கருணாநிதிக்கு என்ன நடக்கிறது ?மெடிக்கல் ரிப்போர்ட்
--------------------------------------------------------------
திமுகவின் ஐம்பதாண்டு கால தலைவர், தமிழகத்தின் ஐந்து முறை முதல்வர், இன்று இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் இப்படி பல அடைமொழிகளுக்குச் சொந்தக்காரரான மு.கருணாநிதி,சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து நாட்டின் கடைகோடி குடிமகனான கிராமத்து உடன்பிறப்பு வரை, கருணாநிதியின் உடல் நலம் குறித்து பதற்றத்தோடு விசாரித்து அவர் குணமடைய வேண்டும் என்று தங்கள் விருப்பங்களையும் வேண்டுதல்களையும் முன் வைத்து வருகின்றனர்.
கருணாநிதியின் உடல் நலம் எப்படி இருக்கிறது?
2016 அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி திமுக சார்பில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதனால், அவரைப் பார்க்க வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது முதல் தனது வெளிப் பயணத்தை குறைத்துக் கொண்ட திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வெடுத்து வந்தார்.
கடந்த 2016 டிசம்பர் 1 ஆம் தேதி நீர்ச் சத்து குறைபாடு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் இல்லம் திரும்பினார். சில நாட்கள் கழித்து மீண்டும் டிசம்பர் 15 ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு முதுமை காரணமாக சளித்தொல்லையும், சுவாசக் கோளாறும் இருந்தது. அதனால் அப்போது அவருக்கு “டிரக்கியோஸ்டோமி” சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.
முதுமை காரணமாக கருணாநிதியின் நுரையீரல் தனது செயல் திறனைக் குறைத்துக் கொண்டிருப்பதால் அவரது சுவாசத்தில் பிரச்னை ஏற்பட்டது. மேலும் சளித் தொல்லையும் அவரது சுவாசத்துக்குப் பிரச்னையாக இருந்தது. இதனால், “டிரக்கியோஸ்டோமி எனப்படும் செயல்முறைப்படி அவரது தொண்டையில் துளையிடப்பட்டு சுவாசக் குழாயோடு செயற்கை குழாய் ஒன்று இணைக்கப்பட்டது. இதன் மூலம் சளி உறிஞ்சப்பட்டு வெளியே எடுக்கப்படும். மேலும் நுரையீரலின் செயல்பாட்டை இந்த கருவி ஊக்கப்படுத்துவதால் சுவாசம் சீராகும். இந்த சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 23 ஆம் தேதி வீடு திரும்பினார் கருணாநிதி.
அவரது வீட்டிலேயே மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கருணாநிதி உணவு எடுத்துக் கொள்வதிலும் பிரச்னை ஏற்பட்டதால், அவரது வயிற்றின் வலது மேற்பகுதியில் துளையிட்டு PEG (Percutaneous Endoscopic Gastrostomy) என்ற செயல்முறைப்படி குழாய் பொருத்தப்பட்டது. இதற்கு ’தோல்வழி இரைப்பை துளைப்புக் குழாய்’ என்று பெயர்.
அவ்வப்போது அவரை சந்திக்கச் செல்லும் தலைவர்களை பெயர் சொல்லி அழைக்க முயல்வது, புன்னகைப்பது என்று கருணாநிதியின் ரெஸ்பான்ஸ் நல்ல நிலையில் இருந்தது. இடையிடையே பேரன்களோடு விளையாடுவது என்று ரியாக்ஷன்களோடுதான் இருந்தார் கருணாநிதி.
கைகளைப் பற்றிக் கொள்ளும் உணர்வு!
தனக்கு நெருக்கமான சிலர் தன்னை சந்திக்க வரும்போது அவர்களது கையை இறுகப் பற்றிக் கொள்வார் கருணாநிதி. அது அவருக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைக் கொடுத்தது என்றார்கள் மருத்துவர்கள்.
இப்படியாக காவேரி மருத்துவமனைக்கு சில முறை சென்று உடனடியாக வீடு திரும்பியதை தவிர தனது கோபாலபுரம் இல்லத்தில்தான் மருத்துவமனை போன்ற தகவமைப்பில் சிகிச்சைகள் பெற்றார். மருத்துவர் குழுவினர் தினமும் கருணாநிதியை வந்து சந்தித்து செக்கப் செய்து கொண்டிருந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு நாற்காலியில் உட்கார்ந்துகொள்ள இயலாமல் மெல்ல மெல்ல படுத்துக் கொண்டே இருக்க ஆரம்பித்தார் கருணாநிதி.
கருணாநிதியின் இதயம்; வியந்த லண்டன் டாக்டர்கள்!
கடந்த ஜூலை 18 ஆம் தேதி ஸ்டாலின் லண்டனில் இருந்து திரும்பி வந்த நிலையில் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டிரக்கியோஸ்டோமி குழாயை மாற்றி புதிய குழாய் பொருத்தும் எளிய சிகிச்சைக்காகத்தான் அன்று மருத்துவமனை சென்றுவந்தார் கருணாநிதி.
அன்றைக்கு வீட்டுக்கு வந்த சில மணி நேரங்களில் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தனர். சிறுநீர் தொற்று ஏற்பட்டிருப்பதும் அதனால் காய்ச்சல் வந்திருப்பதும் தெரிந்தது. அதற்குரிய சிகிச்சைகள் அளித்தனர்.
ஆனாலும் முதுமை காரணமாக அந்த சிகிச்சைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் உடல் நிலை இல்லை. கண்களை மூடித் திறக்கவே சிரமப்பட்டிருக்கிறார். கண்களை பல நேரங்கள் மூடிய நிலையிலேயே இருந்திருக்கிறார். அவரது நினைவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டிருந்தது. இதுபற்றி லண்டனில் இருந்த நிபுணர்களுக்கு காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் நிலை பற்றி மருத்துவ ஆவணங்களைக் காட்டி கருத்து கேட்கப்பட்டது. அப்போது 95 வயதிலும் கருணாநிதியின் இதயம் சீராக இயங்கிக் கொண்டிருப்பதை ஆச்சரியத்தோடு குறிப்பிட்டு வியந்திருக்கிறார்கள் லண்டன் டாக்டர்கள்.
வீடா, மருத்துவமனையா?
இந்த நிலையில் ஸ்டாலின் சென்னை திரும்பியதும் கருணாநிதியை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கலாமா, அல்லது வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கலாமா என்று குடும்பத்துக்குள் ஆலோசனைகள் நடந்திருக்கின்றன. ஸ்டாலின் அனைவரையும் வரச் சொல்லியிருக்கிறார். செல்வி, அழகிரி, தமிழரசு, கனிமொழி, செல்வம், கலாநிதிமாறன் உள்ளிட்ட அனைவரையும் வரச் சொல்லிப் பேசியிருக்கிறார்.
மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கவில்லை என்று நாளைக்கு யாரும் தன் மீது குற்றம் சொல்லிவிடக் கூடும் என்பதாலும் அது தன்னை அரசியல் ரீதியாக பாதிக்கவும் செய்யும் என்பதாலும் ஸ்டாலின் குடும்பத்தில் அனைவரோடும் விவாதித்தார். அப்போது கட்சி ரீதியாக துரைமுருகனையும், டி.ஆர்.பாலுவையும் வரச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். அவர்களும் வந்தனர். அப்போது அழகிரி, ‘இது எங்க குடும்ப பிரச்னை. எங்க அப்பாவுக்கு எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப் போறோம்னு பேசுற இடத்துல நீங்க எதுக்கு?’’ என்று கேட்க, துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் எழுந்து வந்துவிட்டனர்.
கருணாநிதியை மருத்துவமனைக்கு இணையான வசதிகளோடு வீட்டிலேயே வைத்து பராமரிக்கலாம் என்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எழுதிக் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். அதன்படிதான் கருணாநிதிக்கு தொடர்ந்து வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருணாநிதியின் அக்காவான சண்முகத்தம்மாள் 95 வயதில் இருந்து 99 வரை செல்வத்தின் வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்ததையும் குறிப்பிடுகிறார்கள் கோபாலபுரம் குடும்பத்தினர்.
சிறுநீர் தொற்றும் சிகிச்சையும்!
ஜுலை 25 ஆம் தேதி கருணாநிதியின் இரத்த அழுத்தம் திடீரென குறைந்திருக்கிறது. பதற்றமான டாக்டர்கள் தொடர்ந்து கண்காணிக்க சில நிமிடங்களில் ரத்த அழுத்தம் இயல்புக்கு வந்துவிட்டது வெண்டிலேட்டர் வைக்கலாமா என்று மருத்துவர்கள் அன்று ஆலோசித்தார்கள். ஆனால் மூச்சு விடுவது இயல்பாக இருந்ததால் வெண்டிலேட்டர் வேண்டாம் என்ற முடிவுக்கும் மருத்துவர்கள் அன்று வந்தார்கள். காய்ச்சல், சிறு நீர் தொற்று ஆகியவற்றுக்கான சிகிச்சைகளைத் தொடர்கிறார்கள்.
95 வயதான உடல் என்பதாலும், கடந்த ஒன்றரை வருடங்களாக மருந்து, மாத்திரை என்று சிகிச்சைக்கு உட்பட்டதாலும் சிறுநீர்த் தொற்றுக்கான ஆன்டி பயோடிக் மருந்துகளை கருணாநிதியின் உடல் முழு அளவில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
மினரல்கள் பற்றாக்குறை
மூளையின் இரு பக்கங்களும் சிறப்பாகச் செயல்படும் ஓர் மனிதர் கருணாநிதி மட்டும்தான் என்று பிரபல நரம்பியல் நிபுணரான ராமமூர்த்தி வியப்புடன் ஒரு முறை தெரிவித்திருக்கிறார்.
“ஆளும் திறமை என்பது இடது மூளை தொடர்பானது. அதேசமயம் காவியமும் கற்பனையும் வலது மூளை தொடர்பானது. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும்.ஆனால் இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது என்பது கருணாநிதி ஒருவருக்குத்தான்’’ என்று நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி பாராட்டியிருந்தார்.
அப்படிப்பட்ட புகழை உடைய கருணாநிதியின் மூளை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக செயற்பாட்டைக் குறைத்துக் கொண்டிருப்பதுதான் தற்போதைய உடல் நிலையின் முக்கியக் கூறாக இருக்கிறது.
இயல்பாக மனித உடலில் ஒரு லிட்டர் ரத்தத்தில் 3.5 முதல் 5 மில்லிமோல் அளவு பொட்டாசியம், மக்னீசியம் ஆகிய மினரல்கள் இருக்க வேண்டும். இந்த மினரல்கள் மூன்று முக்கியப் பணிகளைச் செய்கின்றன.
1. மூளைச் செல்களை செயல்பட வைத்தல்,
2. இதயம் உள்ளிட்ட தசைகளை இயக்குதல்
3. சிறுநீரகத்தை செயல்பட வைத்தல்.
பொதுவாக பொட்டாசியம், மக்னீசியம் ஆகிய மினரல்களின் அளவு குறைந்தால் பொட்டாசியத்துக்கு முன்பே மக்னீசியத்தை உடலில் ஏற்றி அதை சரி செய்ய முயல்வார்கள்.
பொட்டாசியத்தின் அளவு குறையத் தொடங்க அது ரத்த அழுத்தத்தை பாதிக்கும். ஏனெனில் பொட்டாசியம்தான் ரத்த அழுத்தத்தையும், இதயத்தின் சீரான இயக்கத்தையும் நிர்ணயிக்கிறது. வயது முதிர்ந்தவர்களுக்கு பொட்டாசியம் மினரல் இழப்பு என்பது தலைவலி, சோர்வு, மூச்சுத் திணறல், பார்வைத் திறன் குறைவு ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும் பொட்டாசிய மினரல் குறைவானது சிறுநீரகத்தின் செயல்பாட்டையும் மெல்ல மெல்ல பாதிக்கத் தொடங்கும்.
கருணாநிதியின் ரத்தத்தில் பொட்டாசியம், மக்னீசியம் மினரல்களின் தாதுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டிருக்கின்றன என்றும், அதை மருத்துவ ரீதியாக பேலன்ஸ் செய்ய சிகிச்சைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் சிகிச்சை அளிக்கும் காவேரி மருத்துவமனை டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனாலும் 95 வயது ஆகிவிட்ட முதிய உடல் என்பதால் இந்த மினரல்களை சரி செய்யும் சிகிச்சைகளை உடல் முழு அளவுக்கு ஏற்பதிலும் சிரமங்கள் இருக்கிறது என்பதே மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.
தொடரும் போராட்டம்
சிறுவனாக இருக்கும்போதே போராட்டத்தைத் தொடங்கியவர் கலைஞர். கால்சட்டைப் பருவத்தில் 14 வயதில் இந்தி எதிர்ப்புக் களத்தில் திருவாரூர் வீதிகளில் இறங்கிப் போராடியவர். அரசியல் களத்தில் எதிரிகளால் நேரடியாகவே தாக்கப்பட்டு உயிர் பிழைத்தவர். கொள்கை ரீதியாக எதிரிகளால் தினம் தினம் தாக்கப்பட்டவர். அவற்றை எல்லாம் தனது போராட்டத் திறத்தால் வென்று முடித்து வரலாற்றுச் சாதனைகளை படைத்தவர் கருணாநிதி.
இன்றும் அவரது இதயம் பல்வேறு உலக நிபுணர்களையும் வியக்க வைத்து துடித்துக் கொண்டிருக்கிறது. நரம்பியல் நிபுணர்களால் பாராட்டப் பட்ட கருணாநிதியின் மூளை இயற்கையோடு தனது போராட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
போராட்டமே உந்தன் பெயர் கருணாநிதியோ?
- நன்றி மின்னம்பலம்