ஞாயிறு, 4 மார்ச், 2018

தலித் மக்கள் இஸ்லாத்துக்கு மாறியது ஏன்?” - திருமாவளவனுக்கு டாக்டர் பட்டம் பெற்றுத்தரப்போகும் ஆய்வறிக்கை



தலித் மக்கள் இஸ்லாத்துக்கு மாறியது ஏன்?” - திருமாவளவனுக்கு டாக்டர் பட்டம் பெற்றுத்தரப்போகும் ஆய்வறிக்கை
......
அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் எனப் பலரின் பெயருக்கு முன்னால் `டாக்டர்' என்ற பட்டம் இருப்பதை நாம் கவனித்திருப்போம். அது, பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் கௌரவ டாக்டர் பட்டம். சமூகத்துக்குத் தனிப்பட்ட முறையில் ஒருவர் அளித்த மகத்தான பங்களிப்பைப் போற்றும்விதமாக, இந்தக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இதுதவிர கல்வித் துறையில் பெறப்படும் டாக்டர் (முனைவர்) பட்டம் என்பது, குறிப்பிட்ட ஒரு துறையில் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துப் பெறப்படுவது. பெரும்பாலான பிரபலங்கள், கௌரவ டாக்டர் பட்டமே பெற்றிருப்பர். வெகுசிலர் மட்டுமே விருப்பமான துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெறுவர். அந்த வரிசையில் விரைவில் இணையவுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

தனது ஆய்வறிக்கையை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த அவர், விரைவில் முனைவர் பட்டம் பெறவுள்ளார். சென்னையில் உள்ள கிறிஸ்துவ குருகுலம் ஒன்று, இவருக்கு ஏற்கெனவே கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன், சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை அறிவியலிலும் (B.Sc Chemistry), முதுகலை குற்றவியலிலும் (M.A Criminology) பட்டம் பெற்றவர். தற்போது 55 வயதாகும் இவர்,  எந்தத் துறையில் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார் என்பது பற்றி அவரிடம் பேசினோம்...

``1981 பிப்ரவரி மாதம் 19-ம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் 200 பேர், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினர்.  அப்போது அதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்துகொண்டிருந்த சமயம் அது. மத்தியில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். `அரபு நாடுகளிலிருந்து பெரும் பணம் கொடுத்ததால் அவர்கள் மதம் மாறினர்' என, அந்த மக்களின் மீது அவதூறு பரப்பப்பட்டது. சில இந்து அமைப்புகளும் அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் அவர்களை தாய் மதத்துக்கு மாறக் கூறினர்.

இந்த மதமாற்றச் சம்பவத்துக்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்தப் பிரச்னை குறித்து சட்டமன்றத்தில் பல்வேறு தலித் தலைவர்கள் ஆதரவாகப் பேசினர். அந்தச் சமயத்தில் நான் கல்லூரி மாணவனாக இருந்தேன். அந்தச் சம்பவத்தைப் பற்றிய உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என அப்போதே முடிவெடுத்தேன். அதன்படி நான் தெரிந்துகொண்ட சம்பவங்களையும் தகவல்களையும் ஆய்வறிக்கையாகத் தொகுத்து தற்போது சமர்ப்பித்துள்ளேன். நான் குற்றவியல் படிக்கும்போது எனக்கு பேராசிரியராக இருந்த டாக்டர் சொக்கலிங்கம் அவர்கள்தாம் என் ஆய்வறிக்கைக்கான வழிகாட்டி. இந்த ஆய்வின் நோக்கம், முனைவர் பட்டம் பெற வேண்டும் என்பதல்ல; அந்த மதமாற்றச் சம்பவத்தின் உண்மை நிலையைத் தெரிந்துகொள்வதுதான். பகுதிநேர ஆய்வு மாணவராக இருந்ததால், கிட்டத்தட்ட 15 வருடங்கள் குற்றவியல் துறையின்கீழ் இந்த ஆய்வை மேற்கொண்டேன்.

அந்த மக்கள் மதம் மாறுவதன் மூலம், தங்கள் சொந்தங்களைப் பிரிகின்றனர்; அவர்களின் தலைமுறையினருக்குக் கிடைக்கும் இட ஒதுக்கீட்டை இழக்கின்றனர். இருந்தும் மதம் மாறும் அளவுக்கான காரணம் என்ன என்பதற்கு இந்த ஆய்வறிக்கையில் விளக்கம் கொடுத்துள்ளேன். அந்த மக்களின் தற்போதைய வாழ்நிலை எப்படியுள்ளது என்பதையும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன்.

தொல்.திருமாவளவன்
இந்தச் சம்பவம் தொடர்பான சில கேள்விகள் எனக்குள் இருந்தன'' என்று சொன்ன திருமாவளவன், அந்தக் கேள்விகளைக் கூறினார்.

``அம்பேத்கர், பௌத்த மதத்துக்கு மாறினார். அவரைப் பின்பற்றிய இந்த மக்கள் ஏன் பௌத்தத்துக்கு மாறாமல் இஸ்லாத்துக்கு மாறினார்கள்?
இவ்வளவு நாள் பின்பற்றிவந்த இந்து கலாசாரத்தை மறுத்து, இஸ்லாத்துக்குச் செல்ல காரணம் என்ன? - இதற்கான காரணங்களை ஆதாரபூர்வமாக அந்த ஆய்வறிக்கையில் சமர்ப்பித்துள்ளேன். இன்னும் சில மாதங்களில் வாய்மொழித் தேர்வு முடிந்த பிறகு, முனைவர் பட்டம் கிடைக்கும்'' என்றார் தொல்.திருமாவளவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக