திங்கள், 18 ஜூன், 2018

அணைகள் பாதுகாப்பு கருதி தண்ணீரை திறந்த கர்நாடகா- ஒகனேக்கலில் வெள்ளப்பெருக்கு

அணைகள் பாதுகாப்பு கருதி தண்ணீரை திறந்த கர்நாடகா- ஒகனேக்கலில் வெள்ளப்பெருக்கு

கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகள் நிரம்பின. இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
பிலிகுண்டுலு வழியாக நேற்று அதிகாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந் தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை மத்திய நீர்வள துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பரிசலில் சென்று அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் புதிதாக தோன்றிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் காவிரி ஆற்றுக்கு செல்லும் நடைபாதை நுழைவு வாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல முடியாதபடி கயிறு கட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
விடுமுறை நாளையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஒகேனக்கல்லில் இருந்து ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 40 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 616 கனஅடியாகவும் இருந்தது. கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று பகலில் வந்து சேர்ந்ததை அடுத்து மாலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரத்து 87 கன அடியாக அதிகரித்தது.
இதனிடையே கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக