தெறி ராகுல்
மக்களவையில் இன்று பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசின் மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் இன்று (ஜூலை 20) நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி விவாதத்தில் பேசுகையில், “கல்லாவின் பேச்சைக் கேட்டேன். 21ஆம் நூற்றாண்டின் அரசியல் ஆயுதத்தின் பலிகடா அவர். அவர் மட்டுமல்ல ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், இளைஞர்கள், தலித், பழங்குடியினர் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்றது முதல் பொய். 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றது இரண்டாவது பொய். ஆனால், 4 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருக்கிறது. சீனாவில் 24 மணிநேரத்தில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. இங்குள்ள அரசோ 24 மணிநேரத்தில் 400 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங்குகிறது. படித்த பட்டதாரி இளைஞர்களைப் பக்கோடோ விற்கலாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு கறுப்புப் பணத்தை ஒழிப்பது குறித்த பணமதிப்பழிப்பு நடவடிக்கையை நீங்கள் கொண்டு வந்தீர்கள். நீங்கள் ஏழைகளைப் புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் பணத்தை மட்டுமே வைத்து செலவு செய்கிறார்கள், டெபிட் கார்டோ, கிரெடிட் கார்டோ அவர்களிடம் இல்லை என்பதை உணரவில்லை.
பிரதமர் மோடி எப்போதும், வசதிபடைத்தவர்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கும், கார்ப்பரேட்களுக்கும் பேசுகிறார், சிறு வணிகர்களுக்கு ஆதரவாகப் பேசுவதில்லை. ஏழை மக்களிடமிருந்தும், சிறு வர்த்தகர்களிடமிருந்தும் பணத்தை எடுத்துக் கொள்கிறது மத்திய அரசு.
பிரதமரின் முகம் ஜியோ விளம்பரத்தில் வந்தபோதே, அவர் பணக்காரர்கள் குறித்துத்தான் அக்கறை கொள்வார் எனப் புரிந்துகொண்டேன். இந்த நாட்டின் காவல்காரர் என்று பிரதமர் கூறிவருகிறார். உண்மையில் பிரதமர் மோடி காவல்காரர் அல்ல, பெரு நிறுவனங்களின், பணக்காரர்களின் கூட்டாளி.
ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்காக தேசத்திடம் பொய் கூறுகிறார். விமான கொள்முதல் மதிப்பை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது. பிரான்ஸுடன் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக நிர்மலா கூறுகிறார். பிரான்ஸ் பிரதமருடன் நாம் பேசியபோது அப்படி எந்த ரகசிய ஒப்பந்தமும் இல்லை என்று அவர் கூறினார்.
பிரதமருக்கும் தொழில் அதிபர்களுக்கும் உள்ள பந்தம் குறித்து அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு தொழிலதிபருக்கே ரஃபேல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தத் தொழிலதிபர் ரூ. 45 ஆயிரம் கோடி பலனடைந்துள்ளார். தன் வாழ்நாளில் ஒரு விமானத்தைக்கூட அந்தத் தொழிலதிபர் உருவாக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திடம் இருந்து ஏன் இந்த ஒப்பந்தம் பறிக்கப்பட்டது என்று பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.
பிரதமர் மோடி சிரிப்பது எனக்குத் தெரிகிறது. ஆனால், அவரின் சிரிப்பில் பதற்றம் இருக்கிறது. என் கண்களைப் பார்த்து மோடியால் பேச முடியாது. என்னைப் பார்த்தால் ஒருவிதமான அச்சம் இருப்பதால், என் கண்களைப் பார்த்து பேசாமல் செல்கிறார். ஏனென்றால் அவர் உண்மையாக இல்லை” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார்.
பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மீதான ராகுலின் குற்றச்சாட்டு நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் சபாநாயகரிடம் முறையிட்டார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “.பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏழைகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்தனர்.பெரும் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே பிரதமர் மோடி உதவி செய்கிறார். சில நாட்களுக்கு முன்பு புதிய ஆதார விலையை அறிவித்து அரசு ஏமாற்று வேலை செய்தது.
தங்களின் அதிகாரத்தை இழக்க பிரதமரும் பாஜக தலைவர் அமித் ஷாவும் தயாராக இல்லை. இருவரும் பயத்தில் உள்ளனர். இந்த பயம் கோபத்தை உருவாக்குகிறது. இந்த கோபம் இந்தியா முழுவதும் பரவுகிறது.
உங்களுக்கு என் மீது கோபம் இருக்கும். உங்களுக்கு நான் குழந்தைதான். ஆனால், எனக்கு உங்கள் மீது கோபமில்லை, ஏனென்றால் நான் காங்கிரஸ்வாதி” என்று தனது உரையை முடித்தார்.
பின்னர் பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்ற ராகுல் அவரை ஆரத்தழுவிக் கட்டியணைத்தார். பிரதமரும் ராகுலின் முதுகை தட்டிக்கொடுத்து பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக