வெள்ளி, 23 மார்ச், 2018

மதி இன்றைய தலைப்பு செய்திகள்-20

மதி இன்றைய தலைப்பு செய்திகள்-20


*தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் : ரஜினி*

சென்னை: தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியுள்ளார். ஈரோடு மாவட்ட ரசிகர்கள் மத்தியில் காணொலி காட்சி மூலம் ரஜினி பேசியுள்ளார். மற்ற மாநிலங்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

*ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதிநீக்கம் செய்தது செல்லாது : டெல்லி ஐகோர்ட்*



டெல்லி: ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தகுதி நீக்க வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது. இரட்டை பதவி வகித்ததாக கூறி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்டது.

*எண்ணூர்-தூத்துக்குடி வரை கேஸ் பைப்லைன் திட்டம் : மத்திய அரசு அனுமதி*

சென்னை: எண்ணூரிலிருந்து தூத்துக்குடி வரை கேஸ் பைப்லைன் பதிக்கும் திட்டத்திற்கான நிலத்தை கையகப்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மத்திய அரசு அரசாணை அளித்து, அனுமதி தந்துள்ளது. எண்ணூர்-பெங்களூர்-புதுச்சேரி-நாகை-மதுரை-தூத்துக்குடி இடையே நிலத்தை கையகப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1004 ஏக்கர் நிலம் கையகப்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

*ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : கார்த்திக் சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன்*

டெல்லி : ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான் கார்த்திக் சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம்   ஜாமீன் வழங்கியது. அமலாக்கத்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

*ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: நிபந்தனை ஜாமீன் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்*



புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10 லட்சத்தை பிணயத்தொகையாக செலுத்தவும், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*பரமத்தி வேலூரில் இரும்புக் கடையில் வருமான வரித்துறை*

நாமக்கல்:பரமத்தி வேலூரில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான இரும்புக் கடையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார் வந்ததை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

*விருத்தாசலம் அருகே போலி மருத்துவர் கைது*

கடலூர்: விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். 10ம் வகுப்பு படித்து விட்டு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் சங்கர் கைது செய்யப்பட்டார்.

*காவிரி வாரியம் அமைக்காவிட்டால் கடையடைப்பு நடத்த திட்டம் : விக்கிரமராஜா*

ஈரோடு: 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கடையடைப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று விக்கிரமராஜா கூறினார்.

*அரக்கோணம் அருகே கல்லூரி சுவரில் இருந்த அம்பேத்கர் படம் மீது பெயின்ட் பூசி சேதம்*

திருவள்ளூர் : அரக்கோணம் அருகே கல்லூரி சுவரில் இருந்த அம்பேத்கர் படம் மீது பெயின்ட் பூசி சேதப்படுத்தியுள்ளனர் பத்மாபுரம் தனியார் கல்லூரி சுற்றுச்சுவரில் வரைந்திருந்த உருவப்படம் சேதப்படுத்தியது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

*அம்பேத்கர் சட்டப்பல்கலை.க்கு துணைவேந்தரை நியமித்ததை கண்டித்து 27ம் தேதி போராட்டம்*

சென்னை : அம்பேத்கர் சட்டப்பல்கலை.க்கு துணைவேந்தரை நியமித்த ஆளுநரை கண்டித்து 27ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னை, மதுரையில் திராவிடர் மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலை.யின் துணைவேந்தராக சூரிய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

*கர்நாடகாவில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்ததாக புகார்*

பெங்களூரு: கர்நாடகத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்ததாக புகார் எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கட்சி மாறி வாக்களித்ததாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மாநிலங்களவை தேர்தலை ரத்து செய்ய கோரியும் ம.ஜனதள தலைவர் குமாரசாமி வலியுறுத்தியுள்ளார். கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெற்றது.

*NEET, JEE தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியீடு*

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில், நீட், ஜீ போட்டித் தேர்வுக்கான கையேடுகளை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டனர். NEET, JEE தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இலவச கையேட்டை http://www.ammakalviyagam.in  என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .அம்மா கல்வியகம் சார்பில் இலவச கையேடு பதிவிறக்கம் செய்வதை ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடங்கி வைத்தனர்.அறிவுப்பூர்வமான, விஞ்ஞான பூர்வமான கல்வி பெற கையேடு பயனுள்ளதாக இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

*சிதம்பரம் அருகே விஷவண்டுகள் கொட்டியதில் 50 பேர் படுகாயம்*

கடலூர்: சிதம்பரம் அருகே காரைப்பாடியில் விஷவண்டுகள் கொட்டியதில் பெண்கள் உட்பட 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.100 நாள் திட்டப்பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவண்டுகள் கொட்டியதில் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

*நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் சரணடையும் போராட்டம்*

நெல்லை : நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் சரணடையும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ரதயாத்திரையில் உடன் வந்தவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

*தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றக்கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு*

சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது. தற்போதைய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், மீண்டும் பழைய பாடலை கொண்டு வருவதன் மூலம் அமைதியை குலைக்க விரும்புகிறீர்களா? என  கேள்வி எழுப்பியுள்ளனர்.

*கனிஷ்க் ஜூவல்லரி உரிமையாளர் பூபேஷ் குமார் மீது அடுத்தடுத்து வழக்கு பதிவு*



சென்னை : ரூ 824 கோடி வங்கி மோசடி வழக்கில் கனிஷ்க் ஜூவல்லரி உரிமையாளர் பூபேஷ் குமார் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ள நிலையில், மத்திய குற்றப் பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் புகழேந்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தை அவருக்கே தெரியாமல் வங்கியில் வைத்து ரூ.42 கோடி கடன் பெற்றதாக சென்னை போலீசாரும் பூபேஷ் குமார் மீது வழக்கு பதிவுசெய்துள்ளார்.

*டிடிவி தினகரனுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு*



டெல்லி : மார்ச் 26ம் தேதி நேரில் வர டிடிவி தினகரனுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 3 வாரத்திற்குள் டிடிவி தினகரனுக்கு கட்சி பெயர் மற்றும் சின்னம் ஒதுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இது தொடர்பாக ஆலோசிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

*நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும்: தென் மாநில முதல்வர்களுக்கு சித்தராமையா அழைப்பு*



பெங்களூரு: தென் மாநிலங்களுக்கு நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று தென்மாநில முதலமைச்சர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 2011 மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு வரியை பிரித்து தர திட்டமிடப்பட்டது. 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்போது வரிப்பணம் பிரித்து தரப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தை தென் மாநிலங்கள் கட்டுப்படுத்தி உள்ளனர். ஆனால் வட மாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றார்.

*நடிகை ஜீனத் அமன் பாலியல் வழக்கு: குற்றப் பிரிவுக்கு மாற்றம்*

மும்பை: பிரபல பாலிவுட் முன்னாள் நடிகை ஜீனத் அமன் தொழிலதிபர் ஒருவர் மீது, பாலியல் தொல்லை தருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து நேற்று இரவு கைது செய்யப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கு குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

*அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு இந்துத்துவ சீடரை நியமித்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம்..!*


சென்னை : அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு இந்துத்துவ சீடரை நியமித்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சங்க பரிவார தத்துவங்களை பரப்பக்கூடிய சூரியநாராயண சாஸ்திரி நியமனத்துக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரை திரும்பப் பெற வேண்டும் என்றும் பல்கலை.யில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவரை துணைவேந்தராக நியமித்ததில் உள்நோக்கம் உள்ளது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக