மயக்கம் வந்துவிட்டது..! அதிர்ச்சியில் இருந்து மீளாத நடிகை சஞ்சனா..
சென்னையில் நடிகை சஞ்சனா சிங்கிடம் மர்ம நபர்கள் செல்போன் பறித்த நிலையில், அந்த சம்பவத்தில் இருந்து தன்னால் மீள முடியவில்லை என்று சஞ்சனா சிங் கூறியுள்ளார்.
சென்னையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற வழிப்பறி சம்பவங்கள் அளவுக்கு மீறி அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் ரேனிகுண்டா படத்தில் அறிமுகமாகி அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை அஞ்சனா சிங்கிடம், அண்ணாநகரில் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முகப்பேரில் வசித்து வரும் சஞ்சனா சிங் எப்போதும் உடற்பயிற்சிக்காக சைக்கிள் பயணம் மேற்கொள்வது வழக்கம். நேற்று காலை 6 மணி அளவில் அண்ணா நகரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சைக்கிளிலேயே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அண்ணாநகர் சிந்தாமணி சிக்னல் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அவரிடமிருந்த செல்போனை பறித்துச் சென்றார். இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனை பறிகொடுத்த சஞ்சனா சிங் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமலேயே உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
"நான் தினமும் காலை 5.30 மணியளவில் இருந்து 6.30 மணி வரையில் செல்வது வழக்கம். கொஞ்சம் நீண்ட தூரம் சென்றால் பிட்னஸ் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். கீழ்ப்பாக்கத்தில் உள்ள எனது சகோதரியின் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தேன்.
எனக்கு சரியாக வழி தெரியாததால் செல்போனில் ‘‘கூகுள் மேப்’’ பார்த்தபடியே சைக்கிள் ஓட்டிச் சென்றேன். அப்போது தான் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் எனது செல்போனை திடீரென்று பறித்துச் சென்றான். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் திருடன் திருடன் என்று சத்தம் போட்டேன். சத்தம் போட்டுக் கொண்டே சைக்கிளை நான் வேகமாக ஓட்டினேன்.
ஆனால் செல்போனை பறித்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டான். இதனால் என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை. மயக்கம் வந்துவிட்டது. செல்போனில் உள்ள போட்டோ, வீடியோ எல்லாம் போய்விட்டது. எனவே செல்போனில் பேசிக் கொண்டு செல்பவர்கள் கவனமாக செல்லுங்கள். செயின் அணிந்து செல்பவர்களும் அதனை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்."
இவ்வாறு சஞ்சனாசிங் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக