நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் அரசியல் தலையிடும்.! அதனால், எழும் விமர்சனங்களும்.!
~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~
முகப்புரை:
நீதிமன்றங்கள் என்றாலே ஒரு நல்ல நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் வெகுகாலங்களில் இருந்து வரும் ஓர் எதார்த்தமான உண்மை. ஆனால், இன்று அந்த நீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் பார்த்து மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது இருந்த நம்பிக்கை குறைய தொடங்கிவிட்டது. இதற்கு காரணம் நீதிமன்ற தீர்ப்புகளில் அரசியல் நுழைந்தது தான். அரசியல் வாதிகள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நீதிமன்ற தீர்ப்புகளில் நுழைய தொடங்கி விட்டதின் விளைவு, இன்று வெகுமக்கள் நீதிமன்றங்களை விமர்சிக்கும் அளவிற்கு வந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். கடந்த காலங்களில் நீதிமன்றம் சொல்வதை யாரும் விமர்சனம் செய்யாத நிலை இருந்தது. அப்படியே விமர்சனங்கள் வந்தாலும், அவை அரிதானவையாகவே இருக்கும். இப்போதெல்லாம் முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வருகிறதென்றால், அது எப்படி வரும் என்ற விவாதங்கள் தொலைக்காட்சிகளில் மட்டுமல்ல டீக்கடைகளிலும் அனல் பறக்கிறது. அந்தளவிற்கு நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருகின்றன.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்ற வழக்குகளில் அரசியல் தலையிடு தொடங்கியது பற்றி நான் அறிந்து கொண்ட அரசியல் புரிதலில் இருந்து சில தகவல்களுடன் இந்த கட்டுரையை பதிவு செய்கிறேன்.
கட்டுரை தொகுப்பு:
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு:
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ஆண்டுக் கணக்கில் இழுத்தடித்ததும், நீதிபதி குன்ஹா தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி "கூட்டிக் கழித்து", மாற்றி வழங்கி ஜெயலலிதாவை விடுதலை செய்ததும் நீதிபதிகள் குறித்த பார்வையை மாற்ற செய்தது. குமாரசாமி தீர்ப்பின் மீதான, உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்க எடுத்துக் கொண்ட காலமும், சரியாக ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலா முதல்வராக பொறுப்பேற்க காத்திருந்த முதல் நாள் தீர்ப்பு வழங்கி, சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பி வைத்ததும் நீதிமன்றங்களில் "வேறு அதிகாரம்" நுழைவதை வெளிப்படுத்தியது.
பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி சம்பந்தப்பட்ட வழக்குகள்:
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத்தில் அமைச்சராக இருந்த போது நடந்த போலி எண்கவுண்ட்டர் வழக்கை கையாண்ட நீதிபதி லோயாவின் மரணம் குறித்த சந்தேகமும், வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டதும் எல்லோருக்குமே சந்தேகத்தை எழுப்பியது. இதை போல், தற்போது இந்திய பிரதமராக உள்ள நரேந்திர மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்த போது அங்கு நடைபெற்ற கலவரம் குறித்த வழக்கு, இதுவும் அரசியல் தலையிடால் நீர்த்துப் போனது.
2018 மார்ச் மாதத்தில் ஓர் தீர்ப்பு வந்தது, பாண்டிச்சேரி மாநிலம் குறித்தது. பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மூன்று நியமன எம்.எல்.ஏக்களை அறிவித்தார். அந்த நியமனம் செல்லாது என பாண்டிச்சேரி சபாநாயகர் அறிவித்தார். அவர்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க மறுத்தார். வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் வந்தது. தீர்ப்பில், ஆளுநர் செய்த நியமனம் செல்லும் என்ற அறிவிப்பு வந்தது. சபாநாயகரின் நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டது நீதிமன்றத்தால். இங்கு சபாநாயகரின் நடவடிக்கையில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டது.
அடுத்த வழக்கு , தமிழக சட்டப்பேரவை குறித்து. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று, தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் எதிர்த்தனர். கட்சி கொறடா உத்தரவை மீறிய அவர்கள் பதவியை, சபாநாயகர் முறைப்படி பறித்திருக்க வேண்டும். பறிக்க நடவடிக்கை எடுக்காததால், வழக்கு நீதிமன்றம் சென்றது. "சபாநாயகர் நடவடிக்கையில் தலையிட முடியாது", என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
புதுவைக்கு ஓர் தீர்ப்பு, தமிழகத்திற்கு ஓர் தீர்ப்பு என நீதி மேல் மிகுந்த "மதிப்பு" உண்டாகியது. அது இன்று பன் மடங்கு பல்கிப் பெருகுகிறது.
ஓ.பி.எஸ் குரூப் மீது நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க, தினகரன் அணியினர் 18 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய உடன், பாய்ந்து பதவியை பறித்தார் சபாநாயகர் தனபால். இதன் மீதான வழக்கை கையாண்டது தான் அதிக சந்தேகங்களை எழுப்புகிறது. வழக்கில் வாதங்கள் முடிவுற்று, 100 நாட்கள் "விழா கொண்டாடி" தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது இன்று. இவ்வளவு தாமதம் ஏன் ? அந்த 18 தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் இல்லாமலே வருடம் கடந்து விட்டது. மொத்த ஆட்சியும் செயல்படவில்லை என்றாலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாவது குறைந்தபட்சம் தொகுதிக்கு பணி நடக்க உதவும். இந்த 18 தொகுதிகளில் அதுவும் இல்லாத அவலம்.
இது ஒருபுறம் என்றால், 18 எம்.எல்.ஏ'க்கள் தகுதி நீக்க வழக்கில் வந்த தீர்ப்பு இன்னும் அருமை. இரண்டு நீதிபதிகள் ஆளுக்கொரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். சபாநாயகர் தீர்ப்பு 'செல்லும்' என்கிறார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி. 'செல்லாது' என்கிறார் இன்னொரு நீதிபதி சுந்தர். ஒரே சட்டம் இரு வேறு பார்வையை கொடுத்துள்ளது இருவருக்கும். இது கூட பரவாயில்லை.
பாண்டிச்சேரிக்கு, சபாநாயகர் உரிமையில் நீதிமன்றம் தலையிடலாம். 11 பேர் வழக்கில், சபாநாயகர் உரிமையில் தலையிட முடியாது. 18 பேர் வழக்கில், சபாநாயகர் செய்தது சரி என்று சொல்ல முடியும். இப்படி ஒரு சட்டப் புத்தகம் பல்வேறு விதமான வழிமுறைகள் காட்டுகிறது என்றால், இங்கு அரசியல் தலையிடு இருக்கிறது என்று நமக்கு தெளிவாக தெரிகிறது.
"சட்டம் ஒரு இருட்டறை", அண்ணா சொன்னார். இருட்டை விளக்கி விளக்கேற்ற வேண்டியவர்கள், இருட்டில் நடமாடுபவர்களாகவே இருந்தால் என்ன செய்ய...!!!
...நன்றி...
கட்டுரை பதிவு...
பொறியாளர் *ம.சுரேஷ் பாபு*
(மாவட்ட அமைப்பாளர், ஆவண மையம்),
கடலூர்(கி) மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக