புதன், 14 மார்ச், 2018

பெங்களூரு சிறையில் சீருடை அணியாமல் சல்வார் கமீஸ், தங்க நகைகள் அணிந்திருக்கும் சசிகலா: சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு



பெங்களூரு சிறையில் சீருடை அணியாமல் சல்வார் கமீஸ், தங்க நகைகள் அணிந்திருக்கும் சசிகலா: சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு

பெங்களூருவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சீருடை அணியாமல் சல்வார் கம்மீஸ் அணிந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர் சிறை விதிமுறைகளை மீறியதாக சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த ஆண்டு புகார் எழுப்பினார். சசிகலாவுக்கு தனித்தனி அறைகள், கட்டில் மெத்தை, டிவி உள்ளிட்ட சொகுசு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்யப்படுவதற்கு டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் சசிகலாவும், இளவரசியும் சீருடை அணியாமல் வண்ண உடையில் ஷாப்பிங் பைகளுடன் வெளியே இருந்து சிறைக்குள் நுழைவது போன்ற சிசிடிவி வீடியோ காட்சி வெளியானது. இதையடுத்து கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீஸார் சத்தியநாராயண ராவ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தேசிய மகளிர் ஆணைய தலைவர் (பொறுப்பு) ரேகா ஷர்மா கடந்தவாரம் மத்திய சிறையில் ஆய்வு செய்தார். இது குறித்து ரேகா ஷர்மா கூறுகையில், '' சசிகலா, இளவரசி ஆகியோர் சீருடை அணியாமல் வண்ண உடையில் இருந்தனர். இது தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, சசிகலாவுக்கு விஐபி வகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினர்''என்றார்.
இதை சிறைத்துறை நிர்வாகம் மறுத்த நிலையில் நேற்று ரேகா ஷர்மா தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில், சிறையில் சசிகலாவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். அதில் சசிகலா சீருடை அணியாமல், சாதாரண உடையில் நீல நிற சல்வார் கமீஸ் அணிந்துள்ளார். மேலும் கையில் தங்க வளையல், கம்மல், செயின் ஆகியவற்றையும் அணிந்துள்ளார்.
இது குறித்து சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ‘‘சசிகலா சீருடை அணியாமல் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர் சல்வார் கமீஸ், நைட்டி, புடவை ஆகிய உடைகளை அவர் அணிகிறார். நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றுக்காக சிறையில் உள்ள மருத்துவமனை அளிக்கும் மருந்துகளை அவர் எடுத்துக்கொள்வதில்லை. உறவினர்கள் கொண்டுவரும் மருந்தையே சாப்பிடுகிறார்.
சசிகலா சிறையில் வேலை செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. எனவே செய்தித்தாள் வாசிப்பது, பொது தொலைக்காட்சி பார்ப்பது, இளவரசியுடன் பேசிக்கொண்டே பொழுதை கழிக்கிறார். மகளிர் சிறை வளாகத்தில் இருக்கும் துளசி செடிக்கும், பூச்செடிகளுக்கும் அவ்வப்போது தண்ணீர் ஊற்றுவார். சசிகலாவும், இளவரசியும் மற்ற கைதிகளுடனும், சிறை ஊழியர்களிடமும் கன்னடம் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். கணிணி பயிற்சி, பேக்கிங் பயிற்சி ஆகியவற்றில் சசிகலாவும் பங்கேற்கிறார். தான் செய்யும் பொருட்களை சசிகலா தனது உறவினர்கள் சந்திக்க வருகையில் அவர்களுக்கு வழங்குகிறார்''என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக