திங்கள், 5 மார்ச், 2018

மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்




திருட்டு ஜனநாயகம் சற்று நீண்ட பதிவு படியுங்கள் தெளியுங்கள்

மின்னணு வாக்கு  இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்

ஆகஸ்ட் 21 காலை 5 மணி. ஹைதராபாத்தின் புகழ்பெற்ற பஞ்சாரா ஹில்ஸ் பகுதியின் ஒரு அபார்மென்டில் திமுதிமுவென்று காவல் துறையினர் நுழைகிறார்கள். கணினி தொழில்நுட்ப வல்லுனர் ஹரி பிரசாத் கைது செய்யப் பட்டு ஒரு டயோடா காரில் மும்பைக்கு அழைத்துச் செல்லப் பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார். சில நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் அவர்மீது வழக்குத் தொடுக்கிறது.

தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ஹரி பிரசாத் அப்படி என்ன குற்றம் செய்தார்?

இந்த கைதுக்கு சற்று ஒரு வருடம் முன்பிருந்து ஒரு தீவிர ஆய்வில் ஈடுபட்டு வந்திருக்கிறார் ஹரி  பிரசாத். இந்தியாவில் தேர்தல்களில் பயன்படுத்தப் படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்பானவை அல்ல; அவற்றை எளிய தொழில்நுட்பம் மூலமே ஏமாற்றி மோசடி செய்துவிட முடியும் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க அவர் முயன்று வந்தார். இந்த அறிவியல்பூர்வமான பரிசோதனைக்காக தனக்கு ஒரு EVM இயந்திரத்தை தந்து உதவ வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடமும்,இந்த இயந்திரங்களைத் தயாரிக்கும் BEL, ECIL நிறுவனங்களிடமும் அவர் கோரிக்கை வைத்து வந்தார். ஆனால் அக்கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

இந்நிலையில் அண்மையில் ஹரி பிரசாத் மற்றும் சில தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய குழு EVM இயந்திரத்தை எப்படி ஏமாற்ற முடியும் என்று ஒரு உண்மையான, தேர்தல்களில் பயன்படுத்தப் பட்ட EVM இயந்திரத்தை வைத்தே நிரூபித்துக் காட்டியது. இது ஊடகங்களிலும் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த இயந்திரம் தன் கைக்கு எப்படிக் கிடைத்தது என்ற விவரத்தை வெளியிட ஹரி பிரசாத் மறுத்து விட்டார். ஒரு பெயரில்லா வட்டாரம் (anonymous source) இதனைத் தந்து உதவியதாகக் கூறினார்.

சட்டத்திற்குப் புறம்பான வகையில் EVM இயந்திரத்தைத் திருடியதற்காக அவர் கைது செய்யப் பட்டார்.

ஹரி பிரசாத் ஹைதராபாத் நகரில் NetIndia என்ற கணினி நிறுவனத்தைத் தானே தொழில்முனைவோராகத் தொடங்கி நடத்தி வருபவர். படிக்கும் காலத்திலிருந்தே ஏட்டுக் கல்வியை விட நடைமுறைத் தொழில்நுட்பத்தின் மீது காதல் கொண்டிருந்தார். தனது எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ படிப்பை தொடராமல் நிறுத்தி விட்டாலும், அதே மூச்சில் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் (தொலைபேசியைப் பயன்படுத்தி அதன் ஒலி அலைகள் மூலம்  தகவல்களை (data) அனுப்பும் ஒரு கையடக்க (handheld) கருவி. வர்த்தக ரீதியாக இந்தக் கண்டுபிடிப்பு வெற்றி பெறவில்லை).

இந்த ஆய்வுகளில் அவருடன் பங்கு கொண்டவர்களில் J. Alex Halderman என்பவர் அமெரிக்காவின் மிசிகன் பல்கலைக் கழகத்தின் கணினித் துறைப் பேராசிரியர், Rop Gonggrijp என்பவர் நெதர்லாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்.

இதோடு இவர்கள் நின்றுவிடவில்லை. இந்திய மின்னணு இயந்திரத்தின் வடிவமைப்பு, செயல்முறை ஆகியவற்றை முழுமையாக அலசி ஆராய்ந்து, Security Analysis of India’s Electronic Voting Machines என்ற விரிவான ஆய்வுக் கட்டுரையையும் (technical paper) எழுதியிருக்கிறார்கள். இந்த ஆய்வுக் கட்டுரை ACM (Association of Computing Machinery) என்ற மதிப்புக்குரிய, உலகளாவிய கணினித் தொழில்நுட்ப ஆய்வு அமைப்பால் ஏற்கப் பட்டிருக்கிறது. அக்டோபர் மாதம் நடைபெறப் போகும் தொழில்நுட்ப ஆய்வுக் கருத்தரங்கில் (Conference on Computer and Communication Security – CCS ’10) விவாதிக்கப் பட இருக்கிறது. இந்த முழு ஆய்வுக் கட்டுரையையும் இங்கே படிக்கலாம். சில தகவல்களை சுருக்கமாக விளக்குகிறேன்.

இந்த இயந்திரங்களில் இரு பெட்டிகள் உள்ளன. Ballot Unit என்ற பெட்டி மூலம் வாக்காளர்கள் வாக்கு அளிக்கிறார்கள். Control unit என்ற பெட்டி வாக்குச் சாவடி அதிகாரிகளின் கட்டுப் பாட்டில் இருக்கும். இந்த இரண்டு பெட்டிகளும் ஒரு நீண்ட கேபிள் மூலம் இணைக்கப் பட்டிருக்கும்.

வாக்குப் பதிவு முடிந்தவுடன் Contol unit பெட்டியில் உள்ள சிவப்புத் திரை (display) ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் விழுந்துள்ளன என்று காண்பிக்கும்.

இந்த இயந்திரத்திற்கு உட்புறம் ஒரு circuit board உள்ளது. அடிப்படையில், கணினிகளில் காணப்படும் motherboard போன்று ஆனால் அதைவிட மிக சிறிய அளவிலான, குறைந்த செயல்திறன் கொண்ட, சில குறிப்பிட்ட செயல்களுக்காக வடிவமைக்கப் பட்ட board இது. இதன் செயல்படு மூளையாக CPU unit, வாக்குகளை சேமிக்க memory unit மற்றும் வாக்குகளை திரைக்கு அனுப்ப display unit ஆகியவை உள்ளன.

மோசடி செய்ய விரும்புபவர்கள் மூன்று விதங்களில் தங்கள் இஷ்டப் படி வாக்குகளை மாற்ற முடியும் என்று ஆய்வுக் கட்டுரை நிரூபிக்கிறது. இந்த வழிமுறைகளில் சில வீடியோவில் செய்து காட்டப் பட்டும் உள்ளன.

வழிமுறை ஒன்று:

display unitக்கு செல்லும் மெல்லிய board ஐ எடுத்து விட்டு, கிரிமினல்கள் தங்களது boardஐ அதில் சொருகி விடலாம்.
இந்த செருகப்பட்ட போர்டில் மிகச் சிறிய வயர்லெஸ் ரிசீவரும் (உதாரணமாக, செல்போன்களில் உள்ள Bluetooth ரிசீவர்) இருக்கும்.   இப்படி சொருகுவதற்காக உருவாக்கப் பட்ட  board  ஒன்றைக் கீழே பார்க்கலாம்
வாக்குச் சாவடிக்குப் பக்கத்தில் ஒரு செல்போனை வைத்துக் கொண்டு, உண்மையில் போடப்பட்ட வாக்குகளுக்குப் பதிலாக, தங்கள் இஷ்டப்படி வாக்குகள் எண்ணிக்கை வருமாறு செல்போனில் உள்ள வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர் மூலம் செய்ய முடியும்.


வழிமுறை இரண்டு:

EVM இயந்திரத்திற்கு உட்புறம் உள்ள memory chipகளை இணைக்கும் இடத்தில் ஒரு சிறிய “தாக்குதல் கருவி”யை க்ளிப் போன்று பொருந்துமாறு உள்ளே வைத்து விடலாம்.

மின்விசிறியில் உள்ள ரெகுலேட்டர் போன்று சுழல் பட்டன்கள் கொண்ட இந்த க்ளிப் கருவி மூலம் கிரிமினல்கள் தங்களுக்கு வேண்டிய வேட்பாளருக்கு வாக்குகள் திருடப் படும் வகையில் ‘செட்’ பண்ணி வைக்கலாம். இந்த க்ளிப் கருவியை குறைந்த செலவில் சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்ளும் அளவுக்கு மிகச் சிறிய அளவில் தயாரிக்க முடியும்!

வழிமுறை மூன்று:

EVM இயந்திரத்திற்கு உள்ளே உள்ள cpu இயங்குவதற்கான மென்பொருள் (software) படிப்பதற்குக் கடினமான இயந்திர மொழியில் மாற்ற முடியாத படி பொதிந்து வைக்கப் பட்டுள்ளதாகவும், அதனால் இதைத் தயாரிக்கும் நிறுவனங்களே இதை மாற்ற முடியாது என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் இது இருமுனைகள் கொண்ட கத்தி போன்ற வாதம். ஏனென்றால் இயந்திரங்கள் தயாரிக்கப் படும் இடத்தில் எந்த மென்பொருள் இந்த சிப்களுக்குள் வைத்து பொதியப் பட்டது என்பதை தேர்தல் ஆணையம் உட்பட யாருமே கண்டுபிடிக்க முடியாது. மேலும், இந்த மென்பொருள்  நேரிடையானது; சங்கேதக் குறியீடுகள் மூலம் பாதுகாக்கப் பட்டது அல்ல (not securely encrypted).  எனவே மாற்றப் பட்டிருப்பதற்கான தடயங்களைக் கண்டுபிடிக்கவும் இயலாது. அதோடு,  இந்த இயந்திரங்கள் வெளிநாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப் படுகின்றன என்னும் போது இதனால் உருவாகும் ரிஸ்க் இன்னும் அதிகமாகிறது.

வாக்குப் பதிவு இயந்திரங்களை மூடப் பயன்படுத்தப் படும் மெழுகு ’சீல்’ (seal) மிகச் சாதாரணமானது;   இதன் போலியை மிக எளிதாக உருவாக்கிவிட முடியும்.   இயந்திரத்தைத் திறந்து மோசடி உபகரணங்களைப் பொருத்தி  விட்டு போலி  சீலை வைத்து  கண்டுபிடிக்க முடியாதபடி மூடிவிடலாம்.  மேற்கண்டதில் முதல் இரண்டு மோசடி வழிமுறைகளை  சில நிமிடங்களுக்குள்  செய்துவிடலாம் என்றும் நிரூபித்திருக்கிறார்கள்.

இந்திய மின்னணு இயந்திரத்தின் வன்பொருள் (hardware) மற்றும் மென்பொருள் (software) மிக மிக எளிமையானது, நேரடியானது. மற்ற நாடுகளின் தேர்தல் இயந்திரங்கள் போல கடினமான தொழில்நுட்ப சிக்கல்கள் கொண்டதல்லை; அந்த எளிமை காரணமாகவே இவற்றில் மோசடி செய்வது கடினம் என்று தேர்தல் ஆணையம் சொல்லிவந்தது.

ஆனால் இந்த எளிய இயந்திரத்தில் ஓட்டைகள் உள்ளன என்பது இப்போது நிரூபிக்கப் பட்டு விட்டது.

1980களில் பரிசோதனை முயற்சியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சிற்சில இடங்களில் அறிமுகப் படுத்தப் பட்டன. பிறகு 2004 தேர்தல்கள் முதல் நாடு தழுவிய அளவில் எல்லா வாக்குச் சாவடிகளிலும் EVM இயந்திரங்கள் மூலமாகவே வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தற்போது சுமார் 14 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. இந்த அத்தனை இயந்திரங்களையும் பாதுகாக்க அதிதீவிர கண்காணிப்பு தேவை. சாமானியர்களான தாங்களே முயற்சி எடுத்து ஒரு இயந்திரத்தை பரிசோதனைக்காகப் பெற முடிந்தது என்கையில், அதிகார பலமும், பணபலமும் கொண்ட அரசியல் கிரிமினல்களுக்கு இது இன்னும் எளிதான விஷயமாகவே இருக்கக் கூடும் என்ற தங்கள் கவலையையும் கட்டுரை ஆசிரியர்கள் எழுப்புகின்றனர்.

ஒருமுறை ஒரு இயந்திரத்தைக் கைப்பற்றினால் போதும். அதை வைத்து மோசடி உபகரணங்களை உருவாக்கி விடலாம். பிறகு வாக்குச் சாவடிகளுக்குள் சென்று சில நிமிட அவகாசத்தில் அவற்றை உள்ளே இடவேண்டும், அவ்வளவு தான்.


election-commission2009 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்பு, தேசிய அளவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (EVM) பற்றிய சர்ச்சை தொடர்ந்து வருகிறது. பல தரப்புகளில் இருந்தும் கேள்விகளும், சந்தேகங்களும், புகார்களும் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் இவை எல்லாவற்றுக்கும் பதிலாக, இந்த இயந்திரங்கள் முற்றிலும் பாதுகாப்பானவை, இவற்றில் எந்த மோசடியும் செய்ய முடியாது என்ற ஒரே பதிலையே கிளிப்பிள்ளை போலச் சொல்லி வருகிறது. இந்த இயந்திரங்களின் வடிவமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவை பற்றிய பொது விவாதத்திற்கும், விசாரணைக்கும் தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. ” நாங்க சொல்லிட்டோம்ல, நம்புங்க” என்பதே அதன் நிலைப்பாடாக இருந்து வருகிறது. தற்போது ஓய்வு பெற்றுள்ள தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா இன்னும் ஒருபடி மேலே போய் ”இந்திய EVMகள் முற்றிலும் எந்தக் குறைகளும் இல்லாதவை (perfect). இவற்றை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

ஒருபுறம் EVM பற்றிய எந்தத் தகவல்களையும் வெளியிட மறுத்து, மறுபுறம் ‘புகார் சொல்பவர்கள் முடிந்தால் EVM பாதுகாப்பானதல்ல என்று நிரூபித்துக் காட்டுங்கள்’ என்று சவாலும் விட்டது தேர்தல் ஆணையம். இப்போது EVM இயந்திரம் பாதுகாப்பானதல்ல என்று அப்பட்டமாக, தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டு விட்டது. ஆயினும் தேர்தல் ஆணையத்தின் மனப்போக்கில் எந்த மாற்றமும் இல்லை. இயந்திரத்தின் வடிவமைப்பையும், செயல்முறைகளையும் மறுபரிசீலனை செய்வோம் என்ற அறிவிப்பு கூட வரவில்லை. (ஆனால் உள்ளுக்குள் பதற்றமடைந்து சில துரித நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி.  எல்லா EVM இயந்திரங்களும் பத்திரமாக உள்ளனவா என்று கறாரான கணக்கெடுப்பும் நடந்து கொண்டிருக்கிறதாம்).

மாறாக, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து இதனை அம்பலப் படுத்திய ஹரி பிரசாத் மீது பழிவாங்கும் நடவடிக்கையைத் தான் அரசு செய்திருக்கிறது. எல்லா வாசல்களும் மூடப் பட்ட நிலையில், ஒரு ஜனநாயக அமைப்பில் உண்மையை உரக்க அறிவிப்போர்களுக்கு (whistle blowers) வேறு என்ன தான் வழிவகை உள்ளது?

அம்பு நேராகத் தோன்றினாலும் கொடுஞ்செயல் செய்கிறது. கோணலாக இருந்தாலும் வீணை இன்னிசை தருகிறது. மக்களின் பண்புகளை அவர்களது செயலாலும், அதன் ஒட்டுமொத்த விளைவாலும் தான் மதிப்பிட வேண்டும்.

கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கன்ன
வினைபடு பாலாற் கொளல்

என்பது வள்ளுவர் உரைத்த நீதி. எனவே, சட்டப்புத்தக ரீதியாகத் தவறு என்றாலும், ஜனநாயகத்தின் மீதும், தேர்தல் அமைப்பின் மீதும் உள்ள நம்பகத் தன்மையே கேள்விக்கு உள்ளாகும் போது, அதைப் பாதுகாப்பதற்காக இந்தத் தொழில்நுட்பக் குழுவினர் செய்திருக்கும் சிறு சட்டமீறல் பெரிய தவறல்ல என்றே நான் கருதுகிறேன்.

evm-setting-upEVM இயந்திரங்கள் அறிமுகப் படுத்தபோது, காங்கிரஸ் உட்பட எல்லாக் கட்சிகளும் இவை பற்றிய சந்தேகங்களைத் தெரிவித்த படியே வந்தன. 2009 தேர்தலில் எல்லா கருத்துக் கணிப்புக்களையும், ஆதாரபூர்வமான தேர்தல் அலசல் கருத்துக்களையும் பொய்யாக்கும் வண்ணம், அதிர்ச்சியடையத்தக்க வகையில் காங்கிரஸ் கூட்டணி எதிர்பார்ப்பை விட மிக அதிகமாக வெற்றி பெற்றது. சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி உட்பட வேறு பல தொகுதிகளில் சந்தேகப் படும் வகையில் கடைசி நேர தேர்தல் முடிவுகள் மாற்றமடைந்து வந்தன. அதன்பிறகும் பா.ஜ.க, அதிமுக போன்ற கட்சிகள் தேர்தல் முறைகேடுகள் பற்றியும், EVM பற்றியுமான கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால் இந்தத் தேர்தலுக்குப் பின் காங்கிரசும், திமுக போன்ற அதன் கூட்டணிக் கட்சிகளும் இது பற்றி ஒன்றும் கூறாமல் அமைதி காக்க ஆரம்பித்து விட்டன.

அரசியல் ஆய்வாளர்கள் இனிமேல் எழுந்துவர வாய்ப்பில்லை என்று ஒருமித்த குரலில் எழுதிவைத்து விட்ட காங்கிரஸ் வியக்கத் தக்க வகையில் தேர்தல் வெற்றிகள் பெற ஆரம்பித்தது  எப்போதிலிருந்து  என்று பார்த்தால், ஒட்டுமொத்தமாக EVM மூலம் வாக்குப் பதிவுகள் நிகழ ஆரம்பித்த பின்பு தான். இந்த விஷயங்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அரசியல் சார்புகளுக்கு அப்பால்,  ஒரு சக கணினி தொழில்நுட்ப வல்லுனனாக, ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட சக இந்தியக் குடிமகனாக ஹரி பிரசாத் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்முறை தேர்தல் கணிப்பு நிபுணர் & அரசியல் விமர்சகர் G.V.L நரசிம்ம ராவும் மின்னணு வாக்கு இயந்திரங்களை அம்பலப் படுத்தும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

EVM இயந்திரம் பாதுகாப்பானதல்ல என்பது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டிருக்கும் நிலையில், இதே இயந்திரங்களை எந்த மாற்றமும் இல்லாமல் அடுத்தடுத்த தேர்தல்களில் பயன்படுத்துவது நியாயமல்ல; சரியானதல்ல. இந்திய ஜனநாயகத்தின் அச்சாணியான நமது தேர்தல் முறை முற்றிலும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகவும், நம்பகத் தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும். அமெரிக்கா, நெதர்லாந்து, அயர்லாந்து உட்பட பல நாடுகளில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பற்றவை என்று தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்கப் பட்டவுடன், அந்த நாட்டு அரசுகள் இந்த இயந்திரங்களின் பயன்பாட்டை நிறுத்தி விட்டன;  #பழைய_வாக்குச்_சீட்டு முறைக்கே திரும்பச் சென்று விட்டன.

எனவே அடுத்து வரும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களுக்கு முன் இயந்திரங்களில் சுட்டிக் காட்டப் பட்ட குறைகள் களையப் படவேண்டும்; அல்லது மாற்று வழிகள் கொண்டுவரப் படவேண்டும். ஒவ்வொரு கட்சியும் அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வரவேண்டும்.

indiaevm.org, indianevm.com ஆகிய வலைத்தளங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பற்றி மேலும் தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

Source .  tamilhindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக