வெள்ளி, 9 மார்ச், 2018

'ஹெச்.ராஜா: ருசிகண்ட அரசியல் பூனை'

I

பிபிசிதமிழ் 🅱🅱C News
➖➖➖➖➖➖➖➖➖➖

'ஹெச்.ராஜா: ருசிகண்ட அரசியல் பூனை'
➖➖➖➖➖➖➖➖➖➖
ஆர்.முத்துக்குமார்எழுத்தாளர்
➖➖➖➖➖➖➖➖
 08 மார்ச் 2018
➖➖➖➖➖➖➖➖➖➖

(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

"இன்று லெனின் சிலை, நாளை ஈவெரா சிலை" என்கிற ஹெச்.ராஜாவின் ஃபேஸ்புக் பதிவின் நோக்கமே கவன ஈர்ப்பு, ஊடக வெளிச்சம், பேசுபொருள், சர்ச்சை, பிராமணர் - பிராமணர் அல்லாதார் மோதல் ஆகியவைதான் என்பது அரசியல் அரிச்சுவடி தெரிந்த அத்தனை பேருக்குமே தெரியும். தற்போது நடந்துவரும் சம்பவங்கள் எல்லாம் அதை அப்படியே உறுதிசெய்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

திரிபுராவில் கால் நூற்றாண்டாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் சமீபத்திய தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்கிறார்கள். அங்கே பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது. புதிய முதலமைச்சருக்கான பதவியேற்பு விழாகூட நடந்திராத நிலையில், அங்கு பல ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட லெனின் சிலை புல்டோசர் கொண்டு இடித்துத் தகர்க்கப்படுகிறது. அது வீடியோவாகவும் ஃபேஸ்புக், வாட்சப் வழியே பகிரப்படுகிறது.

இந்தியாவின் எந்தப் பகுதியில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தாலும் அரசியல் தலைவர்கள் என்ன செய்வார்கள்? உடனடியாகக் கண்டிப்பார்கள். அறிக்கை வெளியிடுவார்கள். மாற்றுச் சித்தாந்தம் கொண்ட தலைவர்கள்கூட லேசாகவோ, ஒப்புக்காகவோ கண்டன அறிக்கை அல்லது வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிடுவார்கள். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளவேண்டும் என்று ஆலோசனை சொல்வார்கள்.

அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, அந்தச் சம்பவம் வேறெந்த வன்முறை நிகழ்வுக்கும் இட்டுச்சென்றுவிடக்கூடாது என்கிற உள்ளார்ந்த பொறுப்புணர்வு. அல்லது, வன்முறை நிகழும் பட்சத்தில், அந்த வன்முறைக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்கான எச்சரிக்கை உணர்வு.

இந்த இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டும் சேர்ந்தோதான் தலைவர்களை இயக்குவது வழக்கம். இது மாநிலத் தலைவர்களுக்கும் பொருந்தும், அகில இந்தியத் தலைவர்களுக்கும் பொருந்தும்.

அப்படித்தான் தமிழகத் தலைவர்கள் அனைவருமே எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவுசெய்தார்கள். ஆனால் பாஜகவின் அகில இந்திய செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஹெச்.ராஜா மட்டும் சற்று மாறுபட்டுச் செயல்படுகிறார். லெனின் சிலை இடிக்கப்பட்ட செய்தி கிடைத்ததும், அந்த வீடியோவை எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்கிறார்.

அத்தோடு, "லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்திற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில், இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை" என்ற பதிவை நான்கைந்து எழுத்துப்பிழைகளுடன் பதிவுசெய்கிறார்.

பதிவுவெளியான வேகத்தில் அது ஃபேஸ்புக்கில் அடுத்தடுத்து பகிரப்படுகிறது. நாளை பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்கிற பதிவு பெரியாரிஸ்டுகள் தொடங்கி பொதுமக்கள் வரை பலரையும் ஆத்திரம்கொள்ள வைக்கிறது. ஹெச்.ராஜாவின் பேச்சு ஊடகங்களில் விவாதப்பொருளாக மாறுகிறது.

மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான் தொடங்கி கமலஹாசன் வரை அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனக்குரல் எழுப்புகிறார்கள். (இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நிமிடம் வரை ஆன்மீக அரசியல் தலைவர் ரஜினியிடமிருந்து எவ்வித கருத்தும் வெளிப்படவில்லை)

எல்லாவற்றையும்விட முக்கியமாக, பெரியார் சிலை உடைப்பு குறித்த ஹெச்.ராஜாவின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்றார் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை. வழக்கமாக, சுப்ரமணியன் சுவாமியின் கருத்தைத்தான் தமிழக பாஜகவினர் தனிப்பட்ட கருத்து என்று சொல்லி, சுவாமியிடமிருந்து விலகி நிற்பார்கள். அந்த அணுகுமுறையை சுவாமியின் சிஷ்யர் ஹெச்.ராஜாவுக்கும் பயன்படுத்தியிருந்தார் தமிழிசை.

எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து பெரியார் சிலை உடைப்பு பற்றிய சர்ச்சைக்குரிய பதிவை நீக்கினார் ஹெச்.ராஜா. அதன்பிறகும் அவரது கருத்து கண்டனத்துக்கு உள்ளாகிக்கொண்டே இருந்தது. வன்முறையைத் தூண்டும் கருத்தைப் பதிவுசெய்த ராஜாவைக் கைது செய்ய வேண்டும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கவேண்டும் என்று அடுத்தடுத்து குரல்கள் எழுந்தவண்ணம் இருந்தன.

ஒட்டுமொத்த ஊடகமும் ஹெச்.ராஜா பெயரையே உச்சரித்தது. தமிழகம் முழுக்க ராஜா என்ற பெயர் உச்சரிக்கப்பட்டது. இரண்டு சதவிகித வாக்குவங்கிகூட இல்லாத ஓர் கட்சியின் தலைவருக்கு தமிழகத்தின் அத்தனை பெரிய அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். அதற்குக் காரணம், அவருடைய சர்ச்சைக்குரிய பதிவு நிற்க.

திடீரென திருப்பத்தூர் அருகே உள்ள பெரியார் சிலையை யாரோ சிலர் சேதப்படுத்திவிட்டதாக செய்தி வெளியானது. பிறகு அந்தக் காரியத்தைச் செய்தவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. பல இடங்களில் பதற்றம் உருவானது. மறுநாள் காலை ஹெச்.ராஜாவிடமிருந்து மற்றொரு பதிவு வெளியானது.

அந்தப் பதிவில், பெரியார் சிலை உடைப்பு குறித்த பதிவைத் தனது அனுமதியின்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின் பதிவு செய்து விட்டதால் அந்தப் பதிவை நீக்கி விட்டதாகச் சொன்ன ஹெச்.ராஜா, அந்தப் பதிவால் யாருடைய மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்காக வருந்துவதாகக் கூறியிருந்தார். அதன் நீட்சியாக, பெரியார் சிலையைச் சேதப்படுத்திய பாஜக நிர்வாகி முத்துராமனைக் கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக அறிவித்தார் டாக்டர் தமிழிசை.


ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்ததை வழக்கறிஞர் அருள்மொழி உள்ளிட்ட பெரியாரிஸ்டுகள் வரவேற்ற நிலையில், தமிழக பாஜக, அகில இந்திய பாஜக இரண்டில் இருந்தும் மூன்று எதிர்வினைகள் வந்துசேர்ந்தன.

ஒன்று, ஹெச்.ராஜாவின் விளக்கமும் வருத்தமும் காலதாமதமான நடவடிக்கை என்று எதிர்வினையாற்றினார் தமிழக பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷணன்.

அடுத்து, தமிழக பாஜக விவகாரங்களுக்கான மேலிடப் பொறுப்பு வகிக்கும் முரளிதரராவ், "பெரியார் போன்ற தலைவர்களை அவமதிப்பதையும், சிலைகளை இடிப்போம் என்று மரியாதைக் குறைவாகப் பேசுவதையும் பாஜக ஆதரிக்காது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று பதிவிட்டார்.

மூன்றாவது, பாஜகவின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷாவின் கருத்து. சமீப காலமாக நடந்துவரும் சிலை உடைப்பு சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை. இதனை பாஜக ஒருபோதும் ஆதரிப்பதில்லை. இது குறித்து தமிழ்நாடு, திரிபுராவைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளிடம் பேசியுள்ளேன். சிலைகளை உடைப்பவர்கள் பாஜகவினராக இருந்தால் அவர்கள் மீது கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டிருந்தார் அமித்ஷா.

மூன்று முக்கிய எதிர்வினைகள் வந்துவிட்ட நிலையில், டெல்லியில் ஊடகங்களைச் சந்தித்த ராஜா, "நான் விமானத்தில் வந்துகொண்டிருக்கும்போது என்னுடைய ஃபேஸ்புக் பக்க நிர்வாகி (அட்மின்) எனது ஒப்புதல் இன்றி அந்தப் பதிவை எழுதிவிட்டார். அதன் பிறகு அந்தப் பதிவை நீக்கச் சொல்லி விட்டேன். யாருடைய சிலையைத் தகர்ப்பதிலும் எங்களுக்கு உடன்பாடில்லை" என்று விளக்கம் கொடுத்தார்.''

விஷயம் அத்தோடு முடிந்ததா என்றால் இல்லை. தொடர்ந்து விவாதப்பொருளாகிக் கொண்டே இருக்கிறது. இந்த இடத்தில் மூன்று முக்கியமான கேள்விகள் எழுகின்றன.

ஒன்று, மத்திய ஆளுங்கட்சியின் அகில இந்திய செயலாளர் ஒருவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவருடைய அனுமதியில்லாமல் அதன் நிர்வாகி முக்கியமான பிரச்னை குறித்து பதிவிடமுடியுமா என்பது முதல் கேள்வி.

தனது அனுமதியைப் பெறாமல் அத்துமீறி இடப்பட்ட பதிவை நீக்குவதற்கு ஏன் ஒருநாள் கால அவகாசம் எடுத்துக்கொண்டார் ஹெச்.ராஜா என்பது இரண்டாவது கேள்வி.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்குக்குச் சேதம் விளைவிக்கும் பதிவை வெளியிட்ட ஹெச்.ராஜா அல்லது அவரது ஃபேஸ்புக் அட்மின் மீது ஏன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மூன்றாவது கேள்வி.

பெரியாரையும் பெரியாரின் கொள்கைகளையும் விமரிசிப்பது பாஜகவினர் தொடர்ச்சியாகச் செய்துவரும் காரியம். குறிப்பாக, பெரியாரின் சிலையை நீக்க வேண்டும் என்றும் பெரியாரின் சிலையைச் செருப்பால் அடிக்கவேண்டும் என்றும் வெவ்வேறு மேடைகளில் பேசிவருபவர் ஹெச்.ராஜா. அந்தப் பேச்சுகளுக்கு ஊடகங்கள் தரும் வெளிச்சத்தால் உந்தப்பட்டு, இன்னும் இன்னும் தீவிரமாகவும் கொச்சையாகவும் பேசுவதை வழக்கமாக்கிக்கொண்டவர் ஹெச்.ராஜா.

மோடியைப் பற்றித் தவறாகப் பேசினால் வைகோ தெருவில் நடமாடமுடியாது என்று பேசியவர் ஹெச்.ராஜா. தனக்குப் பிடிக்காத கேள்வியை எழுப்புகின்ற பத்திரிகையாளர்களை ஆண்ட்டி இந்தியன் என்று விமரிசிப்பது ஹெச்.ராஜாவின் வழக்கம்.

இதுபோன்ற செய்திகளுக்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் ராஜாவை ஊக்கப்படுத்துகின்றன. அதனால்தான் பிரச்னை வரும் என்று தெரிந்தும் ஃபேஸ்புக்கில் கடுமையான மொழியில் எழுதுவதையும் செய்தியாளர்களிடம் காட்டமான மொழியில் பதிலளிப்பதையும் செய்துவருகிறார் ஹெச்.ராஜா என்பது செய்திகளை உன்னிப்பாகக் கவனிக்கும் எவராலும் உணர முடியும்.

ஆகவே, பெரியார் சிலை உடைப்பு குறித்த அவருடைய ஃபேஸ்புக் பதிவை ஹெச்.ராஜா எழுதியிருக்கவே வாய்ப்புகள் மிக அதிகம். குறைந்தபட்சம், அவர் சொல்லச்சொல்ல அவருடைய உதவியாளர் அல்லது ஃபேஸ்புக் நிர்வாகி எழுதியிருக்கலாம். அது பிரச்னையாகிவிட்டது என்று தெரிந்ததும் அல்லது பதிவின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று தெரிந்ததும், அந்தப் பதிவை நீக்கியிருக்கவே வாய்ப்பிருக்கிறது. மாறாக, ஹெச்.ராஜா சொல்வது போல அவருடைய ஃபேஸ்புக் அட்மின் அந்தப் பதிவை எழுதியிருக்க வாய்ப்புகள் மிகமிகக் குறைவு.

பதிவை நீக்க ஒருநாள் அவகாசம் ஏன்?

பதிவையும் நீக்கி, ஃபேஸ்புக் அட்மினையும் நீக்கியிருப்பதாகச் சொல்வதன் மூலம் அந்தப் பதிவுக்கும் ஹெச்.ராஜாவுக்கும் தொடர்பில்லை என்ற முடிவுக்கு வரமுடியாது என்பது சாதாரண சட்டங்கள் தொடங்கி சைபர்க்ரைம் சட்டங்கள் வரை எல்லாம் தெரிந்த ஹெச்.ராஜாவுக்கே தெரியும்.

ஆம், ஃபேஸ்புக் அட்மினே தவறான பதிவைச் செய்திருந்தாலும் அதற்கு ஹெச்.ராஜாதான் பொறுப்பேற்கவேண்டும். சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க, அல்லது அரசியல் நெருக்கடியிலிருந்து மீள அட்மினைப் பலிகடாவாக ஆக்கியிருக்கலாம் என்றே ஹெச்.ராஜாவின் கடந்தகாலச் செயல்பாடுகள் சொல்கின்றன.

பெரியார் சிலை உடைப்பு குறித்த சர்ச்சைக்குரிய பதிவை நீக்க ஏன் ஒருநாள் கால அவகாசம் எடுத்துக் கொண்டார் என்ற கேள்வி திரும்பத் திரும்ப எழுகிறது. அதற்கும் ஹெச்.ராஜாவின் கடந்தகாலச் செயல்பாடுகளே சாட்சியம் சொல்கின்றன. திமுக பற்றி, பெரியார் பற்றி, ஸ்டாலின் பற்றி, சசிகலா பற்றி, வைகோ பற்றி, வைரமுத்து பற்றி, சீமான் பற்றி, திராவிடம் பற்றி, கழகங்கள் பற்றி, ஆளுநர் ஆய்வு பற்றி கடந்தகாலங்களில் ஹெச்.ராஜா எழுதிய பல பதிவுகள் அரசியல் ரீதியாக வெவ்வேறு விதமான விமரிசனங்கள் வந்துள்ளன.

அவற்றின் வழியாகத் தனக்கும் தன்னுடைய பதிவுக்கும் தமிழகம் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைச் சோதித்துப் பார்க்கிறார் ஹெச்.ராஜா.

அந்த வரிசையில்தான் பெரியார் சிலை உடைப்புப் பதிவும் வருகிறது. ஆக, மக்களின் எதிர்வினைகளைத் தெரிந்துகொள்ள, குறைந்தபட்சம் ஒருநாளேனும் சம்பந்தப்பட்ட சர்ச்சைப் பதிவு ஃபேஸ்புக்கில் உலா வருவது அவசியம். அப்போதுதான் அது ஆதரவாளர்களாலும் எதிர்ப்பாளர்களாலும் வெவ்வேறு கோணங்களில் பகிரப்படும். இதுதான் ஹெச்.ராஜாவாலோ அல்லது அவருடைய ஃபேஸ்புக் அட்மினாலோ போடப்பட்ட பதிவு ஒருநாள் முழுக்க நீக்கப்படாமல், நீடித்ததன் காரணம் என்பது ஹெச்.ராஜாவின் கடந்தகாலச் செயல்பாடுகளில் இருந்து புரிந்துகொள்ளக்கூடிய செய்தி.

பெரியார் சிலை உடைப்பு பற்றி எழுதி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய ஹெச்.ராஜா மீது அல்லது அவரது ஃபேஸ்புக் அட்மின் மீது ஏன் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. இது பெரியார் மண், பெரியாரைக் கொச்சைப்படுத்துபவர்கள் ராஜாவாக இருந்தாலும், ராஜா வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவும் ஹெச்.ராஜாவின் பேச்சைக் கடுமையாக விமரிசனம் செய்திருக்கிறது.

இந்த இரண்டுமே பேச்சும் எழுத்தும்தான். செயல் என்ற ஒன்று இல்லவே இல்லை. தமிழகத்தில் நடப்பது பாஜகவின் பினாமி ஆட்சி, மோடியின் உத்தரவுக்கு ஏற்ப நடக்கும் ஆட்சி என்ற எதிர்க்கட்சிகளின் விமரிசனங்களுக்குச் சரியான பதிலடி கொடுப்பதற்கு ஹெச்.ராஜா உருவாக்கியிருக்கும் சர்ச்சை பொருத்தமானது. அதிமுக அரசு என்ன செய்யப்போகிறது? பெரியாரின் நூற்றாண்டைச் சிறப்பாகக் கொண்டாடிய எம்.ஜி.ஆரின் வழிவந்த எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர் செல்வமும் பெரியார் சிலை உடைப்புப் பற்றிய பதிவுகளுக்கு என்ன மாதிரியான செயல் ரீதியான எதிர்வினையை ஆற்றப்போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.

இந்த இடத்தில் ஹெச்.ராஜாவின் பேச்சைத் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ், பாஜகவில் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் விரும்பவில்லை என்பதால், பெரியார் குறித்த தனது சர்ச்சைப் பேச்சுகளை ஹெச்.ராஜா நிறுத்திக்கொள்வாரா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

ஏனென்றால், பெரியார் என்பவர் தமிழ்நாட்டின் தவிர்க்கமுடியாத ஆளுமை. அவருடைய முன்வைத்த பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, வர்ணாசிரம எதிர்ப்பு ஆகியன நான்கு தலைமுறை தமிழர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடியவை. அந்தத் தத்துவத்துக்கு எதிராகத்தான் பாஜக பயணம் செய்கிறது. பெரியாரின் தத்துவத்துக்கு எதிராக அரசியல் செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றால் அந்தப் பெரியாருக்கு எதிரான, பெரியாரியத் தத்துவத்துக்கு எதிரான மனப்போக்கை மக்கள் மத்தியில் உருவாக்கவேண்டும்.

அதற்குப் பெரியாரையும் அவருடைய கொள்கைகளையும் விமரிசித்துக் கொண்டே இருக்கவேண்டும். சரியோ, தவறோ, விவாதத்தில் இருந்துகொண்டே இருக்கவேண்டும், பேசுபொருளாக ஆக்கிக்கொண்டே இருக்க வேண்டும். அதன்மூலம் உடனடியாக இல்லாவிட்டாலும், சில காலம் கழித்து நிலைமை மாறும்.

அது தங்களுக்குச் சாதகமான அரசியல் சூழலை உருவாக்கும் என்பது ஹெச்.ராஜா உள்ளிட்டோரின் கணிப்பு. அதை நோக்கிய பயணத்திட்டத்தின் ஒரு பகுதிதான் பெரியார் சிலை உடைப்புப் பேச்சு. ஆம், அட்மினால் எழுதப்பட்ட பதிவல்ல. ஆழமாக யோசித்துச் செய்யப்பட்ட பதிவு அது. இல்லை, அட்மினால்தான் எழுதப்பட்டது என்றால், அநேகமாக அந்த அட்மின் நாக்பூரில் இருக்கலாம்.

எது எப்படியோ, எதிர்பார்த்தது போலவே, சமூக வலைத்தளங்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள், ஊடகங்கள், கட்சியின் டெல்லி தலைமை என எல்லாவற்றிலும் பெரியார் சிலை உடைப்புப் பேச்சு பேசுபொருளாக ஆக்கப்பட்டிருக்கிறது பெரியார் சிலை உடைப்புப் பேச்சு. கூடவே, ஹெச்.ராஜாவின் பெயர். ஆக, எட்டுத் திசைகளில் இருந்தும் எழுந்த எதிர்ப்புணர்வைக் கண்டு அமைதியாகிப்போவார் ஹெச்.ராஜா என்பது தப்புக் கணக்கு.

இன்னும் இன்னும் எழுதிக்கொண்டேதான் இருப்பார். பேசிக் கொண்டே தான் இருப்பார். அதற்கான எதிர்வினைகள் வந்துகொண்டுதான் இருக்கும். ஏனென்றால், ஹெச்.ராஜா ஊடக கவன ஈர்ப்பு என்கிற உணவின் ருசி கண்ட அரசியல் பூனை. அடுத்த தேர்தல் வரைக்கும் அவர் அப்படித்தான் இருப்பார்!
➖➖➖➖➖➖➖➖➖
 பிபிசி தமிழ்:
Copyright © 2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக