பசுமை வழி சாலைக்கு மாற்று வழி சொல்லும் முன்னாள் எம்.பி.! கேட்குமா எடப்பாடி அரசு.!!
பயண நேரத்தை குறைப்பதற்காக சென்னை - சேலம் வரை 8 வழி சாலை அமைப்பதற்கான திட்டத்திற்கு அரசு ரூ.10000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த சாலையானது 5 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியே அமைக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு மாற்று வழி இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில் அவர்கள் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது:-
சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 வழிகள் கொண்ட பசுமை வழிச் சாலை அமைக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்தச் சாலை அமைப்பதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படும், வேளாண் பெருமக்கள் பாதிக்கப்படுவார்கள், மரங்கள் வெட்டப்படும், காடுகள் அழிக்கப்படும் ஆகிய பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கு சட்டமன்றத்தில் விடையளித்த தமிழகத்தின் முதலமைச்சர் ‘’சாலைகள் மூலமே ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். இதனால் ஏற்படும் இழப்புகள் குறைவு. இலாபங்கள் அதிகம்’’ என்று விளக்கமளித்திருக்கிறார். ‘’இந்தச் சாலை அமைக்கப்பட்டால் சேலத்தில் இருந்து சென்னையை மூன்று மணி நேரத்தில் இருந்து மூன்றரை மணி நேரத்தில் அடைந்து விடலாம். இது தொழில் வளர்ச்சிக்கு உதவும்’’ என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
‘’சாலைகள் ஒரு நாட்டின் இரத்தக் குழாய்கள்’’ என்று மறைந்த தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு அவர்கள் குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகள் மிகவும் அவசியம் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. அகலமான, தரமான, விரைவாக செல்லக்கூடிய சாலைகள் வேண்டும் என்ற நோக்கத்திற்காக அரசு பணியாற்ற வேண்டும்.
சேலத்தில் இருந்து சென்னையை மூன்று மணி நேரத்தில் அடைவதற்கான விரைவுச் சாலை வேண்டும் என்பதும் சரியான கருத்தே. ஆனால், இதற்குச் செய்ய வேண்டியது வேளாண் நிலங்களை அழித்து, காடுகளை அழித்து, மரங்களை வெட்டி புதிய சாலைகள் அமைப்பது அல்ல.
அரசுக்கு பல்வேறு இதர வாய்ப்புகள் இருக்கின்றன.
இப்பொழுது சேலத்தில் இருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையை சென்றடைய 5 மணி நேரமே ஆகிறது. இச்சாலையை விரைவுச் சாலையாக மாற்றினால் நிச்சயமாக பயண நேரத்தை குறைக்க முடியும்.
உலகம் முழுவதும் உள்ள அதிவிரைவுச் சாலைகள் (Express Way) அல்லது நெடுஞ்சாலைகள் (Motor way) அல்லது ஜெர்மனியின் ஆட்டோபான் (Autobahn) ஆகிய சாலைகளுடைய அமைப்பு வேறு. நம்முடைய தேசிய நெடுஞ்சாலைகளின் அமைப்பு வேறு. மேலே சொன்ன அதிவிரைவுச் சாலைகள் எவற்றிலும் எந்த இடத்திலும் சிக்னல்கள் கிடையாது, எந்த இடத்திலும் எதிரே வரும் வண்டிக்கு குறுக்காக வண்டியை செலுத்தி ஒரு திருப்பத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. சாலையிலே இணைய விரும்பும் வண்டிகள் செங்குத்தாக வந்து இணையாமல், இணைச் சாலையில் ஒரு குறிப்பிட்ட தொலைவு பயணித்து, அதிவிரைவுச் சாலையில் வண்டி செல்லுகிற வேகத்திற்கு இணையான வேகத்தை அடைந்த பிறகு இணைகிற அளவிற்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, இந்தச் சாலைகள் அனைத்தும் விலங்குகளும், பாதசாரிகளும் குறுக்கே வந்துவிடாத வண்ணம் வேலியிடப்பட்டிருக்கின்றன.
இந்திய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கும், பயணம் காலதாமதமாவதற்கும் முக்கிய காரணங்கள் இத்தகைய குறுக்கீடுகளும், சாலை ஓரங்களில் இருக்கின்ற கடைகளும், அந்தக் கடைகளில் உணவு அருந்தவும், பொருட்கள் வாங்கவும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதினால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலும் தான்.
இந்தக் குறைபாடுகளை நீக்கி, இருக்கின்ற சேலம் – தருமபுரி – கிருஷ்ணகிரி - வேலூர் வழியாக செல்கின்ற நெடுஞ்சாலையை உலகம் முழுவதும் இருக்கின்ற அதிவிரைவுச் சாலைகள் போல அமைத்தாலே மூன்றரை மணி நேரத்தில் சென்னையை அடைந்துவிட முடியும். இதற்காக சிறிய அளவு சில இடங்களில் நிலங்கள் கையகப்படுத்த வேண்டிய அவசியம் வரலாம். ஆனால், நிச்சயம் பெரிய அளவில் நிலங்கள் கையகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.
இரண்டாவதாக சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாகச் சென்று திருச்சி – சென்னை நெடுஞ்சாலையை அடையும் சாலை இருக்கிறது. இது கட்டணச் சாலை. தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகிற சாலை. ஆனால் இந்தச் சாலை மோசமான வடிவமைப்பு கொண்டதாக இருக்கிறது. சில இடங்களில் நான்கு வழிச் சாலையாக இருக்கிறது, திடீரென்று இரண்டு வழிச் சாலையாக மாறிவிடுகிறது. நான்கு வழிச்சாலையாக இருக்கும் போது இருபுறங்களில் செல்கிற வாகனத்தை பிரிக்கிற மீடியன் என்று சொல்லக்கூடிய அந்த நடு அமைப்பு இருக்கிறது. திடீரென்று எந்த அமைப்பும் இல்லாத இருவழிச் சாலையாக மாறி எதிரே வண்டி வருகிறது. நான்கு வழிச் சாலை இரண்டு வழிச் சாலையாக மாறுகிற இடங்களில் எந்தவித எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் இல்லை. அந்தச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் முறைகளும் அபாயகரமானதாக இருக்கிறது. அங்கே இருக்கிற பல கல்வி நிறுவன வாகனங்களும், தனியார் வாகனங்களும், அரசு வாகனங்களும் கூட திடீரென எதிரே தவறான வழியிலே வருவதைப் பார்க்கலாம். முறையான நான்கு வழிச் சாலையாக அமைக்காமல் ஒரு சாதாரண சாலைக்காக கட்டணம் வாங்குவது என்பதே அநியாயமானது.
புதியதாக பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, சேலத்தில் இருந்து வாழப்பாடி – ஆத்தூர் - கள்ளக்குறிச்சி வழியாக அமைக்கப்பட்டு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் அந்த நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து, முறையான அதிவிரைவுச் சாலையாக முன்னே குறிப்பிட்டது போல இருபுறமும் வேலிகள் அமைத்து பாதசாரிகளும், விலங்குகளும் குறுக்கே வராத வண்ணம் திட்டமிட்டு, சிக்னல்களும், சாலைப் பிரிவுகளும் இல்லாமல் அமைத்தால் அந்தச் சாலைகளின் பயண நேரமும் இப்பொழுது இருக்கிற ஐந்து அல்லது ஐந்தரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாகக் குறையும் வாய்ப்பு இருக்கிறது.
மூன்றாவது வாய்ப்பாக சேலத்தில் இருந்து அயோத்தியாப்பட்டிணம் – அரூர் – ஊத்தங்கரை – திருப்பத்தூர் வழியாகச் சென்று பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையினை இணைக்கும் சாலை இருக்கிறது. இந்தச் சாலையை விரிவாக்கி, தேசிய நெடுஞ்சாலையாக அறிவித்து, தேசிய நெடுஞ்சாலைகளுக்கான அம்சங்களோடு அமைத்தால் பயண நேரத்தை நிச்சயம் மூன்று மணி நேரமாகக் குறைக்க முடியும்.
இவற்றை விட முக்கியமாக, உலகம் முழுவதும் பொருட்களை ஏற்றிச் செல்ல பெருமளவில் தொடர்வண்டிகளே பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் தொடர்வண்டி சேவை இன்னமும் பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டிய அவசியமும், வாய்ப்பும் இருக்கிறது. சென்னை – கோயம்புத்தூர், சென்னை – கன்னியாகுமாரி தொடர்வண்டிப் பாதைகளில் ஏற்கனவே இருக்கிற இரண்டு வழிப்பாதைகளின் ஓரம் இன்னும் ஒரு பாதை, முழுக்க, முழுக்க சரக்கு வண்டிகள் பயணத்திற்காக ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், திட்டமும் நீண்ட நாட்களாக இருக்கிறது.
சாலைப் பயணம் அதிக செலவாகக் கூடியது. தொடர்வண்டிப் பயணத்தைவிட அதிகமான விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. கோயம்புத்தூர் – சென்னை, கன்னியாகுமாரி – சென்னை இடையே ஏற்கனவே இருக்கிற இரண்டு வழி தொடர்வண்டிப் பாதைகளின் அருகில் தனியாக சரக்கு தொடர்வண்டிப் போக்குவரத்திற்கான ஒரு ' சரக்குப் பாதை அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் குறைந்த செலவில் அதிக அளவில் பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். தொடர்வண்டிப் பயணம் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானது, செலவு குறைவானது, விபத்து குறைவானது.
இப்படி பசுமை வழிச்சாலைக்கான மாற்று வழிகள் பல இருந்தாலும், தமிழக அரசு பசுமைச் சாலையை அமைத்தே தீருவேன், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் - தூத்துக்குடியில் நடந்ததுப் போல துப்பாக்கியால் சுட்டாவது எங்களுடைய திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று அடம்பிடிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நம்முடைய நாட்டில் ஏற்கனவே இருக்கிற அமைப்புகளை செம்மைப்படுத்துவதைவிட, புதிய திட்டங்களை அறிவிப்பதிலும், செயல்படுத்துவதிலும் அரசாங்கங்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டும். அதற்குக் காரணம் 10,000 கோடிக்கு ஒரு சாலை அமைத்தால் இன்றைக்கு இருக்கிற நிலவரப்படி ஒரு 4,000 கோடி ரூபாய் ஆளும் கட்சிக்கு லஞ்சமாக கிடைக்கிற வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பணம் ஒரு சட்டமன்றத் தேர்தல் செலவை சம்பாதிப்பதற்கான எளிதான வழியாக இருக்கக் கூடும்.
ஆனால், அதே சமயம் எல்லா சாலைகளையும் செம்மைப்படுத்தி தரம் உயர்த்த வேண்டுமென்றால் இதே செலவானாலும் இப்படி ஒரே ஒரு ஒப்பந்ததாரரிடம் அந்தப் பணியைக் கொடுத்து எளிதாக லஞ்சம் பெற முடியாது.
உதாரணமாக, மருத்துவக் கல்லூரியில் புதிய கருவிகள் வாங்குவது மிக எளியது. அரசாங்கத்திடம் இருக்கிற பட்ஜெட்டில் குறிப்பிட்ட பணத்தை ஒதுக்கி உடனடியாக வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். 8 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கருவி இருக்கும். அந்தக் கருவி ஒரு 50 ரூபாய் மதிப்புள்ள சிறிய ஒரு டியூப் இல்லாத காரணத்தினால் வேலை செய்யாது. அந்த 50 ரூபாயை பெறுவதற்கான நடைமுறை குழப்பமானதாகவும், பல அடுக்குகள் உள்ளதாகவும், கடினமானதாகவும் இருக்கும். அந்த 50 ரூபாய் உதிரிபாகம் இல்லை என்ற காரணத்திற்காக 8 இலட்சம் ரூபாய் கருவி பல மாதங்கள் பயனற்றுக் கிடக்கும். கடைசியாக அந்த டியூப் கிடைத்தாலும் அந்தக் கருவி வேலை செய்யாது. இது தான் இந்தியாவினுடைய நிர்வாக அமைப்பு.
அதனால் தான் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் போக்குவரத்தை மேம்படுத்தக் கூடிய வாய்ப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியும், அக்கரையும் இல்லாமல் வேளாண் நிலங்களை கையகப்படுத்தி, காடுகளை அழித்து இன்னொரு புதிய சாலை அமைப்பதற்கு அரசு முனைகிறது. இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் குரல்வலைளை துவக்கத்திலேயே நெறிக்க முற்படுகிறது. எதிர்ப்பவர்களை சமூகவிரோதிகளாகச் சித்தரிக்க முயல்கிறது.
நாட்டின் சுகாதாரத்தை காக்க வேண்டிய அமைச்சர் அந்தப் பணியை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு மிதமானது. ஆனால், மக்களுடைய உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் குட்கா விற்பனையில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஆபத்தானது. அந்த நிலை தான் தமிழகத்தில் இருக்கிறது. இந்த அரசாங்கங்களுக்கு மக்களைப் பற்றிய கவலை இல்லை என்பது ஒரு எல்லை. அதனையும் தாண்டி ஆட்சியாளர்கள் மக்களுக்கு துயரங்களை விளைவிப்பதற்கு தயக்கமே இல்லாத கொடூர மனிதர்களாக இருக்கிறார்கள் என்பது தான் இந்திய ஜனநாயகத்திற்கு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற மிகப் பெரிய ஆபத்தும், சவாலும்.
சரிந்து கொண்டிருக்கும் மக்கள் விரோத அரசுகளின் கடைசி உக்தியாக அடக்குமுறைகள் வரலாறு நெடுகிலும் இருந்திருக்கிறது. அவை எல்லாமே அடக்குமுறையாளர்களின் தோல்வியாகவும் வெகுமக்களின் போராட்டங்களின் வெற்றியாகவுமே முடிந்திருக்கின்றன.
இவ்வாறு மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா செந்தில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக