பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டு சிறை, அபராதம்- கவர்னர் மாளிகை எச்சரிக்கை
தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்ற பின்பு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.ஆரம்பத்தில் இருந்தே இதற்கு, தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கவர்னர் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டி வருகின்றனர். இருந்தபோதிலும் அதை கருத்தில் கொள்ளாமல், தனது பணியை கவர்னர் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக் கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கம்போல் தி.மு.க. வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக 293 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதற்கு கண்டனம் தெரிவித்தும், கவர்னர் பதவி விலக கோரியும் சென்னையில் நேற்று முன்தினம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. வினர் கருப்புக்கொடியுடன் கவர்னர் மாளிகையை முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கவர்னரை பணி செய்ய விடாமல் தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கவர்னர் மாளிகை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாநில கவர்னர், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சுதந்திரமாக சென்று ஆய்வு நடத்த அரசியலமைப்பு சட்ட அதிகாரத்தின்படி உரிமை உள்ளது. கவர்னரின் ஆய்வு குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது.மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற அடிப்படையில் கவர்னர், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தற்போது உள்ள சூழ்நிலையில் கவர்னர் மிகச்சரியான முடிவை மேற்கொண்டு வருகிறார்.
மாவட்டம் தோறும் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தும்போது அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து அதிகாரிகள் எடுத்துக்கூறுகின்றனர். அதுபோன்று நடைபெற்ற எந்த கூட்டத்திலும், குறிப்பிட்ட துறையின் செயல்பாடுகள் குறித்து கவர்னர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதிகாரிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிப்பது இல்லை.
மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அந்த திட்டத்தின் மூலம் செய்துள்ள சாதனை குறித்து அதிகாரிகள், கவர்னருக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சிகொள்கின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினர் மக்களை திசைதிருப்ப முயற்சிக்கின்றனர்.கவர்னரை பணி செய்ய விடாமல் தடுத்து அவரது அலுவலகத்தை முற்றுகையிடவோ அல்லது கவர்னர் அலுவலக சாலையை மறித்து போராட முயன்றாலோ அதை தடுக்க இந்திய தண்டனை சட்டத்தின் 124-வது பிரிவு வழிவகை செய்கிறது.
அந்த சட்டம், கவர்னரை பணி செய்ய விடாமல் தடுத்தாலோ அல்லது முற்றுகை போன்ற ஏதாவது ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டாலோ 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கலாம் என்று கூறுகிறது.இனிமேல் யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் இந்த சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள். ஆரம்பத்தில் கவர்னர் மாவட்டம் தோறும் ஆய்வு மேற்கொண்ட போது எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை அழைத்து கவர்னரின் ஆய்வு தொடர்பாக சட்டத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து எடுத்து கூறப்பட்டது.
சட்டத்தை புரிந்து கொண்டு அவர்கள் தங்களது நடவடிக்கையை மாற்றிக்கொண்டு சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு போதிய கால அவகாசமும் வழங்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவே கவர்னர் தனது பணியை செய்து வருகிறார்.எனவே, சட்டத்தை மீறி நடப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கவர்னரின் ஆய்வுப்பணி காரணமாக சாதாரண பொதுமக்கள் பயன்பெறுவதால் இந்த ஆய்வுப்பணி அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக