பணத்தை கொடுப்பீங்களா..? மாட்டீங்களா..?: லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
கோச்சடையான் பட விநியோக பிரச்சனையில் லதா ரஜினிகாந்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் படத்தை அவரது மகள் செளந்தர்யா இயக்கினார். கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் வெளியான இந்த படத்தின் வெளியீட்டுக்கு, ஆட் பீரோ விளம்பர நிறுவனம் லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு கடன் அளித்திருந்தது. இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் கோச்சடையான் திரைப்பட உரிமையை வழங்கவும் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் ஆட் பீரோ நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் பட உரிமையையும் தராமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்ததோடு வேறு நிறுவனத்திற்கு பட வெளியீட்டு உரிமை வழங்கப்பட்டதாக ஆட் பீரோ நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.
கடனாக வாங்கிய பணத்தில் ரூ.8.70 கோடியை மட்டுமே திருப்பித் தந்ததாகவும், எஞ்சிய தொகையைத் தரவில்லை என்றும் ஆட் பீரோ நிறுவனம் குற்றம்சாட்டியது. பெங்களூரைச் சேர்ந்த இந்த நிறுவனம் லதா ரஜினிகாந்த் மீது புகார் அளித்தும் போதிய ஆதாரம் இல்லை என்று ஆட் பீரோ நிறுவனத்தின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் அந்நிறுவனம் உச்சசநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ஆட் பீரோ நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பணத்தை லதா ரஜினிகாந்தோ அல்லது மீடியா ஒன் நிறுவனமோ ஜூலை 3-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் பானுமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட் பீரோ நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 6.20 கோடி தொகையை எப்போது திருப்பி வழங்குவீர்கள் என்று லதா ரஜினிகாந்த் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஏற்கெனவே பணத்தை திருப்பி தருவதாக லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்தும் கொடுக்காமல் இருந்தது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பணத்தை திருப்பி செலுத்துவது தொடர்பாக வருகிற 10-ந் தேதி இறுதி விசாரணையின் போது தனது நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தங்கள் மீது பதியப்பட்ட எப்.ஐ.ஆர். மீதான விசாரணையை தொடர உத்தரவிட வேண்டியது வரும் என்றும் லதா ரஜினிகாந்திற்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஜூலை 10-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக