குழந்தை திருமணங்கள் - ஒரு பார்வை
ஒவ்வொன்றுக்கும் ஒரு வயது இருக்கிறது. சிறு வயது விளையாட்டுக்கானது. வாலிப வயது காதல் வயது. அப்புறம்தான் திருமண வயது. இது உலக வழக்கம். ஆனால் விளையாடும் வயதிலேயே திருமணம் முடிக்கும் கொடுமை இந்தியாவில் பல மாநிலங்களில் இன்னமும் தொடர்கிறது. என்ன நடக்கிறது, இதற்கு அப்புறம் என்ன செய்ய வேண்டும் என எதுவுமே தெரியாத சிறுவர்களை, சிறுமிகளை திருமண பந்தத்தில் தள்ளும் வழக்கம் வட இந்தியாவில்தான் அதிகம். தமிழகத்திலும் அதுபோன்ற குழந்தைத் திருமணங்கள் கடைசி நேரத்தில் தடுக்கப்பட்டு விடுகிறது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள குட்டிக் கிராமம் கரடிமடை. இங்கு 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த 3 மாதங்களில் நடப்பதாக இருந்துள்ளது. படிக்க வேண்டிய வயதில் திருமணமா? என மனம் வெறுத்த சிறுமி அது குறித்து வருவாய்த் துறையினர் நடத்திய மக்கள் குறைதீர்ப்பு முகாமில் புகார் கொடுத்துள்ளார். இரு குடும்பத்தினரையும் கூப்பிட்டு விசாரணை நடத்திய வருவாய்த் துறையினர் கட்டாய திருமணம் நடத்துவது குற்றம், மீறி நடத்தினால் அத்தனை பேரும் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்த பிறகு திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டாய திருமணம் செய்ய மாட்டோம் என உறுதி அளித்த குடும்பத்தினர், சிறுமியை மீண்டும் பள்ளிக்கு அனுப்பவும் சம்மதித்துள்ளனர்.
குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் பெண் குழந்தைகளைப் பெற்றதில் இருந்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பதாக நினைக்கும் பெற்றோர், எவ்வளவு சீக்கிரம் பெண்ணை கட்டிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடமையை முடித்துவிட நினைக்கின்றனர். நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு, சிறுமியாக இருக்கும்போதே, திருமணம் என்ற கிணற்றில் தள்ளி விடுகின்றனர். ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது.
பெற்றோர் எப்படியோ, அடுத்த தலைமுறை சுதாரிப்பாக உள்ளனர். உறவினர் மூலமோ அல்லது நேரடியாகவோ புகார் கூறி இதுபோன்ற கட்டாய திருமணத்தை நிறுத்தி விடுகின்றனர். காரணம் கல்வி அறிவு. ஒரு தலைமுறை படித்து விட்டாலே போதும். பால்ய விவாகம் என்றால் என்ன எனக் கேட்கும் வகையில் அடுத்த தலைமுறை வந்துவிடும். அதற்காகவாவது கல்வி அவசியம்.
‘திருமண வயது’ என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வயதை எட்டாத சிறுவன், சிறுமியர் மனமொத்து திருமணம் செய்து கொண்டால் அது செல்லும் என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஜிதேந்தர் குமாரும்(18), பூனம் சர்மாவும்(16) வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர். இதை ஏற்றுக் கொள்ளாத பூனத்தின் பெற்றோர் ஜிதேந்தர் தங்களது மகளை கடத்தியதாக போலிசில் புகார் செய்தனர். பூனம் ஒரு மைனர் என்பதால் போலீசாரும் வழக்கு பதிவு செய்து ஜிதேந்தரை தேடிக் கண்டுபிடித்து கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் பி.டி.அகமது மற்றும் வி.கே.ஜெயின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “திருமண வயதை எட்டாத சிறுவன், சிறுமி மனமொத்து திருமணம் செய்து கொண்டால் அது செல்லும். இந்து திருமண சட்டத்தில் உள்ள பால்ய விவாக தடுப்பு ஷரத்தில் இத்தகைய திருமணம் செல்லாது என்று கூறப்படவில்லை. சிறுவனுக்கோ, சிறுமிக்கோ திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் மட்டுமே திருமணம் செல்லாது என அறிவிக்க முடியும். சிறுவன் ஜிதேந்தர் தற்போது சிறுமி பூனத்தின் சட்டப்படியான பாதுகாவலன்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
திருமணம் செய்து கொள்ள ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் நிரம்பியிருக்க வேண்டும் என இந்து திருமணச் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தை மீறி திருமணம் செய்தால் அது செல்லாது என்று சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. இதன் அடிப்படையில் தற்போது நீதிபதி அளித்திருக்கும் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக