சனி, 30 ஜூன், 2018

8 வழி சாலைப் பணிகளில் ரானுவம் - மத்திய அரசின் பகீர் திட்டம்...

8 வழி சாலைப் பணிகளில் ரானுவம் - மத்திய அரசின் பகீர் திட்டம்...

சென்னை முதல் சேலம் வரை 8 வழி சாலை அமைக்க அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த சாலை அமைய உள்ள 5 மாவட்டங்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களும் கோவக் கனலாக உள்ளார்கள். அதற்கு காரணம் அச்சாலைக்காக அழிக்கப்படும் இயற்கை வளங்கள் மற்றும் விவசாய நிலங்கள்தான். தொடர்ந்து நாளுக்கு நாள் விவசாயிகள் மிக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஒரு சிலர் தங்கள் விளை நிலத்தை பறிபோக விடமாட்டோம் என தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். சிலர் தங்கள் நிலத்தில் படுத்து கண்ணீருடன் கதறுகிறார்கள். சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய் துறை ஊழியர்கள் பல இடங்களில் திரும்பி செல்கிறார்கள். அரசு காவல்துறையை விட்டு மக்களுக்கு நெருக்கடி கொடுக்க அதையும்மீறி கடும் எதிர்ப்புகள் பல இடங்களில் காவல்துறையும் திரும்பி போகிறது.
ஒட்டுமொத்தமாக நில அளவீடு சர்வே பணிகளை முழுமையாக முடிக்க முடியாது என்ற சூழலுக்கு மாநில அரசு வந்துள்ளது. கடந்த 10 நாட்களாக இந்த மாவட்டங்களில் விவசாயிகளின் எதிர்ப்பும், பொதுமக்களின் போராட்டங்களையும் உற்றுநோக்கிய மத்திய உளவுத்துறை மேலிடத்திற்கு சில அறிக்கைகளை அனுப்பியுள்ளது. அதில் சாலை அமைக்கும் பணி தொடர்ந்தால் போராட்டங்கள் வலுப்பெறும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்றும், மாநில அரசின் காவல்துறை இதை சமாளிக்க முடியாது என்று அறிக்கை கொடுத்துள்ளது.
இதன் பின்னணியிலேயே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களில் பயங்கரவாதிகள் பங்கு உள்ளது என்றும், பயங்கரவாதிகளை கண்டு கட்சிகள் அஞ்சுகிறது என்றும் தெரிவித்து வருகிறார். இதேபோல் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் சமூக விரோதிகள் அரசு நல திட்டங்களை தடுக்க முயலுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
 இந்த நிலையில்தான் மத்திய உள்துறையில் இருந்து மாநில அரசுக்கு ஒரு அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இந்த பசுமை வழிச் சாலையை மாநில அரசு நிறைவேற்றுமா, மக்களின் போராட்டங்களை எப்படி கட்டுப்படுத்தும், தமிழக காவல்துறை இதனை எப்படி சமாளிக்கும், சட்டம் ஒழுங்கை எப்படி கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும், இதற்கு ராணுவத்தின் உதவி தேவைப்படுமா, ராணுவ வீரர்கள் இந்த பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு பாதுகாப்பில் ஈடுபட வைக்கலாமா என்ற கேள்விகளை கேட்டுள்ளதாக தெரிகிறது. 
ஆனால் மாநில அரசு, ராணுவத்தின் மூலமாக இந்த திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எங்கள் அரசு கட்டுப்படுத்த முடியாத நிலை என்ற கேள்வி எழும். எதிர்க்கட்சிகள் இதையே பிரச்சாரமாக செய்வார்கள். ஆகவே ராணுவத்தை இறக்குவது ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசு  கேட்டுள்ளதாக தெரிகிறது..

வெள்ளி, 29 ஜூன், 2018

சேலத்தில் ஈரோட்டிலும் சூரியன் மற்றும் ஹலோ எப்.எம் ஆகியவை தொடங்கப்படுகின்றன


சேலத்தில் ஈரோட்டிலும் சூரியன் மற்றும் ஹலோ எப்.எம் ஆகியவை தொடங்கப்படுகின்றன.

சேலத்தில் சூரியன் FM 91.9 மற்றும் ஹலோ FM 91.5 ஆகிய அலைவரிசையிலும்,
ஈரோட்டில் சூரியன் FM 91.2 மற்றும் ஹலோ FM 92.7 ஆகிய அலைவரிசையிலும் 2018 ஜூலை 1 முதல் தனது பண்பலை ஒலிபரப்பு சேவையைத் தொடங்குகிறது...

வேலூரில் சூரியன் எப்.எம் 93.9 அலைவரிசையிலும் தொடங்கவுள்ளது.


பறவைகளை கொல்லும் அபூர்வ மரங்கள்..!

பறவைகளை கொல்லும் அபூர்வ மரங்கள்..!

ஹவாய் மற்றும் நியூசிலாந்து சாலை பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் ஒரு வகை மரம் தான் பிசோனியா ப்ருனோனியா. இதில் காய்க்கும் காய்களில் அதிக அளவில் பசை போன்ற திரவம் வெளியேறுவதால் அதனை கடந்து செல்லும் பூச்சிகள் ஒட்டி கொள்கின்றன. அவ்வாறு ஒட்டி கொள்ளும் பூச்சிகளை உண்பதற்காக வரும் பறவைகளும் மரத்துடன் ஒட்டி கொள்கின்றன.
மேலும் இலகுவாக இருக்கும் இறகுகளில் பசை ஒட்டி கொள்வதால் பறவையால் பறக்க முடியாமல் போகிறது. இது போல் பல பறவைகள் இம்மரங்களில் ஒட்டி இறந்து விடுகின்றன. இவ்வகை மரங்களின் அருகில் சென்று பார்த்தால் பறவைகளின் எழும்பு கூடாகவே இருக்கின்றனவாம். பறவை பிடிக்கும் மரம் என்றும் பலர் இதனை கூறுகிறார்கள்.




சுவிஸ் வங்கி: இந்தியாவின் கறுப்புப் பணம் 50% உயர்வு


சுவிஸ் வங்கி: இந்தியாவின் கறுப்புப் பணம் 50% உயர்வு

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் முதலீடு செய்யப்படும் பணம் கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் 50% அதிகரித்திருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு குறைந்திருந்த நிலையில் 2017ஆம் ஆண்டு மிக அதிக அளவு உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் ஏழாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

கறுப்புப் பணத்தை எதிர்த்து இந்தியா கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக மத்திய அரசு சொல்லி வரும் நிலையில், சுவிஸ் தேசிய வங்கியின் வருடாந்திர புள்ளிவிவரங்கள் நேற்று (ஜூன் 28) வெளியிடப்பட்டன.

இதன்படி உலக அளவில் மொத்தம் சுவிஸ் வங்கியின் வெளிநாட்டு முதலீடுகள் 3% அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக இந்தியாவில் இருந்து மட்டும் 50% பண முதலீடு அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி 2017ஆம் ஆண்டு வாடிக்கையாளர்களின் முதலீடுகள் வழியாக 3,200 கோடி ரூபாயும், மற்ற வங்கிகளின் மூலமாக 1,050 கோடி ரூபாயும், நம்பகமானவர்கள் வாயிலாக 2ஆயிரத்து 640 கோடி ரூபாய் இந்திய பணமும் 2017ஆம் ஆண்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு முன் 2011 ஆம் ஆண்டு 12% என்ற அளவிலும், 2013 ஆம் ஆண்டு இந்தியா நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருந்த நிலையில் 43% என்ற அளவிலும் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு உயர்ந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் இந்திய பணம் 50.2% என்று அதிகரித்திருக்கிறது.



சில மாதங்களுக்கு முன்னர் இந்திய, சுவிஸ் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி கறுப்புப் பணம் தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல் தொடர்பாக இருநாடுகளுக்கு இடையிலும் புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. தவறான வழிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் என்பதற்கான ஆதாரங்களைத் தந்தால் முதலீடு பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளோடு பகிர்ந்துகொள்ளும் முறையை ஏற்கனவே சுவிஸ் கடைபிடித்து வந்தது. கறுப்புப் பண ஒழிப்பை தீவிரமாக்குவதன் அடுத்த கட்டமாக முதலீடுகள் பற்றிய தகவல்களை இந்தியாவுடன் தானாகவே பரிமாற்றிக் கொள்ளும் முறையைக் கொண்டுவந்தது சுவிஸ்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாத்தில் கறுப்புப்பண ஒழிப்பை பிரதானமாக முன் வைத்தார் அப்போதைய பிரதமர் வேட்பாளரான மோடி. வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் 15 லட்சத்தை டெபாசிட் செய்வதாக பாஜகவின் வாக்குறுதி நாடு முழுவதும் கவனிக்கப்பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்றதும் பிரதமர் ஆன மோடி, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பதற்கான சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தார். இக்குழுவை அமைக்குமாறு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி. ஷா இக்குழுவின் தலைவராகவும் ஓய்வுபெற்ற நீதிபதி அரிஜித் பசாயத் இணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். மத்திய அரசின் வருவாய்த் துறை செயலர், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், நேரடி வரி வருவாய் ஆணையத்தின் தலைவர், புலனாய்வுத்துறை டிஐஜி, அமலாக்கத்துறை இயக்குநர், சிபிஐ இயக்குநர், வருவாய் புலனாய்வுத்துறை இயக்குநர், நிதித்துறை புலனாய்வுப் பிரிவு, ரா பிரிவின் தலைவர்கள் என பல்வேறு அதிகாரிகள் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்

கறுப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு.

இதையெல்லாம் விட 2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பழிப்பு செய்தார் பிரதமர் மோடி. இதன் மூலம் கறுப்புப் பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது என்று பிரகடனம் செய்தார் பிரதமர் மோடி.

பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகான 2017ஆம் ஆண்டில்தான் சுவிஸ் வங்கியில் இந்தியாவின் கறுப்புப் பண முதலீடு 50% அதிகரித்திருக்கிறது என்று சுவிஸ் தேசிய வங்கியே நேற்று அறிவித்திருக்கிறது

புதன், 27 ஜூன், 2018

தமிழ்நாடு : 12000 பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் வேலை இழப்பு

தமிழ்நாடு : 12000 பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் வேலை இழப்பு

சென்னை
மிழகத்தில் சுமார் 12000 பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் பணி இழந்துள்ளார்கள் என அகில இந்திய தொழிற்கல்விக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 550 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  அவற்றில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவ்வாறு பொறியியல் கல்லூரிகல் தமிழகத்தில் மட்டுமே அதிக அளவில் உள்ளன.   அதே நேரத்தில் இந்த மாணவர்களுக்கு சரியான வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.    சரியான முறையில் கற்பிக்கப் படாததே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
இதை ஒட்டி அகில இந்திய தொழிற்கல்விக் கழகம் ஆசிரியர்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நிகழ்த்தியது.  அந்த கணக்கெடுப்பின் முடிவில், “தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 1: 15 என்னும் விகிதத்தில் ஆசிரியர்கள் இருந்தனர்.   அதன்படி தற்போது  உள்ள எண்ணிக்கைப் படி மொத்தம் 66000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி புரிய வேண்டும்.   ஆனால் உண்மையில் 55000 ஆசிரியர்கள் கூட பணி புரியவில்லை.   அதாவது சுமார் 12000 ஆசிரியர்கள் வேலை இழந்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த வருடம் மே மாதம் பணி இழந்த ஒரு ஆசிரியர், “எனது சேமைப்பை வைத்து நான் இப்போது வாழ்க்கை நடத்தி வருகிறேன்.   இங்குள்ள பொறியியல் கல்லூரியில் வேலை காலி இல்லை.  ஆந்திராவில் உள்ள கல்லூரிகள் இந்த வேலை இல்லா திண்டாட்டத்தை ப்யன் படுத்தி பாதிக்கும் குறைவான சம்பளத்தில் ஆசிரியர்களை பணி அமர்த்துகின்ரனர்.   இதற்கு இடைத் தரகர்கள் உள்ளனர்.  அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2% கமிஷன் அளிக்க வேண்டி உள்ளது” என கூறுகிறார்.
அத்துடன் தற்போது அதிக ஊதியம் வாங்கும் பழைய ஆசிரியர்களை  நீக்கி விட்டு குறைந்த ஊதியத்தில் புதிய ஆசிரியர்களை பல கல்லூரிகள் நியமித்து வருகின்றன.   வேலை இல்லா திண்டாட்டத்தினால் இதற்கு பலர் ஒப்புக் கொள்ளுகின்றனர்.
இது குறித்து கல்லூரி உரிமையாளர் ஒருவர், “மற்ற கல்லூரிகளில் ஒவ்வொரு ஆசிரியரும் வாரத்துக்கு 20 மணி நேரம் பாடம் நடத்துகின்றானர்.  ஆனால் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் 8 மணி நேரம் மட்டுமே பாடம் நடத்துகின்றனர்.   இதனால் எங்கள் செலவில் 70% ஆசிரியர்களின் ஊதியத்துக்கு செலவாகிறது.   எங்களிடம் போதுமான மாணவர்கள் இல்லாத போது ஆசிரியர்களை நாங்கள் ஏன் அதிக அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

27-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்

27-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை தொடர்ந்து, அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி பெறாமல் அமைச்சர்கள் கூட பிரதமரை சந்திக்க முடியாது என கூறப்படுகிறது.
வாங்கிய கடன்களை திருப்பி அளிக்க முயற்சி செய்து வருவதாகவும், அரசியல் காரணங்களுக்கான நெருக்கடியை குறிப்பிட்டும் தான் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை தற்போது விஜய் மல்லையா வெளியிட்டுள்ளார். 
பாஸ்போர்ட் அலுவலகங்களின் பற்றாக்குறையை போக்க, புதிதாக m-passportseva என்ற மொபைல் ஆப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று துவக்கி வைத்தார். 

பா.ம.க நிறுவனர் ராமதாஸிடம் தமிழிசை சௌந்தரராஜன் மன்னிப்புக்கோர வலியுறுத்தி, வரும் ஜூன் 28ல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளுக்கு பதிலடியாக ஐரோப்பிய நாடுகள், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அந்நாட்டின் உற்பத்திகள் மீது புதிய வரி விதித்து வருகின்றனர். இதனால், தனது நிறுவனத்தின் தொழிற்சாலைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்வதாக பிரபல அமெரிக்க பைக் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கொடுத்து வெளியான அறிக்கையை மத்திய அரசு, மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 
அமர்நாத் யாத்திரிகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவிருப்பதாக வெளியான தகவல்கள் பொய் என்றும், யாத்திரிகள் தங்கள் விருந்தாளிகள் என்றும், ஜம்மு காஷ்மீரின் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. 
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா நைஜீரியாவை 2-1 என வீழ்த்தி, உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல, ஐஸ்லாந்து குரேஷியாவுடன் 2-1 என தோற்றது. முன்னதாக பிரான்ஸ் டென்மார்க் இடையே நடைபெற்ற பட்டி கோல் இல்லாமல் டிராவில் முடிந்தது. 

திருமணம் செய்தால் கொன்று விடுவோம்: நடிகரின் முன்னாள் மனைவிக்கு ரசிகா்கள் மிரட்டல்

திருமணம் செய்தால் கொன்று விடுவோம்: நடிகரின் முன்னாள் மனைவிக்கு ரசிகா்கள் மிரட்டல்


நடிகா் பவன் கல்யாண் ரசிகா்கள் அவரது முன்னாள் மனைவிக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். அது என்ன மிரட்டல் என்றால் பவன் கல்யாணின் முன்னாள் மனைவியான நடிகை ரேணு தேசாயை வேறு திருமணம் செய்து கொண்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனா்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிகை ரேணு தேசாய் திருணம் செய்தார். அவர்கள் இருவருக்கும் அகிரா என்ற மகனும், ஆத்யா என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கடந்த 2012ஆம் ஆண்டு பிரிந்து விட்டனா். விவகாரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் அடுத்து வருடமே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையில் தான் நடிகை ரேணு தேசாய்க்கு திருணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரேணு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பவன் கல்யாணின் ரசிகா்கள் உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர். நடிகை ரேணு வேறு ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார். அந்த நபர் யார் என்ற விபரத்தை கூறவில்லை. மேலும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அந்த நபரின் முகம் சரியாக கூட தெரியவில்லை. தான் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்புவதாக மட்டும் தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த பவனின் ரசிகா்கள், ரேணுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எங்கள் கடவுளை அதாவது பவன் கல்யாணை காயப்படுத்தாதீர்கள். மீறி இப்படி காயப்படுத்தினால் பின்விளைவுகள் படு மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுமாறு மிரட்டியுள்ளனர்.
ஏற்னகவே ரேணு என்னை மகனை ஜூனியர் பவன் கல்யாண் என்று அழைக்காதீர்கள் என்று தெரிவித்தார். அதை அறிந்த பவன் ரசிகா்கள் அவர் மீது கோபம் கொண்டனர். இப்போது ரேணுக்கு திருமணம் நிச்சயமானதும் மிரட்டல் விடுத்துள்ளனர். பல பெண்கள் தனியாக வாழ்கிறார்கள். நீங்கள் மீண்டும் திருமணம் செய்யாதீர்கள். அது நல்ல காரியம் இல்லை. உங்களுக்கு மட்டும் மீண்டும் திருமணம் எதற்கு என்று பவன் கல்யாண் ரசிகா்கள் கேட்டுள்ளனர்.

எடியூரப்பாவிற்கு போல தீர்ப்பு வந்தால் தமிழகத்தில் எப்படியும் ஆட்சி கவிழ்வது உறுதி.. தினகரன் தரப்பு போட்டிருக்கும் பக்கா பிளான்..?

எடியூரப்பாவிற்கு போல தீர்ப்பு வந்தால் தமிழகத்தில் எப்படியும் ஆட்சி கவிழ்வது உறுதி.. தினகரன் தரப்பு போட்டிருக்கும் பக்கா பிளான்..?



தினகரன் தரப்பின் ஒவ்வொரு நகர்வுகளும் கர்நாடகத்தில் நடந்த எடியூரப்பா வழக்கை போலவே சென்று கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

தினகரன் தரப்பின் ஒவ்வொரு நகர்வுகளும் கர்நாடகத்தில் நடந்த எடியூரப்பா வழக்கை போலவே சென்று கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
அதனை ஒரு முன்மாதிரியாக வைத்துக்கொண்டே தினகரன் தரப்பு அடுத்தடுத்த அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.
எடியூரப்பா வழக்கின் பாணியிலேயே சென்றால் தங்களுக்கு அதே போல தீர்ப்பு கிடைத்து விடும் என்று மலையளவு நம்பி வருகிறது.
கர்நாடக வழக்கின் பின்னணியை பார்த்தோமேயானால், 2010ல் அம்மாநில  முதல்வராக இருந்தார் பாஜகவின் எடியூரப்பா.
அப்போது திடீரென 11 பாஜக எம்.எல்.ஏக்கள், 5 சுயேட்சைகள் எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்த 16 எம்.எல்.ஏக்களும் தனித்தனியே மனுக்கள் அளித்தனர்.
அதில், பாஜகவில் தாங்கள் தொடர்ந்து நீடிப்பதாகவும் ஆனால் முதல்வர் எடியூரப்பாவை மட்டும் மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இதையடுத்து போர்க்கொடி தூக்கிய பாஜக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் போபையா தெரிவித்தார்.
இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றமோ, சபாநாயகர் போபையாவின் முடிவை கடுமையாக விமர்சித்தது. முதல்வர் எடியூரப்பா அரசைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே சபாநாயகர் இந்த தகுதி நீக்க அறிவிப்பை வெளியிட்டார்.
இதைத் தவிர தகுதி நீக்கத்துக்கு எந்த ஒரு காரணமும் இல்லை. எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என அதிரடியாக தீர்ப்பளித்தனர்.
அங்கு நடந்தை போலவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை எதிர்த்தும் முதல்வர் பழனிசாமியை பதவி நீக்க கூறியும் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் கூறியதால் சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தினகரன் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மீண்டும் பதவியை பெற்றால் தமிழக அரசே கவிழும் நிலைக்கு கூட வரலாம்.
அதனால் அனைத்து தரப்பும் இந்த வழக்கு தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். தினகரனின் அரசியல் பயணத்திற்கு இந்த வழக்கில் வரும் தீர்ப்பே முக்கிய பங்களிக்கும் என கருதப்படுகிறது.
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 16-ஆம் தேதி அளிக்கப்பட்டது. இதை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வும் அளித்தனர்.
அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில் சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது. அவரது முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார். இதையடுத்து நீதிபதி சுந்தர்  சபாநாயகர் எடுத்த முடிவு தவறானது என்று தீர்ப்பளித்தார். இரு நபர்கள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகளும் மாறுப்பட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கு 3-ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
தகுதிநீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறி தங்கதமிழ் செல்வனை தவிர மீதமுள்ள 17 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல், அருண் மிஸ்ரா ஆகியோர் இன்று விசாரணை நடத்துகின்றனர்.
எடியூரப்பா வழக்கை போலவே தங்களது தகுதி நீக்கமும் ரத்தாகும் என்கிற நம்பிக்கையுடன் அதே தீர்ப்பை எப்படியும் பெற வேண்டும் என்பதற்காக தற்போது உச்சநீதிமன்றத்தை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நாடியுள்ளனர்.

இந்தியாவுக்கு சீனா அளித்த சலுகை.! ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது..!

இந்தியாவுக்கு சீனா அளித்த சலுகை.! ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது..!



இந்தியாவுக்கு சீனா அளித்த சலுகை.!  

இந்தியா உள்பட 5 நாடுகளுக்கு சோயாபீன்ஸ் மற்றும் கால்நடை தீவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ததாக சீன அரசு தெரிவித்துள்ளது. 
 
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு சீனாவும் கடுமையாக வரி விதித்து இருப்பதால் அவ்விரு நாடுகள் இடையே வர்த்தகப்போர் நடந்து வருகிறது. இரு அமெரிக்க மற்றும் சீன நாடுகளிடையே வர்த்தக போர் நடந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர்.  
இந்நிலையில், அண்டை நாடுகளான ஆசிய நாடுகளுடன் நல்லுறவை விரும்புவதாக சீனா அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவுடனான வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில் சீன அரசு நட்புடன் இருக்க விரும்புவதாக தெரியவந்து உள்ளது.
 
அந்த வகையில் சீன அரசு இந்தியா உள்பட வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகின்ற சோயாபீன்ஸ் உள்ளிட்ட கால்நடை தீவனங்களுக்கு வரியை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இந்த வரி ரத்து வரும் ஜூலை 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவை அந்த நாட்டின் நிதி அமைச்சகம் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. 
இதன்படி சோயாபீன்ஸ் மீது 3 சதவீதம் வரியும், சோயாபீன்ஸ் புண்ணாக்கு மீது 2 சதவீதம் வரியும்  சீனா வரி விதித்து வருகிறது. அமெரிக்காவில் இருந்துதான் சீனா அதிகளவில் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில் வரி ரத்தால் இனி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து கூடுதலாக சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து: சிபிஐ தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து: சிபிஐ தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:
மணல் கடத்தல் மன்னன் சேகர்ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த 3  வழக்கில், முதல் வழக்கை தவிர மற்ற 2 வழக்கையும்  ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
டந்த 2016ம் ஆண்டு நாட்டில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது, பிரபல   மணல் சுரங்க மன்னன் சேகர் ரெட்டி ஏராளமான பணம் மாற்றியதாக கூறப்பட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சேகர் ரெட்டி, மற்றும் அவர் உறவினர்களிடம் வருமான வரி அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள்  சோத்னையிட்டதில் ரூ. 2000 புதிய நோட்டுக்கள் கோடிக்கணக்கான மதிப்பில் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுகுறித்து சிபிஐ  மணல் தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்பட 5 பேர் மீது  ரூ.24 கோடி  புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தாக குற்றச்சாட்டு பதிவு செய்து வழக்கு பதிந்தது.
பின்னர்,  சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலங்களில் நடைபெற்ற சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம்  குறித்து மேலும் 2 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.
இதை எதிர்த்து சேகர்ரெட்டி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பு படி ஒரே குற்றத்துக்காக பல வழக்குகளை பதிவு செய்யக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் தங்கள்  மீது தொடர்ச்சியாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) ரத்து செய்ய வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களான சேகர் ரெட்டி, மற்றும் ஆடிட்டர் பிரேம்குமார், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம்,  சேகர்  ரெட்டி மீது பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கைத் தவிர மற்ற 2 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது

பெண்கள் வாழ ஆபத்தான நாடு இந்தியா!- சர்வதேச செய்தி நிறுவன ஆய்வு கூறுகிறது

பெண்கள் வாழ ஆபத்தான நாடு இந்தியா!- சர்வதேச செய்தி நிறுவன ஆய்வு கூறுகிறது

பெண்கள் வாழ மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை கூறுகிறது. 
பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரிப்பு, பல்வேறு துறைகளில் உழைப்பு ரீதியிலாக சுரண்டப்படுவது உள்ளிட்ட காரணங்களால், உலகளவில் பெண்கள் வாழ மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 193 நாடுகளைச் சேர்ந்த 5 பிரதிநிதிகள் குழு ராய்ட்டர்ஸுக்காக இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். 
அதில் உலகளவில் பெண்களின் உடல்நலம், அவர்களின் பொருளாதார வளம், கலாச்சாரம் அல்லது மரபு ரீதியான பெண்களின் பழக்க வழக்கங்கள், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்புணர்வு, அவர்களின் வளர்ச்சிக்கு அதிரான அடக்குமுறை, குடும்ப சூழலில் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், ஆட்கடத்தல், பெண் பிறப்புறுப்பு சிதைவு, குழந்தை திருமணம், கட்டாயத் திருமணம், உடல் ரீதியான துன்புறுத்தல், பெண் சிசுக்கொலை, வாழ்வாதாரத்தை இயக்குவதில் இயலாமை, நிலம், சொத்து அல்லது பரம்பரை உரிமைகளில் பாகுபாடு, கல்வி பற்றாற்குறை, குழந்தை பேறுகால ஆரோக்கியம், குழந்தை இறப்பு விகிதம், கருத்தடை மற்றும் குடும்ப கட்டுப்பாடு உள்ளிட்ட மொத்தம் 550 விவகாரங்கள் தொடர்பான கேள்விகள் இந்த ஆய்வுக் குறிப்பேடில் இடம்பெற்றிருந்தன. 
அப்போது பிரதிநிதிகள் ஆட்கடத்தல், பாலியல் வன்கொடுமை , பெண் சிசு அழிப்பு, அடிமைத்தனமான உழைப்புக்கு தள்ளப்படும் பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெண்கள் மிகவும் ஆபத்தான சூழலில் இருப்பதாக கூறி ஆய்வின் முடிவில் இந்தியாவுக்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டின் போது இந்த ஆய்வு நடத்தப்பட்டபோது இந்தியா 4வது இடத்தில் இருந்தது. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சகத்திடம் ராய்ட்டர்ஸ் நிறுவனம் கருத்து கேட்ட போது, அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
போர் சூழ்ந்த நாடான ஆஃப்கானிஸ்தான் 2வது இடத்திலும், சிரியா 3வது இடத்திலும் உள்ளன. 3வது இடத்தில் அமெரிக்காவும் ஒருசேர உள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நாடுகளில் பெரும்பாலானவை ஆசிய நாடுகளாக உள்ளன. அதே போல, முதல் 10 நாடுகளில் இடம்பெற்றிருக்கும் நாடுகளில் இடம்பெர்றிருக்கும் ஒரே மேற்கத்திய நாடாக அமெரிக்கா 3வது இடத்தில் உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. 
பெண்களுக்கு எதிரான வன்புணர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிச்சயம் அறிந்துள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக அரசு எந்த நிலையான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.  
இந்த விவகாரம் எதிர் வரவிருக்கும் நாடாளுமன்றத்தில் நிச்சயம் எதிரொலிக்கும் எனக் கூறியுள்ளது. அதோடு, ஏப்ரல் மாதத்தில் பெண்களுக்கு எதிரான வன்புணர்வு மற்றும் கொடுமைகள் குறித்து பிரதமர் மோடி ஆணித்தனமாக பேசியதாகவும், அதே மாதத்தில் சிறாருக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கும் மசாதா தாக்கல் செய்யப்பட்டதையும் அந்த அறிக்கை குறிப்பட்டுள்ளது. 

தங்கம் விலை மளமளவென குறைவு !

தங்கம் விலை மளமளவென குறைவு !


ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை விலையை விட ஒரு கிராமுக்கு ரூ.14 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,908 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,264 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,540க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.42.90 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.42,900 ஆக விற்பனை செய்யப்படுகிறது .



மதுரை - தஞ்சாவூர் இடையே 8 வழி சாலை திட்டம்!

மதுரை - தஞ்சாவூர் இடையே 8 வழி சாலை திட்டம்!

சேலம் பசுமை வழிச்சாலையை தொடர்ந்து மதுரை - தஞ்சாவூர் இடையே 8 வழி சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.  
நேற்று(செவ்வாய் கிழமை) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: “தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் புதிய நில எடுப்பு சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்படும். ரோடு போடுவதற்காக மக்களை ரோட்டில் விடாது இந்த அரசு. சிலர், மக்களை மூளை சலவை செய்ய முயற்சி செய்கிறார்கள். அது பலனளிக்காது. அரசியல் காரணங்களுக்காக வளர்ச்சியை தடுக்க முயற்சி செய்கிறார்கள். அடுத்து மதுரை - தஞ்சாவூர் இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைய உள்ளது. படிப்படியாக அது நிறைவேற்றப்படும்” என்றார்.

ஸ்டெர்லைட் ஆலை கோயில் மாதிரியாம்..! - வேதாந்த நிறுவனருக்கு 'வக்காலத்து வாங்கும் "பதஞ்சலி" பாபா ராம்தேவ்…!

ஸ்டெர்லைட் ஆலை கோயில் மாதிரியாம்..! - வேதாந்த நிறுவனருக்கு 'வக்காலத்து வாங்கும் "பதஞ்சலி" பாபா ராம்தேவ்…!

தேசத்தின் வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள்தான் கோயில்; ஸ்டெர்லைட் ஆலை மூடியிருக்கக் கூடாது என்று வேதாந்த நிறுவனர் அனில் அகர்வாலை சந்தித்தப் பிறகு யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தின் 100-வது நாளின்போது, பயங்கர கலவரம் ஏற்பட்டதும் அதைத்தொடர்ந்து .பொதுமக்கள்மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததும் தெரிந்ததே..
அதனைத்தொடர்ந்து நடந்த நிகழ்வுகளின் எதிரொலியாக,பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்படுவதாக தமிழக அரசுதெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்ற தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆலைக்கு சீல் வைத்தார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக நோட்டீசும், ஆலையின் கதவில் ஒட்டப்பட்டது.
இந்நிலையில், யோகா கலை பயிற்சி அளிக்க யோகா குரு பாபா ராம் தேவ் லண்டன் சென்றார். அங்கு, ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து பாபா ராம்தேவ், தனது டுவிட்டர் பக்கத்தில், 
"என்னுடைய லண்டன் பயணத்தின்போது அனில் அகர்வாலைச் சந்தித்தேன். தேசக்கட்டுமானத்தில் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்குவதன் மூலமும், பொருளாதார செழிப்பை வைத்திருப்பதன் மூலமும், தேச கட்டுமானத்தில் பங்காற்றும் அவருக்கு மரியாதை செய்கிறேன்.
உலகளவில் உள்ள சதிகாரர்கள், தென்னிந்தியாவில் உள்ள வேதாந்தா ஆலைக்கு எதிராக அப்பாவி மக்கள் மூலம் கிளச்சியை ஏற்படுத்தி உள்ளனர். தேசத்தின் வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள்தான் கோயில், தொழிற்சாலைகள் மூடியிருக்கக் கூடாது"
என  பதிவிட்டுள்ளார். 
இவரின் இந்த பதிவு தமிழகத்தில் எரிச்சலை தான் அதிகப்படுத்தும் ,என சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள்.

`நான் ரொம்ப நல்லாயிருக்கேன்!’ - பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி பேட்டி


`நான் ரொம்ப நல்லாயிருக்கேன்!’ - பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி பேட்டி

இந்தியத் திரையிசை உலகின் மூத்த பின்னணிப் பாடகிகளில் ஒருவர், எஸ்.ஜானகி. இவரது உடல்நலம்குறித்து தவறான செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. வதந்தியே என்ற நம்பிக்கையுடன் பாடகி எஸ்.ஜானகியைத் தொடர்புகொண்டோம்.
"நான் ரொம்ப நல்லாயிருக்கேன். பையனோடு காரில் டிராவல்ல இருக்கேன். முன்பு பரபரப்பா பாடிக்கிட்டு இருந்தப்போ வெளியிடங்களுக்குப் போக அதிக நேரமிருக்காது. அதனால, இப்போ ஓய்வுக்காலத்துல அடிக்கடி வெளியிடங்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் போயிட்டிருக்கேன். ரீச் ஆக இன்னும் கொஞ்ச நேரமாகும். ஏதாச்சும் முக்கியமான விஷயமா?" என்று அமைதியாகக் கூறியவரிடம், "ஒண்ணுமில்லை மா. உடல்நலத்தைப் பார்த்துக்கோங்க" என்று கூறியதும், "சரி" என்று புன்னகைத்தார். நன்றி:விகடன்.

நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவில் ஆனித்தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பாலகிருஷ்ணன் வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்


தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவில் ஆனித்தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பாலகிருஷ்ணன் வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.

1505ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தேரோட்டம் சுமார் 500ஆண்டுகளுக்கும் மேலாக தடையின்றி இயங்கி வருகிறது...

தமிழகத்திலேயே 3வது பெரிய தேர், மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய், 26 ஜூன், 2018

பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டு சிறை, அபராதம்- கவர்னர் மாளிகை எச்சரிக்கை

பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டு சிறை, அபராதம்- கவர்னர் மாளிகை எச்சரிக்கை

தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்ற பின்பு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.ஆரம்பத்தில் இருந்தே இதற்கு, தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கவர்னர் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டி வருகின்றனர். இருந்தபோதிலும் அதை கருத்தில் கொள்ளாமல், தனது பணியை கவர்னர் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக் கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கம்போல் தி.மு.க. வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக 293 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதற்கு கண்டனம் தெரிவித்தும், கவர்னர் பதவி விலக கோரியும் சென்னையில் நேற்று முன்தினம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. வினர் கருப்புக்கொடியுடன் கவர்னர் மாளிகையை முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கவர்னரை பணி செய்ய விடாமல் தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கவர்னர் மாளிகை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாநில கவர்னர், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சுதந்திரமாக சென்று ஆய்வு நடத்த அரசியலமைப்பு சட்ட அதிகாரத்தின்படி உரிமை உள்ளது. கவர்னரின் ஆய்வு குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது.மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற அடிப்படையில் கவர்னர், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தற்போது உள்ள சூழ்நிலையில் கவர்னர் மிகச்சரியான முடிவை மேற்கொண்டு வருகிறார்.
மாவட்டம் தோறும் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தும்போது அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து அதிகாரிகள் எடுத்துக்கூறுகின்றனர். அதுபோன்று நடைபெற்ற எந்த கூட்டத்திலும், குறிப்பிட்ட துறையின் செயல்பாடுகள் குறித்து கவர்னர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதிகாரிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிப்பது இல்லை.
மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அந்த திட்டத்தின் மூலம் செய்துள்ள சாதனை குறித்து அதிகாரிகள், கவர்னருக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சிகொள்கின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினர் மக்களை திசைதிருப்ப முயற்சிக்கின்றனர்.கவர்னரை பணி செய்ய விடாமல் தடுத்து அவரது அலுவலகத்தை முற்றுகையிடவோ அல்லது கவர்னர் அலுவலக சாலையை மறித்து போராட முயன்றாலோ அதை தடுக்க இந்திய தண்டனை சட்டத்தின் 124-வது பிரிவு வழிவகை செய்கிறது.
அந்த சட்டம், கவர்னரை பணி செய்ய விடாமல் தடுத்தாலோ அல்லது முற்றுகை போன்ற ஏதாவது ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டாலோ 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கலாம் என்று கூறுகிறது.இனிமேல் யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் இந்த சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள். ஆரம்பத்தில் கவர்னர் மாவட்டம் தோறும் ஆய்வு மேற்கொண்ட போது எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை அழைத்து கவர்னரின் ஆய்வு தொடர்பாக சட்டத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து எடுத்து கூறப்பட்டது.
சட்டத்தை புரிந்து கொண்டு அவர்கள் தங்களது நடவடிக்கையை மாற்றிக்கொண்டு சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு போதிய கால அவகாசமும் வழங்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவே கவர்னர் தனது பணியை செய்து வருகிறார்.எனவே, சட்டத்தை மீறி நடப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கவர்னரின் ஆய்வுப்பணி காரணமாக சாதாரண பொதுமக்கள் பயன்பெறுவதால் இந்த ஆய்வுப்பணி அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

திங்கள், 25 ஜூன், 2018

புரோகித்தா, புரோக்கரா? - வெளுத்து வாங்கும் வைகோ

புரோகித்தா, புரோக்கரா? - வெளுத்து வாங்கும் வைகோ

மத்திய பாஜக அரசு, ஆளுநரைக் கொண்டு தமிழ்நாட்டில் போட்டி அரசாங்கம் நடத்த முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ இன்று  வெளியிட்ட அறிக்கை;
ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்தை விடுவிக்க ஈடற்ற தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. சமூக நீதி ஒளிவிளக்கின் வெளிச்சத்தை இந்திய நாட்டுக்கு வழங்கியது, தமிழகத்தில் வேர் ஊன்றியுள்ள திராவிட இயக்கம்தான்.
இந்தப் பெருமைமிகு மாநிலத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழகத்தில் நடைபெறும் மாநில அரசைத் துச்சமாகக் கருதி, உதாசீனம் செய்வதும், மாவட்ட வாரியாக அதிகார உலா செல்வதும், அமைச்சர்களைக் கூட அரங்கத்திற்குள் அனுமதிக்காமல், அதிகாரிகளை அழைத்து விவாதிப்பதும் அவரது அதிகார எல்லையைக் கடந்த செயலாகும்.
அமெரிக்காவில்தான் மாநில ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. அத்தகைய அதிகாரம் இந்தியாவில் இல்லை என்பதை ஆளுநர் புரோஹித் உணர வேண்டும்.
இதுவரை தமிழகத்தில் ஆளுநர்கள் பின்பற்றி வந்த மரபுகள், நடைமுறைகள் அனைத்தையும் மீறிவரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் போக்கினைக் கண்டித்து, இந்திய அரசியல் சட்டம் வழங்கி உள்ள ஜனநாயக உரிமையின் அடிப்படையில், திமுக அமைதி வழியில் கருப்புக் கொடி அறப்போர் நடத்தி வருகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆளுநர், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124-வது பிரிவைச் சுட்டிக்காட்டி, ஏழு ஆண்டுகள் சிறையில் அடைப்போம் என்று மிரட்டிப் பார்க்கிறார். தமிழகத்தில் நடப்பது ஆளுநர் ஆட்சி அல்ல.
கொடூரமான நெருக்கடி நிலை அவசரச் சட்டத்தின் தாக்குதலையும், சிறைவாசத்தையும் அஞ்சாது எதிர்கொண்ட இயக்கம்தான் திமுக.
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெற்ற காலங்களில்கூட, ஆளுநர்கள் இப்படி மாவட்ட வாரியாக வீதி உலா சென்றதும், அதிகார பேட்டிகள் தந்ததும் இல்லை. தமிழ்நாட்டின் தொழில்முனைவோர்கள் தன்னைச் சந்திக்கலாம் என்று அழைப்பு விடுத்தாரே, இதற்கான அதிகாரம் ஆளுநருக்கு எந்தச் சட்டப் பிரிவின் கீழ் இருக்கிறது?
அதனால்தான் நான் பொதுமேடைகளில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தா? அல்லது தொழில்முனைவோர்களின் புரோக்கரா? என்று கேட்டேன். திமுகவின் செயல் தலைவர், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் குறித்து ஆளுநர் அறிக்கையில் பயன்படுத்தி இருக்கின்ற அறியாமை என்ற சொல், அவரின் ஆணவத்தைக் காட்டுகிறது.
பன்வாரிலால் புரோஹித்தின் மிரட்டலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.இத்துடன் தனது வரம்பு மீறிய மிரட்டல் போக்கையும், நடவடிக்கைகளையும் ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மத்திய பாஜக அரசு ஆளுநரைக் கொண்டு தமிழ்நாட்டில் போட்டி அரசாங்கம் நடத்த முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு  வைகோ தெரிவித்துள்ளார்

ஞாயிறு, 24 ஜூன், 2018

திருமதி உலக அழகி:’ போட்டியில் கலந்துகொண்ட கோவை அழகி

‘திருமதி உலக அழகி:’ போட்டியில் கலந்துகொண்ட கோவை அழகி

கோவை:
மெரிக்காவில் நடைபெற்ற 45 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கான திருமதி உலக அழகி போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற கோவையை சேர்த் ஜெயஸ்ரீ என்ற பேரிளம்பெண் 3வது இடத்தை பெற்றுள்ளார்.
ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு திருமதி இந்திய  அழகி பட்டத்தை வென்ற ஜெயஸ்ரீ தற்போது மீண்டும் திருமதி உலக அழகியாக தேர்வாகி  கலிபோர்னியாவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டனர்.
45வயதிற்கு மேற்பட்ட பேரிளம் பெண்களுக்கான  திருமதி உலக அழகி போட்டி அமெரிக்காவில்  கடந்த 13-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 85 பேர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ பங்கேற்றார்.
இந்த போட்டியில் 3வது இடத்தை  ஜெயஸ்ரீ கைப்பற்றி உள்ளார்.
கோவை சவுரிபாளையத்தில் உடற்பயிற்சி நிபுணராக உள்ள ஜெயஸ்ரீக்கு 49 வயதாகிறது.  திருமணமானவர். அவரது கணவர் பெயர் மகேஷ். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் உள்ளனர்.
திருமதி ஜெயஸ்ரீ ஏற்கனவே  2006-ம் ஆண்டு திருமதி கோவை அழகி பட்டத்தையும், 2016-ம் ஆண்டு திருமதி இந்திய அழகி பட்டத்தையும் வென்றுள்ள நிலையில், தற்போது 2018ம் ஆண்டு மீண்டும் திருமதி இந்திய அழகி படத்தை கைப்பற்ற முயற்சி செய்த நிலையில், 3வது இடத்தில் வந்து  சாதனை படைத்துள்ளார்.

தல தோனியின் சுவாரசியமான பத்து உண்மை தகவல்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

தல தோனியின் சுவாரசியமான பத்து உண்மை தகவல்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?



தோணி என்று சொன்னாலே நமது நினைவிற்கு வருவது கேப்டன் கூல்.எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் கூலா விளையாட கூடிய கேப்டன்..இப்போது அவரை பற்றிய தகவல்களை பார்ப்போம்..

1.தோணியை இந்திய அணியின் கேப்டனாக ஆக்குவதற்கு சச்சின் தான் பரிந்துரை செய்துள்ளார்..
2.தோணி முன்னால் வைத்திருந்த லாங் கேர் ஹிந்தி நடிகர் ஜான் ஆப்ரஹமை பார்த்து தான் வைத்திருக்கிறார்..
3.இவர் தனது புகழ் பெற்ற ஹெலிகாப்டர் ஷாட்டை அவரது நண்பர் சந்தோஷ் லாளிலடம் இருந்து கற்றுக்கொண்டார்.
4.தோணி புட்-பால் விளையாட்டில் சிறந்த கோல் கீப்பராக இருந்து இருக்கிறார்..மேலும் இவருக்கு பேட்-மிட்டன் என்றால் மிகவும் பிடிக்கும்..
5.தோணி15 குளிர்பான மற்றும் ஆடை நிறுவனங்களுக்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்..
6.ஐபிஎல் போட்டியின் முதல் சீசனில் தோணி தான் அதிக ஏலம் எடுக்கப்பட்டவர்.இவர்1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலமெடுக்கப்பட்டார்..
7.டோனியின் மொத்த சொத்து  30மில்லியன் அமெரிக்க டாலர்..
8.தோணி ஒரு பைக் பிரியர்..இப்போது வரை 23 பைக்குகள் வைத்திருக்கிறார்..

9.தோணி மற்றும் தான் ஐசிசி யின் சிறந்த வீரர் என்ற விருதினை இரண்டு முறை பெற்றிருக்கிறார்..
10.தோணி இந்திய கிரிக்கெட் வீரர் ஆவதற்கு முன்பு கராக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக 2003 வரை இருந்தார்..

2000 பேரின் உயிரை காப்பாற்றிய 6 வயது சிறுமிக்கு விருந்தளித்த அமைச்சர்!

2000 பேரின் உயிரை காப்பாற்றிய 6 வயது சிறுமிக்கு விருந்தளித்த அமைச்சர்!

அகர்தாலா: திரிபுராவில் 2000 பேரின் உயிரை காப்பாற்றிய 6 வயது சிறுமிக்கு அம்மாநில அமைச்சர் தன் வீட்டில் விருந்தளித்து நன்றி தெரிவித்தார். 
திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு, தலாய் மாவட்டத்தில் உள்ள அம்பாசா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஸ்வபன் தேவ் வர்மா. இவர், தன் வீட்டு அருகே உள்ள ரயில் பாதை வழியே, தன் மகள் சோமதி உடன் நடந்து சென்றார். அப்போது பலத்த மழை பெய்தது.

இதனால், அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், ரயில் தண்டவாளம் சேதம் அடைந்ததுள்ளது. அப்போது, அந்த வழித்தடத்தில் பயணியர் ரயில் ஒன்று வந்ததுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த  ஸ்வபன் தேவ் வர்மாவும், அவரது மகளும் உடனடியாக தங்கள் சட்டைகளை கழற்றி ரயிலை நிறுத்தும்படி தண்டவாளத்தில் நின்று சைகை செய்தனர்.

இதைப் பார்த்த ரயில் டிரைவர், உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலில் பயணம் செய்த, 2,000 பயணியர் உயிர் தப்பினர்.

இதையடுத்து, ஸ்வபன் தேவ் வர்மா மற்றும் அவரது மகள் சோமதி ஆகியோர் திரிபுரா சட்டப்பேரவைக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். சட்டப்பேரவையில் அவர்களது வீரச் செயலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநில அமைச்சர் ஒருவரும் அவர்களுக்கு தன்னுடைய வீட்டில் விருந்தளித்தார்.

அகர்தாலா: திரிபுராவில் 2000 பேரின் உயிரை காப்பாற்றிய 6 வயது சிறுமிக்கு அம்மாநில அமைச்சர் தன் வீட்டில் விருந்தளித்து நன்றி தெரிவித்தார்.
திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு, தலாய் மாவட்டத்தில் உள்ள அம்பாசா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஸ்வபன் தேவ் வர்மா. இவர், தன் வீட்டு அருகே உள்ள ரயில் பாதை வழியே, தன் மகள் சோமதி உடன் நடந்து சென்றார். அப்போது பலத்த மழை பெய்தது.


இதனால், அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், ரயில் தண்டவாளம் சேதம் அடைந்ததுள்ளது. அப்போது, அந்த வழித்தடத்தில் பயணியர் ரயில் ஒன்று வந்ததுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த  ஸ்வபன் தேவ் வர்மாவும், அவரது மகளும் உடனடியாக தங்கள் சட்டைகளை கழற்றி ரயிலை நிறுத்தும்படி தண்டவாளத்தில் நின்று சைகை செய்தனர்.
இதைப் பார்த்த ரயில் டிரைவர், உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலில் பயணம் செய்த, 2,000 பயணியர் உயிர் தப்பினர்.
இதையடுத்து, ஸ்வபன் தேவ் வர்மா மற்றும் அவரது மகள் சோமதி ஆகியோர் திரிபுரா சட்டப்பேரவைக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். சட்டப்பேரவையில் அவர்களது வீரச் செயலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநில அமைச்சர் ஒருவரும் அவர்களுக்கு தன்னுடைய வீட்டில் விருந்தளித்தார்.