, ‘‘நல்ல ஐடியா’’ என நம் ஓவியரைத் தட்டிக்கொடுத்தார் கழுகார். ‘‘எடப்பாடிக்கும், தினகரனுக்கும் மட்டுமே ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முக்கியமானதல்ல. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் இது ‘எடை போடும்’ தேர்தல்’’ என்றார் கழுகார். அவரே தொடரட்டும் என்று காத்திருந்தோம்.


‘‘ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாமல், கடந்த 28 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இது. கடைசியாகத் தமிழகம் சந்தித்த தேர்தல் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தல். அப்போது ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தார். அவர் பிரசாரத்துக்கு வராமலே அ.தி.மு.க  ஜெயித்தது. அதன்பின் ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தலை அறிவித்தபோது இரட்டை இலையை இழந்த அ.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலைக் கஷ்டப்பட்டு தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தது. இப்போது இரட்டை இலையை அவர்கள் பெற்றபிறகு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. ‘வெறும் அதிகாரம் மட்டுமே எடப்பாடி மற்றும் பன்னீர் கைகளில் உள்ளது. தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்’ என்று தினகரன் சொல்கிறார். ‘இது உண்மையல்ல’ என நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இருக்கிறது. கடந்த 1996-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற எந்த இடைத்தேர்தலிலும் ஆளுங்கட்சி தோற்றதில்லை. ஆர்.கே. நகரில் அ.தி.மு.க தோற்றால், ‘ஆளுங்கட்சியாக இருந்தும் ஜெயிக்க முடியவில்லையே’ என்ற கேள்வி எழும். ‘இரட்டை இலை இருந்தும் வெல்ல முடியவில்லையே’ என்ற சந்தேகம் வரும். கட்சி உடையும்; ஆட்சி ஆட்டம் காணும்.’’

‘‘தினகரனுக்கு எப்படி இது சோதனை?’’

‘‘வரிசையாக அவருக்குத்தான் எத்தனை இழப்புகள்...

ஆர்.கே.நகரில் சென்றமுறை அவர் நின்றபோது, முதல்வர் எடப்பாடி அவரோடு ஓரமாக, பணிவாக நின்றுகொண்டு ஓட்டுக் கேட்டார். தேர்தல் ரத்து செய்யப்பட்டு, இரட்டை இலைச் சின்னத்துக்காகத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் திஹார் ஜெயிலுக்கும் போய் வந்தார் தினகரன். அதன்பிறகு அதிகாரமும் கட்சியும் அவரிடமிருந்து பறிபோனது. அவரைக் கடைசி நிமிடம் வரை நம்பியிருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் பதவி இழந்ததுதான் மிச்சம். இந்தத் தேர்தலில் சுயேச்சையாகவே நின்றாலும், ‘கட்சியின் எதிர்காலம் நான்தான்’ என, தான் வாங்கும் ஓட்டுகள் மூலம் அவர் உறுதிசெய்ய வேண்டியுள்ளது. அவர் அதைச் செய்யாவிட்டால், இன்னும் இழப்புகள் வரிசை கட்டி நிற்கும். சசிகலா குடும்பத்துக்காக அவர் பின்னால் நிற்கும் நிர்வாகிகள் காணாமல் போவார்கள். தினகரனுக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்துக்கும் பிரச்னைதான்.’’



‘‘ஆர்.கே. நகர் தேர்தல் குறித்து அடுத்தடுத்து வழக்குகள் போடுகிறதே தி.மு.க.?’’

‘‘ஆமாம். இந்தத் தேர்தலில் அவர்கள் ஜெயிக்க வேண்டும்; அல்லது ஆளுங்கட்சி செய்யும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டும். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் வியூகங்களை ஸ்டாலின்தான் தீர்மானித்தார். அந்தத் தேர்தலில் தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள 40 தொகுதிகளிலும் தோற்ற தி.மு.க பல இடங்களில் மூன்றாவது இடத்துக்குப் போனது. 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ‘நமக்கு நாமே’ பயணங்கள் எல்லாம் போய், உற்சாகமாக இருந்தார் ஸ்டாலின். கடந்த 84-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் அ.தி.மு.க-வையும் தி.மு.க-வையும் மாற்றி மாற்றி ஜெயிக்க வைத்துக்கொண்டிருந்தனர் தமிழக மக்கள். முதல்முறையாக இந்த வரலாற்றை மாற்றி, 2016 தேர்தலில் தி.மு.க-வைத் தோற்கடித்தனர். இப்போது ஸ்டாலின், செயல் தலைவராக ஆனபிறகு சந்திக்கும் முதல் தேர்தல் களம், ஆர்.கே.நகர். ஜெயலலிதா உயிரோடு இருந்து, அ.தி.மு.க-வில் எந்தப் பிளவும் ஏற்படாத நிலையில் இந்த இடைத்தேர்தல் நடந்து அதில் தி.மு.க தோற்றுப்போனால், அது பெரிய விஷயம் இல்லை. ஆனால், இப்போது ஜெயலலிதா இல்லை; அ.தி.மு.க என்ற கட்சி இரண்டாக உடைந்து, உள்ளுக்குள் மூன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சி மீதும் கடுமையான அதிருப்தி இருக்கிறது. இந்த நிலையில்கூட ஒரு இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றால், அது ஸ்டாலினின் தலைமைப் பண்பை கேள்விக்குள்ளாக்கும். குடும்பத்துக்குள்கூட சில எதிர்ப்புகளையும் சலசலப்புகளையும் எதிர்கொள்ள நேரிடலாம். இதையெல்லாம் ஸ்டாலினும் உணர்ந்துதான் இருக்கிறார்.’’

‘‘விஷால் விவகாரத்தில் என்னதான் நடந்தது?’’

‘‘சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை, அதே தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். விஷாலின் மனுவிலும் அப்படி 10 பேர் கையெழுத்துப்போட்டிருந்தனர். அதைத் தேர்தல் அதிகாரி பரிசீலனை செய்து கொண்டிருந்தபோது, அந்த அறைக்கு வெளியில் ஏராளமான அ.தி.மு.க-வினர் கூடி இருந்தனர். ‘விஷால் மனுவில் சரவணன் என்ற பெயர் உள்ளது. நான்தான் அந்த சரவணன். நான் விஷாலை முன்மொழியவில்லை. அந்தக் கையெழுத்தை விஷால் போலியாகப் போட்டுள்ளார்’ எனக் கோரஸாக பலர் கூச்சல் போட்டனர். இப்படியே, விஷால் மனுவில் உள்ள ஒவ்வொரு பெயருக்கும் பலர் சொந்தம் கொண்டாடினர். ஒரே களேபரமானது. இதற்கிடையே விஷாலை முன்மொழிந்தவர்களில், சுமதி, தீபன் ஆகியோர் அ.தி.மு.க-வினர் என்பது அடையாளம் காணப்பட்டது. உடனடியாக மதுசூதனனின் ஆட்கள், அவர்கள் வீட்டுக்குப் போய்ப் பேச வேண்டிய விதத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு அந்த இருவரும் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து, ‘எங்களுக்கு விஷால் யாரெனத் தெரியாது... எங்களின் கையெழுத்துப் போலியாகப் போடப்பட்டுள்ளது என்று கடிதம் கொடுத்தனர். இதுதான் நடந்தது.’’

‘‘விஷாலைப் பார்த்து ஆளும்கட்சிக்கு இவ்வளவு பயமா?’’

‘‘இந்த டார்ச்சர் விஷாலுக்கானது அல்ல, தினகரனுக்கானது. கடந்த வாரமே உளவுத்துறையும் விஷாலின் அரசியல் பிரவேசம் பற்றி ஆளும்தரப்புக்கு அறிக்கை கொடுத்திருந்தது. விஷாலுக்கும் தினகரனுக்கும் நல்ல அறிமுகம் உண்டு. விஷாலின் தங்கை திருமணத்துக்கு தினகரன் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். இதை வைத்து முடிச்சுப் போட்டுதான் டார்ச்சர் தந்தார்கள்.’’

‘‘இடைத்தேர்தல் என்றாலே வழக்கமான பட்டுவாடா வேலைகள் தொடங்கிவிடுமே?’’


‘‘வியாழன் இரவுவரை எதுவும் தொடங்கவில்லை. ஆனால், தினகரன் அணி சார்பில், கடந்த முறை தேர்தல் வேலைகளுக்கு என்று பணம் வாங்கியவர்களை ஒருங்கிணைக்கும் வேலை இப்போது நடக்கிறது. கடந்த முறை தேர்தல் வேலை பார்க்க தினகரன் அணி சார்பில் பல நிர்வாகிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டது. முன்னாள் அமைச்சராக இருந்து, இப்போது தினகரன் அணியில் இருப்பதால் பதவிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ ஒருவர், அவர்களை மந்தைவெளி பக்கம் வரச்சொல்லிப் பேசி வருகிறார். ‘கடந்த முறை வாங்கிய பணத்துக்கு இந்த முறை வேலை பாருங்கள். இப்போது நிலைமை சரியில்லை என்பதால், பணம் கொடுக்க முடியாது. ஆனால், எதிர்காலத்தில் கட்சி நம்மிடம் வந்துவிடும். அப்போது உங்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் உண்டு’ என்றாராம்.’’

‘‘அதற்கு என்ன ரியாக்‌ஷன்?’’

‘‘வந்திருந்த நிர்வாகிகள், ‘நாங்களும் கடுமையான சிரமத்தில்தான் இருக்கிறோம்.

ஓ.பி.எஸ்-ஸை நம்பிப்போனவர்கள், இ.பி.எஸ் கூடவே இருந்தவர்களெல்லாம் இன்றைக்கு ஏதோ ஒன்றைச் செய்து ஆதாயம் அடைகிறார்கள். ஆனால், எங்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை. கடந்தமுறை கொடுத்ததைப் போல இல்லை என்றாலும், கௌரவமான ஓட்டுகளைப் பெற கண்டிப்பாக செலவு செய்துதான் ஆக வேண்டும்’ என்று பேசியுள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு முதல்கட்டமாக ஒரு தொகை கொடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களைக் கவனிக்கும் வேலைகள் இனிமேல்தான் தொடங்குமாம்’’ என்ற கழுகார், சட்டென பறந்து மறைந்தார்.


பி.ஜே.பி-யின் ஸ்லீப்பர் செல் மணிசங்கர் ஐயர்?

தமிழகத்தைத் தாண்டியும் அரசியலில் ‘ஸ்லீப்பர் செல்’ என்ற வார்த்தை இப்போது பாப்புலராகக் காரணம், ஒரு தமிழக அரசியல்வாதி. அவர், மணிசங்கர் ஐயர். குஜராத் தேர்தல் முக்கியமான கட்டத்தில் இருக்கும் நேரத்தில் அவர் இந்தியில் உதிர்த்த 28 வார்த்தைகள் காங்கிரஸுக்குப் பெரும் தர்மசங்கடத்தையும், பி.ஜே.பி-க்கு உற்சாகத்தையும் தந்துள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது ‘மோடி டீ விற்கப்போகலாம்’ என மணிசங்கர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி காங்கிரஸை நொறுக்கினார் மோடி. அதேபோல இம்முறையும் மோடிக்கு அஸ்திரம் கொடுத்துள்ளார் ஐயர்.


சர்தார் படேலை காங்கிரஸ் இருட்டடிப்பு செய்வதாக மோடி பேசி வருவது குறித்து மணிசங்கரிடம் கருத்து கேட்டார்கள். உடனே, ‘‘மோடி ஒரு மலிவானப் பிறவி. அவருக்கு நாகரிகம் தெரியவில்லை. இப்படி ஏன் மலிவான அரசியலை அவர் செய்ய வேண்டும்?’’ என்றார் மணிசங்கர். மோடி இதைப் பிடித்துக்கொண்டுவிட்டார். ‘‘மொகலாய மன்னர் போல காங்கிரஸ்காரர்கள் பேசுகிறார்கள். காங்கிரஸின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது. அந்த ஒரு குடும்பம்தான் ஆள வேண்டுமா? எளிய மனிதர்கள் அதிகாரத்துக்கு வரக்கூடாதா?’’ என குஜராத் பிரசாரத்தில் பேசினார் மோடி.

‘‘நான் இந்தி சரியாகத் தெரியாததால் இப்படிப் பேசிவிட்டேன்’’ எனச் சமாளித்து மன்னிப்புக் கேட்ட மணிசங்கரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது காங்கிரஸ். ராகுல் காந்தியும் வருத்தம் தெரிவித்தார். ஆனால், அதற்குள் இதைப் பயன்படுத்தி என்னவெல்லாம் செய்யவேண்டுமோ, அதைச் செய்துவிட்டது பி.ஜே.பி. டெல்லி வட்டாரத்தில் மணிசங்கரை ‘பி.ஜே.பி-யின் ஸ்லீப்பர் செல்’ எனக் கிண்டல் செய்கிறார்கள். குஜராத் தேர்தலில் வெளிப்படையாகவே சாதி அரசியல் நிகழ்ந்துவரும் சூழலில், மணிசங்கர் கமென்ட்டால் காங்கிரஸ் என்ன பாதிப்பு அடையப்போகிறது என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.


உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, தன்னை வேறு எங்காவது மாற்றிவிடுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம். காரணம், கவர்னரின் செயலாளராக வந்திருக்கும் ராஜகோபால். இவர் டெல்லிக்குப் போகும்முன், தமிழக உள்துறைச் செயலாளர் பதவியில் இருந்தார். அவரைத் தொடர்ந்து அந்தப் பதவியில் வந்து அமர்ந்தவர் நிரஞ்சன் மார்டி. இவர் வந்தவுடன், சில முக்கிய ஃபைல்கள் தொடர்பாக அரசுக்குப் புகார் தெரிவித்திருந்தார். இதனால் ராஜகோபாலுக்கு நிரஞ்சன் மார்டிமீது கோபம் உண்டாம். அதனால் இருவருக்கும் இப்போது மனஸ்தாபம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதாலேயே டிரான்ஸ்ஃபர் கேட்கிறார் நிரஞ்சன் மார்டி.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் தேர்தல் நடக்கும். வருகிற 15-ம் தேதி இந்தத் தேர்தல் நடக்க இருக்கிறது. பொதுவாக, இந்தத் தேர்தலில் கட்சி அரசியல் இருக்கும். ஆனால், இந்த முறை வெளிப்படையாக ஜாதி அரசியல் தலைவிரித்து ஆடுகிறதாம். இதனால் மோதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறையினர் அரசுக்குக் குறிப்பு அனுப்பியுள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் ரகசியம் லீக் ஆவது அதிகரித்துள்ளதாம். இதனால் அதிகாரிகள் சிலர், ‘‘நீங்க யார் யாருக்கிட்ட எவ்வளவு மணி நேரம் போன்ல பேசுனீங்கன்னு தெரியும். உங்களை ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன்’’ என்று கீழ்மட்ட அதிகாரிகளிடம் மிரட்டலாகச் சொல்கிறார்களாம். இந்த டயலாக், கீழ்மட்ட அதிகாரிகள் மத்தியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த முறை ஆர்.கே. நகர் தேர்தலின்போது மேலிடம் கொடுத்த பணத்தை சில ஏரியாக்களில் பட்டுவாடா செய்வதற்குள் தேர்தல் நின்றுபோனது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அமைச்சர்கள் எட்டு பேர், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் சிலர் பணத்தைப் பதுக்கிவிட்டார்களாம்.  அவர்களுக்கு, கடந்த முறை ஒதுக்கிய அதே ஏரியாக்களை இம்முறையும் ஒதுக்கிவிட்டார்களாம். அந்த ஏரியா நிர்வாகிகள், இவர்களிடம் சட்டையைப் பிடிக்காத குறையாக பழைய பாக்கியைக் கேட்கிறார்களாம். பதுக்கிய புள்ளிகள், இதனால் விழிபிதுங்கித் திரிகிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக