திங்கள், 18 ஜூன், 2018

தங்க தமிழ்செல்வன் வாபஸ் பின்னணி: தினகரனின் வியூகமா..? திவாகரனின் சதியா..?

தங்க தமிழ்செல்வன் வாபஸ் பின்னணி: தினகரனின் வியூகமா..? திவாகரனின் சதியா..?

டிடிவி.தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தகுதி நீக்க வழக்கை வாபஸ் எடுத்த முடிவு அந்தக் கூடாரத்தை மட்டுமின்றி, பிற கட்சியினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தினகரன் மீது கொண்ட அதிருப்தியால் எடுத்த முடிவு என தினகரன் தவிர்த்த இதர சசிகலா குடும்பத்தினரும். இல்லை... இல்லை... டி.டி.வியும், தங்க தமிழ்ச்செல்வனும் இணைந்து குட்டையைக் குழப்பி தங்களது ஆதரவாளர்களை தக்க வைத்து கொள்ள மேற்கொள்ளும் வியூகம் என தினகரன் தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் இரு வேறு தீர்ப்புகளை அளித்தது. இதனால், வழக்கு தற்போது மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வர எப்படியும் குறைந்தது மூன்று மாதங்கள் ஆவது ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக அரசின் ஆயுள் மேலும் ஒன்பது மாதம் முதல் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவே, நீக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை வாபஸ் பெற்றுவிட்டால், வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகிவிடும். 18 தொகுதிகளும் காலியாக உள்ளது என்று அறிவிப்பு வெளியாகும். தேர்தல் ஆணையமும் உடனடியாக தேர்தலை நடத்தும்.

இதில், தினகரன் தரப்பு மற்றும் தி.மு.க-வுக்கு சாதகமான சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், பெரும்பான்மை இல்லாத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தானாகவே பதவியில் இருந்து இறங்க வேண்டியிருக்கும்.
ஆட்சி அதிகாரம் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதால், பெரும்பாலான அ.தி.மு.க-வினரும் அங்கேயே ஒட்டியிருக்கின்றனர். ஆட்சி அதிகாரம் பறிபோனால் தானாகவே தொண்டர்களும் நிர்வாகிகளும் தன் பக்கம் வந்துவிடுவார்கள் என்று டி.டி.வி.தினகரன் கருதுகிறார். இதனால், பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களிடம் வழக்கை வாபஸ் பெறுங்கள் என்று கூறியுள்ளளாராம். மேலும், இடைத்தேர்தலில் மீண்டும் உங்களையே நிறுத்தி, எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்து வெற்றிபெற வைப்பதாக கூறியுள்ளாராம். ஒவ்வொரு தொகுதியையும் ஆர்.கே.நகராய் நினைப்போம், ஜெயிப்போம்’ என தினகரன் நம்பிக்கையூட்டினார்.
மொத்தமாக எல்லாரும் ராஜினாமா செய்யாமல் முதலில் ஒருவர் ராஜினாமா செய்துவிட்டு, அவர்களின் ரிசல்ட் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு, பின்னர் ஒவ்வொருவராக ராஜினாமா செய்யலாம் என திட்டமிட்டுள்ளனர். இதற்கு முதல் ஆளாக தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவு தெரிவித்துள்ளார். முதல் ராஜினாமாவை தானே செய்வதாகவும் முன்வந்தார். 
தொகுதி மக்களுக்கு எதுவுமே செய்ய முடியாமல் தான் ராஜினாமா செய்ததாகவும், இதன் மூலம் அனுதாபம் கிடைக்கும் எனவும், அதை வைத்து மீண்டும் போட்டியிட்டு ஜெயிக்க தன்னால் முடியும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். ஆகவே, தங்க தமிழ்செல்வனின் ராஜினாமா திட்டத்தால் எங்கள் அணிக்குள் எந்த குழப்பமும் இல்லை. மாறாக இது மற்ற கட்சியினருக்கு எதிராக வகுக்கப்பட்டுள்ள வியூகம்’ என்கிறார்கள் தினகரன் அணியினர். 
ஆனால், தினகரன் மீது கொண்ட அதிருப்தியால்தான், தங்க தமிழ்செல்வன் வழக்கை வாபஸ் பெறும் முடிவுக்கு வந்து இருக்கிறார் என்கிறார்கள் சசிகலா குடும்ப கோஷ்டியினர்.
‘தொடக்கத்தில் இருந்தே சசிகலா ஆதரவாளராக இருந்து வருகிறார் தமிழ்ச்செல்வன். இதை தினகரன் விரும்பவில்லை. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலா சென்றதில் இருந்தே, 'அவரை யாரெல்லாம் சந்திக்க வேண்டும்' என்பதில் தெளிவாக இருந்தார் தினகரன். சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசுவதற்குப் பலமுறை முயற்சி செய்தும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடராஜன் மரணத்துக்குப் பரோலில் வந்த சசிகலாவை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் சிறைக்குச் செல்வதற்கு முதல் நாளிலேயே அதற்கான அனுமதி கிடைத்தது. ஆனால், தினகரன் கோஷ்டி அருகில் இருந்து நோட்டம் விட்டது.
 'தன்னைத்தாண்டி யாரும் சசிகலாவை நெருங்கிவிடக் கூடாது' என்பதில் தினகரன் உறுதியாக இருப்பது தங்க தமிழ்செல்வனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம், ’சின்னம்மா என்ன சொல்கிறாரோ அதன்படிதான் செயல்பட்டு வருகிறேன். அவர் யார் பேச்சைக் கேட்க வேண்டும் என அறிவுறுத்திவிட்டுச் சென்றாரோ அதில் இருந்து இன்றுவரை இம்மியளவும் மாறவில்லை. ஆனால், சிலர் என்னை நம்ப மறுக்கிறார்கள். 
குவைத்தில் சின்னம்மா பேரவை என்னும் அமைப்பு சார்பில் பேசுவதற்கு எனக்கு அழைப்பு விடுத்தார்கள். இதற்காக, தினகரனிடம் அனுமதி கேட்டேன். ' இப்படியொரு கூட்டத்துக்குப் போக வேண்டாம்’ என தடை போட்டு விட்டார். எனவே, அந்த அமைப்பின் பெயரை மாற்றுமாறு குவைத் நிர்வாகிகளிடம் கேட்டேன். அவர்களும், ’தினகரன் பேரவை’ என மாற்றினார்கள். அதன் பிறகே இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உடனடியாக அனுமதி கொடுத்தார் தினகரன். இப்படித்தான் அ.ம.மு.க சென்று கொண்டிருக்கிறது. சின்னம்மா பெயரை பயன்படுத்துவதையே விரும்பாத இவரை நம்பி நாங்கள் எப்படி இருப்பது?' எனப் பேசியிருக்கிறார். 
இந்த அதிருப்தியின் தொடக்கமாகத்தான் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் அதிரடி முடிவை அவர் எடுத்திருக்கிறார்’ என்கிறார்கள் சசிகலா கோஷ்டியை சேர்ந்தவர்கள்.
மேலும், அவர்கள் இதுகுறித்து கூறும்போது, ‘ தினகரனும் ,தங்க தமிழ்செல்வனும் இணக்கமாக செயல்படுவது போல வெளிஉலகுக்குக் காண்பித்தாலும் உள்ளுக்குள் நிலவரம் கலவரமாகத்தான் இருக்கிறது. இப்போது வரை தங்க.தமிழ்ச்செல்வன் உள்பட சில எம்.எல்.ஏக்களின் செலவுகளை விவேக்தான் கவனித்து வருகிறார். அவரிடம்தான் மனக்குமுறல்களை எல்லாம் இறக்கி வைக்கிறார்கள். இந்தத் தகவல் சசிகலா கவனத்துக்குச் செல்லும் எனவும் அவர் நம்புகிறார்" என விவரிக்கிறார்கள்.
’’திவாகரனுடன் தினகரன் மோதியதையும் தங்க.தமிழ்ச்செல்வன் ரசிக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகள் இணைந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அறிவித்த நெருக்கடியான நிலையிலும், எங்கள் குடும்பத்திற்கும், அணிக்கும் ஊக்கம் தரும் வகையில், ஆதரவாக இருந்து வந்த நாஞ்சில் சம்பத்தையும், அதிமுக அம்மா அணி கர்நாடக மாநில தலைவர் புகழேந்தியையும் நன்றி மறந்து ஒதுக்கி வைத்தவர்தான் இந்த தினகரன். அதே நிலை தங்களுக்கும் நாளை ஏற்படலாம் என்பதை உணர்ந்துதான் தங்க தமிழ்செல்வன் இந்த முடிவை எடுத்திருக்கிறார்’’ என்கிறார் சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர் ஒருவர்.
இந்த இரு தரப்பினரது விளக்கங்களும் தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் அளித்த மாறுபட்ட தீர்ப்பை போல தினகரன் - தங்க தமிழ்செல்வன் உறவும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது.
இந்தக்குழப்பத்திற்கு பின்னால் இருப்பது திவாகரன் என்கிறார்கள் மற்றொரு தரப்பினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக