செவ்வாய், 27 மார்ச், 2018

மது விற்பனையில் 'சசி' நிறுவனம் சாதனை 14 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி அள்ளியது

மது விற்பனையில் 'சசி' நிறுவனம் சாதனை 14 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி அள்ளியது...

கோவை, : சசிகலாவின் உறவினர்களால் நடத்தப்படும், *'மிடாஸ்' நிறுவனம், தமிழக அரசுக்கு, 14 ஆண்டுகளில், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மதுபானங்களை விற்று, சாதனை படைத்திருப்பது தெரிய வந்துள்ளது.*
கடந்த, 2001 - 2006, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தின் போது, 'தமிழகத்தில், மதுக்கடை களை அரசே ஏற்று நடத்துவது' என, முடிவு செய்யப்பட்டது. 2003ல் அரசு இந்த முடிவை எடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன், 2002 அக்., 28ல், 'மிடாஸ் கோல்டன் டிஸ்டிலெரிஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில், மதுபான தயாரிப்பு நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் துவங்கப்பட்டது.

*எகிறிய கொள்முதல்!*
வேறு மூன்று நபர்களால் துவங்கிய இந் நிறுவனத்தில், 2004ல், சசிகலாவின் உறவினர் களான ராவணன், சிவகுமார் மற்றும் கார்த்தி கேயன் கலியபெருமாள் நியமிக்கப்பட்டனர். அதன் பின், ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் நிறுவனத்துக்குமான முக்கிய, 'சப்ளையர்' ஆக, 'மிடாஸ்' நிறுவனம் மாறியது.

ஆண்டுக்கு ஆண்டு, இதன் வர்த்தகம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. டாஸ்மாக் மதுக்கடைகள் துவங்கிய ஆண்டில், இந்த நிறுவனத்திலிருந்து, வெறும், 130.82 கோடி ரூபாய்க்கு மட்டுமே, அரசின் சார்பில் மது பானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

அடுத்தடுத்த இரு ஆண்டுகளில், கொள்முதல் தொகை, 490.06 கோடி - 872.61 கோடி ரூபாய் என, உயர்ந்தது. கடந்த, 2006ல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.

இதனால், 'மிடாஸ்' நிறுவனத்திலிருந்து மது பானம் கொள்முதல் செய்வது நிறுத்தப் பட்டது. தங்களது நிறுவனத்திலிருந்து மது கொள்முதல்
செய்ய அரசுக்கு உத்தரவிடும் படி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் ராவணன். அதன்பின், 2007 - 08ல் துவங்கி, 2010 - 11 வரை, தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மட்டும், 2,773 கோடிக்கு, 'மிடாஸ்' நிறுவனத்திடமிருந்து, மதுபானங்களை டாஸ்மாக் கொள்முதல் செய்தது.

அ.தி.மு.க., 2011ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்நிறுவனத்தின் உற்பத்தியும், விற்பனையும் உச்சம் தொட்டது. புதிது புதிதாக சரக்குகளை அறிமுகப்படுத்தி, அவற்றைத் தான் குடிக்க வேண்டுமென்ற தலைவிதி, தமிழ்நாட்டு, 'குடி' மகன்கள் தலையில் எழுதப்பட்டது.

இதன் காரணமாக, 2011 - 12ல், 1,404 கோடி ரூபாய், 2012 - 13ல், 1,729 கோடி ரூபாய், 2013 - 14ல், 2,280 கோடி ரூபாய், 2014 - 15ல், 2,736 கோடி ரூபாய், 2015 - 16ல், 3,283 கோடி ரூபாய் என, ஐந்தாண்டுகளில், 11 ஆயிரத்து, 432 கோடி ரூபாய்க்கு சரக்குகளை அரசுக்கு விற்றது, 'மிடாஸ்' நிறுவனம். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை, அ.தி.மு.க., கைப்பற்றிய பின், 'மிடாஸ்' இன்னும் உத்வேகம் பெற்றது.

*புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உடல்நலக் குறைவுடன் இருந்த, 75 நாட்களிலும் கூட, 'மிடாஸ்' நிறுவனத்தின் சரக்கு உற்பத்தியோ, சப்ளையோ குறையவில்லை. நடப்பு நிதியாண்டில், 'மிடாஸ்' நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்த மதுபானத்தின் மதிப்பு, 4,000 கோடி ரூபாயைத் தாண்டி விட்டதாகத் தெரிய வந்துள்ளது.* மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தத் துவங்கியதிலிருந்து தற்போது வரை, 14 ஆண்டுகளில், ஒட்டு மொத்தமாக, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு, 'மிடாஸ்' நிறுவனத்தால், தமிழக அரசுக்கு, 'சரக்கு' விற்கப்பட்டுள்ளது. இப்போது, 11 நிறுவனங்களிட மிருந்து மதுபானங் களை டாஸ்மாக் கொள்முதல் செய்தாலும், 'டாப்'பில் இருப்பது, 'மிடாஸ்' தான்.'

*அடாஸ்' விற்கும் 'மிடாஸ்'*

இதுவரை, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ள, 'மிடாஸ்' நிறுவனம், 2002ல் துவக்கப் பட்ட போது, அதன் முதலீடு, வெறும், 16 கோடி ரூபாய் மட்டுமே. இதைத் தவிர்த்து, 3.12 கோடி ரூபாய், செலுத்து மூலதனமாக செலவிடப்பட்டது. ஆனால், 'குடி'மகன்களால், 'அடாஸ்' சரக்கு எனப்படும் மோசமான சரக்குகளை விற்றே, பல ஆயிரம் கோடியை, 'மிடாஸ்' சம்பாதித்துள்ளது.

அம்மா அவர்கள் முதல்வராக இருந்த போதே கோலோச்சி வந்துள்ளது இந்நிறுவனம். *மதுக்கடைகளின் எண்ணிக்கை குறையலாம்; மிடாஸ் நிறுவனத் தின் வர்த்த கமோ, சசிகலா குடும்பத்தினரின் வருமானமோ குறையவே குறையாது.* இது, தமிழ்நாடு, 'குடி' மகன்களுக்கான சாபக்கேடு.

*மிடாஸ்... கைமாறிய கதைகள்!*
ஆரம்ப காலத்தில், கிட்டப்பா, நாகையன் மற்றும் அன்புக்கரசு என, மூன்று பேர், இதன் இயக்குனர்களாக இருந்தனர். மதுக்கடைகளை அரசு எடுத்ததற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2004ல், சசிகலா சித்தப்பாவின் மருமகன் ராவணன், சசிகலாவின் அண்ணன் மருமகன் சிவகுமார், இந்த நிறுவனத்தின் இயக்குனர் களாக உள்ளே நுழைந்தனர்.

இதிலிருந்து, 2012ல், ராவணன் வெளியேற்றப் பட்டார்.அவருக்குப் பதிலாக, கார்த்திகேயன் கலியபெருமாள், நியமிக்கப்பட்டார். தற்போது இவரும், சிவகுமாரும் இதன் இயக்குனர்களாக உள்ளனர்.சசிகலா மற்றும் இளவரசிக்கு சொந்தமான இரு நிறுவனங்கள், 'மிடாஸ்' நிறுவனத்தின் பெரும் பங்கை, 2009ல் வாங்கின.

இவ்விரு நிறுவனங்கள் உட்பட சசிகலா, இளவரசி மற்றும் உறவினர்களால் நிர்வகிக்கப் படும், 11 நிறுவனங்கள், சொத்துக் குவிப்பு வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட நிறுவனங்கள். அவற்றிலுள்ள இயக்குனர்கள், வர்த்தகம், வருடாந்திர வருவாய் இவற்றை எல்லாம் பார்த்தால், யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு தலை சுற்றிவிடும். *சசிகலா குடும்பத்தின், 'இமாலய' சொத்துக் குவிப்பில், 'மிடாஸ்' ஒரு முக்கியச் சிகரம்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக