ஞாயிறு, 25 மார்ச், 2018

ஸ்டெர்லைட் ஏன் வேண்டாம்


ஸ்டெர்லைட் ஏன் வேண்டாம்...

1985 ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து தூத்துக்குடி மாவட்டம் உருவானபோது அது இத்தனை பிரளயங்களை எதிர்கொள்ளுமென்று யாரும் நினைக்கவில்லை.முத்துக்குளித்தலுக்கும்...சுதந்திரப்போராட்டக்காலத்தில் பிரிட்டிஷ் ஆண்டைகளுக்கு எதிராக சுதேசிக் கப்பல் ஓட்டியதற்கும் புகழ்பெற்ற தூத்துக்குடி இன்று தமிழக அளவில் மாசுபட்ட நகரங்களில் நான்காவது இடத்திலிருந்து முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது..

கடலுக்கடியில் காணப்படும் பவளப்பாறை படிவங்கள் உலகளவில் ஐந்து இடங்கள் புகழ்பெற்றவை..அந்த ஐந்தில் ஒன்று தூத்துக்குடி.விவிடி தேங்காய் எண்ணையும்...எண்ணைப்புரோட்டாவும் நாம் வாழும் காலத்தில் நம்மைப் பரவசப்படுத்துபவை...

பொதுவாகவே தூத்துக்குடி நகரம் கடுமையான வெயிலுக்கு புகழ்பெற்ற நகரம்..உச்சிமத்தியான வேளைகளில் அனல் பறக்கும்..நீங்கள் தூத்துக்குடியிலிருந்து மதுரை நோக்கி செல்லும் நான்குவழிச்சாலையிலோ அல்லது திருச்செந்தூர் செல்லும் கிழக்கு கடற்கரையொட்டிய சாலையிலோ பகல் நேரத்தில் ஒரு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி பயணித்துப்பார்த்தால் வெயிலையும் உணரமுடியும்..ஊரையே நாசப்படுத்தும் ஆலைகள் வெளியிடும் நச்சுப்புகைகள் வானமண்டலத்தை நாசப்படுத்துவதையும் காணமுடியும்.மேலாக எல்லா மாநில பதிவெண் கொண்ட லாரிகள் கார்களை கடந்து போகும்போதே காணமுடியும்...அத்தனை வர்த்தகம் தூத்துக்குடியில்.

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முப்பது கிமீ பயணித்தால் ஆறுமுகநேரி வரும்...அங்கே ஒரு வடநாட்டு மார்வாடி அமைத்துள்ள தாரங்கதாரா கெமிக்கல்சால் கடல் நீரின் நிறமே எட்டு கடல் மைல் தொலைவிற்கு மாறிவிடுமென்றால் அந்த ஆலை வெளியிடும் நச்சின் அளவை உங்களால் புரிந்து கொள்ளமுடியுமென நினைக்கிறேன்.

அதேபோல தூத்துக்குடியிலிருந்து நாலுவழிச்சாலையில் பயணிக்க ஆரம்பித்தால் சாலையின் இடதுபுறம் ஒரு ஆலையிலிருந்து வெளியேறும் புகைமட்டும் ரெம்பவே வித்தியாசப்படும்...அலுமினியக்கலரில் கொத்தாக வெளிவரும் அந்த புகையைக்கண்டால் சிறுவர் சிறுமிகள் குதூகலிக்கக்கூடும்...காரணம் அடர்த்தியாக வெளிவரும் அந்த புகை அவ்வளவு எளிதில் உடையாமல் மெதுவாக மேல்நோக்கி செல்லும்...மற்ற ஆலைகளில் புகைப்போக்கி வழியே வெளிவரும் புகை  உடனே உடைந்துவிடும்.ஆனால் ஸ்டெர்லைட்டில் கதைவேறு.

கதையின் நாயகன் சட்டிஸ்கர் மாநிலத்தில்  உள்ளார்ந்த பஸ்தர் காடுகளை வனமக்களிடமிருந்து கபளீகரம் செய்துகொண்டிருக்கும் பூநூலை மூலமாகக்கொண்ட *வேதாந்தா* நிறுவனம்.

குஜராத்தை அடிப்படையாகக்கொண்ட அனில் அகர்வாலின் இந்த வேதாந்தாவின் *ஸ்டெர்லைட் காப்பர்*முதலில் கடைவிரித்தது அனில் பிறந்த குஜராத்திலேதான்...அங்குள்ள மானமுள்ள மார்வாடிகளின் எதிர்ப்பால் ஸ்டெர்லைட் கோவாவிற்கு மாறியது.கொங்கணி பேசும் கோவாக்காரர்களிடம் ஸ்டெர்லைட்டின் கதை செல்லுபடியாகவில்லை.

அனில் அகர்வால் சோர்ந்துபோய்விடவில்லை..கோவாவிலிருந்து மும்பைக்கு விமானமேறிச்சென்று அம்மாநில முதல்வர் சரத்பவாரைப்பார்த்தார்.வேலைமுடிந்தது.மராட்டியத்தின் ரத்தினகிரி அருகே ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தொடங்க ஏற்பாடானது. அது அல்போன்சா மாம்பழ உற்பத்திக்கு பெயர்பெற்ற பகுதி...ஆனாலும்  மளமளவென வேலை நடந்தது.கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய் செலவழித்து ஆலைக்கட்டுமான வேலையெல்லாம் முடிந்தபிறகே ஆபத்தை உணர்ந்தார்கள் அம்பேத்கர் பிறந்த ரத்தினகிரி மண்ணின் மைந்தர்கள்.மாம்பழ விவசாயிகள் முன்னெடுத்த போராட்டம்   பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தாத நிலையில் மண்ணின் மைந்தர்கள் கம்பி கடப்பாறையோடு திரண்டார்கள்...சரத்பவாரின் மராட்டிய போலீசின் அடக்குமுறையையும் மீறி ஆலை உடைத்து நொறுக்கப்பட்டது.அனில் அகர்வால் இப்போதும் சோர்ந்து விடவில்லை.தன் பார்வையை தமிழகத்தை நோக்கித்திருப்பினார்.இங்கே நமது மாண்புமிகு அம்மாவின் அரசாங்கம்.வந்தார் அனில்....பேசினார் அனில்...வென்றார் அனில்.இடம் தூத்துக்குடி மீளவிட்டான் பகுதி தேர்வு செய்யப்பட்டது.உடனடியாக கட்டுமான வேலைகள் ஆரம்பித்தது.கட்டுமான வேலை நடக்கும்போதே ஆலைக்கு தேவையான அத்தனை அனுமதிகளும் கொடுக்கப்பட்டது அம்மாவின் அரசால்.

சும்மாவா...உலகில் 500 மடங்கு லாபம் தரும் அமுதசுரபியை யாராவது விடுவார்களா என்ன...

கொடுமை என்னவென்றால் ஸ்டெர்லைட் காப்பர் நச்சு ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது அம்மாவின் காலத்தில் 1993 ல் என்றால்...ஆலை திறக்கப்பட்டது ஐயா கலைஞர் கருணாநிதி அவர்களின் காலமான 1996 ல்...

ஆட்சியாளர்கள்தான் அரைவேக்காடுகள் என்றால் அதிகாரிகளுக்கு என்னவானது...ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்ய இருக்கும் செம்புக்கம்பி-கந்தக அமிலம்-பாஸ்பரிக் அமிலத்தால் நேரக்கூடிய ஆபத்து...மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு...நிலத்தடிநீருக்கான பாதுகாப்பு...லட்சக்கணக்கான மக்களின் வாழ்வியல்...எல்லாவற்றுக்கும் மேலாக ஆலையிலிருந்து பதினைந்து கிமீ தொலைவிலிருப்பது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையால் அறிவிப்பு செய்யப்பட்டிருப்பது கடல்வாழ் உயிரினங்களுக்கான *தேசீய கடல் பூங்கா*என்பதையும் மறந்து எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்பதுதான்.இத்தனை பலம் ஸ்டெர்லைட் டிற்கு வரக்காரணம் உண்டு நண்பர்களே...

ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம்சார் நிறுவனமொன்றில் இயக்குநராக இருந்தவர் முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம்.அதைவிடக்கொடுமையாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த ஹெச் கே கபாடியா இதன் பங்குதாரர்களில் ஒருவர் என்கிறது வரலாறு.

இன்று மீளவிட்டான்..தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் குமரெட்டியாபுரம் போன்ற கிராமத்தினருகே உள்ள ஓடைகளில் ஆலையின் ஜிப்சம் கழிவுகள் கலக்கப்படுவது முதல் ஆலையைச்சுற்றி 25 கிமீ வரை கந்தக அமிலம் கலந்த வாயுக்களால் கடும் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல்...புற்றுநோய்க்கான அறிகுறி..கண்பார்வை எரிச்சல்.. மூட்டுவலி...பல்வலி என மக்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாகியதோடு நிலத்தடி நீரும் நஞ்சாகிவிட்ட நிலையில் தவித்து நிற்கிறார்கள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடுத்த ஆலைக்கெதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நூற்றுக்கணக்கான கேள்விகளைக்கேட்டதோடு NEERI யையும் ஆய்வு செய்யப்பணித்து ஆலையை இழுத்து மூட உத்தரவிட்டது...கபாடியா தனது பங்குதாரர் என்ற மமதையில் ஆலையைத்திறக்க உச்சநீதிமன்றத்தை நாடினார் அனில் அகர்வால்.

நினைத்தது நடந்தது...நளினி சிதம்பரம்...சிதம்பரம்..கபாடியா கூட்டணியின் உபயத்தால் ஆலை திறக்கப்பட்டது.

இந்த அசுரபலத்தைக்கொண்டு அளவுக்கதிகமான உற்பத்தி அளவுக்கதிகமான லாபம் என ஸ்டெர்லைட் பீடுநடை போட்டது.

நாளொன்றுக்கு ஐம்பதாயிரம் டன் காப்பர் உற்பத்தி என்ற இலக்கு ஐந்து லட்சம் டன்னானது...இதில் 70 % ஏற்றுமதி சீனாவிற்கென்பது சிறப்பு.

எழுபதாண்டுக்கு முந்தைய தொழில்நுட்பத்தைக்கொண்டு இயங்கும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையில் பணம் வாங்காத அதிகாரிகள் மற்றும்  அரசியல்வாதிகள் வெகுசிலரே.

உச்சகட்டமாக இந்த நச்சு ஆலைக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு மூன்று நட்சத்திர அந்தஸ்து கொடுத்து அசத்தியதுதான் காலத்தின் கோலம்.

ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யத்துடிக்கிறது ஸ்டெர்லைட் காப்பர்...குமரெட்டியாபுரம் அப்பாவிகள் களத்தில் இறங்கி போராடுகிறார்கள்.விளைவு...வேறென்ன குண்டாந்தடிகளாலான அடியும்...ஏச்சும்...பேச்சும்தான்.காவல்துறையின் வெறியாட்டத்தால் கூனிக்குறுகிப்போனார்கள்...

இன்று ஸ்டெர்லைட் காப்பருக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் வாழ்வா-சாவா களத்தில் நிற்கிறார்கள்...போராட்டம் வெடிக்கிறது.

தமிழக அரசியல்வாதிகளே தயவுசெய்து தூத்துக்குடி பக்கம் போய்விடாதீர்கள்.தன்னெழுச்சியாக தங்கள் மண்ணைக்காக்க களத்தில் நிற்கிறார்கள் அந்த அப்பாவிகள்.அங்கே நீங்கள் சென்றால் உங்கள் பெயரைச்சொல்லி வாழ்க என்றும்...ஸ்டெர்லைட் காப்பர் ஒழிக என்றும் உங்கள் தொண்டர்கள் ஊளையிடலாம்...தயவுசெய்து அங்கு ஒழிக கோஷம் மட்டுமே கேட்கட்டும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வெல்லட்டும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக