வெள்ளி, 22 ஜூன், 2018

பகவான் ஆசிரியரை மேலும் 10 நாட்கள் அதே பள்ளியில் தொடர்ந்து பணி செய்ய அனுமதி வழங்கினார்.


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசினர் உயர்நிலை பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பகவான், சுகுணா ஆகியோருக்கு நேற்று முன்தினம் பணி மாறுதல் வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து மாணவ–மாணவிகள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்தனர். இவர்களில் பகவான் திருத்தணி அருகே அருங்குளத்திற்கும், சுகுணா வேலஞ்சேரிக்கும் பணி மாறுதலானார்கள்.

இந்த நிலையில் பணிவிடுவிப்பு கடிதம் பெற ஆசிரியர் பகவான் நேற்று பள்ளிக்கு வந்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அரவிந்திடம் அவர் பணிவிடுவிப்பு கடிதம் பெற்றுக்கொண்டு அவர் பள்ளியை விட்டு வெளியே வந்தார்.

அப்போது ஆசிரியர் வந்த தகவலறிந்து ஏராளமான மாணவ–மாணவிகள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரை செல்ல விடாமல் தடுத்தனர். ‘‘நீங்கள் வேறு பள்ளிக்கு சென்றால் நாங்கள் பள்ளிக் கூடத்துக்கே வரமாட்டோம்’’ என்று மாணவ–மாணவிகள் உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதை கண்டு ஆசிரியர் பகவானும் கண்ணீர் விட்டார்.

இந்த காட்சியை கண்ட அங்கிருந்தவர்களும் மனம் வேதனை அடைந்தனர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் அரவிந்த் மற்றும் பிற ஆசிரியர்களும் அவர்களை தேற்றினார்கள்.

மாறுதலில் செல்லும் ஆசிரியரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அனுமதி பெற்று வாரத்தில் இரு நாட்கள் இங்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அரவிந்த் மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டு மாணவ–மாணவிகள் ஆசிரியர் பகவான் மேல் கொண்டுள்ள பாசத்தை தெரிவித்தார்.
இதை கேட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆச்சர்யம் அடைந்தார். அந்த ஆசிரியரை மேலும் 10 நாட்கள் அதே பள்ளியில் தொடர்ந்து பணி செய்ய அனுமதி வழங்கினார்.
இதுகுறித்து மாநில கல்வித்துறை இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது ஆலோசனை பெற்ற பிறகு ஆவன செய்யலாம் என கூறினார். இதையடுத்து ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் தனது பணியை தொடர்ந்தார்.
.... நன்றி தினதந்தி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக