வெள்ளி, 6 அக்டோபர், 2017

இந்தியாவில் கால்பந்து திருவிழா: உலக கோப்பை (17 வயது) இன்று ஆரம்பம்



இந்தியாவில் கால்பந்து திருவிழா: உலக கோப்பை (17 வயது) இன்று ஆரம்பம்

Home
Border Collie

புதுடில்லி: இந்தியாவில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து தொடர் முதல் முறையாக நடக்க உள்ளது. இளம் வீரர்களின் துள்ளல் ஆட்டத்தை காணும் போது, ரசிகர்கள் குதிர போல துள்ளிக் குதிப்பர், 'பிரீ-கிக்', 'சைக்கிள் கிக்' என பல்வேறு சாகசங்களை நம்ம மண்ணில் கண்டு களிக்கலாம். இம்முறை உள்ளூரில் களம் காணும் இந்திய அணி, சாதித்துக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில், இந்தியாவில் முதன்முறையாக 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து தொடர் இன்று முதல், வரும் 28 வரை நடக்கவுள்ளது. இதில் பிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதவுள்ளன. 'நடப்பு சாம்பியன்' நைஜீரியா, தகுதி பெறவில்லை. இம்முறை இந்தியா, நைஜர், நியூ கேலிடோனியா என மூன்று அணிகள் அறிமுகமாகின்றன.

இதற்கான போட்டிகள் கோல்கட்டா, கொச்சி, கோவா, டில்லி, மும்பை, கவுகாத்தி என 6 முக்கிய நகரங்களில் நடக்கவுள்ளன. இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் தலைநகர் டில்லியில் நடக்கிறது. பைனல், வரும் 28ல் கோல்கட்டாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடக்கவுள்ளது.

கடின பிரிவு: தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இத்தொடரில் முதன்முறையாக பங்கேற்கவுள்ள இந்திய அணி, 'ஏ' பிரிவில், இரண்டு முறை (1991, 1995) பட்டம் வென்ற கானா, பலம் வாய்ந்த அமெரிக்கா, கொலம்பியா அணிகளுடன் கடின பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் இன்று அமெரிக்காவை சந்திக்கிறது. அதன்பின் கொலம்பியா (அக். 9), கானா (அக். 12) அணிகளுடன் விளையாடுகிறது.


இந்தியா எப்படி: இளம் இந்திய அணி, இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 2 வெற்றி, 3 'டிரா', 7 தோல்வியை பதிவு செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் பெலாரஸ் அணியை வீழ்த்திய இந்தியா, சமீபத்தில் கோவாவில் நடந்த நட்பு ரீதீயிலான பயிற்சி போட்டியில் மொரிஷியசை தோற்கடித்தது. சிலி, மாசிடோனியா, செர்பியா அணிகளுக்கு எதிராக 'டிரா' செய்தது. ரஷ்யா, லாட்வியா, எஸ்தோனியா, ஈரான், தஜிகிஸ்தான், மெக்சிகோ, கொலம்பியா அணிகளிடம் வீழ்ந்தது.

கேப்டன் நம்பிக்கை: இந்திய அணி, சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமான விஷயம். கேப்டன் அமர்ஜித் சிங் (30 போட்டி, ஒரு கோல்), கோமல் (30 போட்டி, 8 கோல்), போரிஸ் சிங் தாங்ஜம் (29 போட்டி, 4 கோல்), சஞ்சீ்வ் ஸ்டாலின் (29 போட்டி, 3 கோல்), சுரேஷ் சிங் வாங்ஜம் (28 போட்டி, 6 கோல்), ஜிதேந்திரா சிங் (28 போட்டி), அன்கித் அனில் ஜாதவ் (27 போட்டி, 2 கோல்) என ஓரளவு அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இந்திய அணியில் 6 அடி 2 அங்கும் உயரம் உள்ள, மத்திய கள வீரரான ஜியாக்சன் சிங், 16, சாதிக்கலாம். இளம் இந்திய வீரர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்படும் பட்சத்தில், இந்தியாவில் கால்பந்து விளையாட்டு புத்துயிர் பெறும்.

பிரேசில்-ஸ்பெயின் மோதல்: கொச்சியில் நடக்கும் 'டி' பிரிவு போட்டிகளில் மூன்று முறை (1997, 1999, 2003) கோப்பை வென்ற பிரேசில், மூன்று முறை (1991, 2003, 2007) பைனலுக்கு தகுதி பெற்ற ஸ்பெயின், வடகொரியா என வலுவான அணிகள் மோதவுள்ளன. வரும் 7ல் பிரேசில்-ஸ்பெயின் அணிகள் மோதவுள்ள போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடருக்கு ரசிகர்கள் வழங்கிய ஆதரவு தான், இந்திய மண்ணில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரை நடத்த வித்திட்டது. இதேபோல, இத்தொடருக்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு கொடுக்கும் பட்சத்தில், இந்தியாவில் கால்பந்து விளையாட்டு சிகரங்களை தொடும்.


பைனலுக்கு செல்வது எப்படி

மொத்தமுள்ள 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும். ஒவ்வொரு பிரிவிலும் 3வது இடம் பிடிக்கும் அணிகளில் இருந்து சிறந்த 'டாப்-4' அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

'நாக்-அவுட்' சுற்றில், முதலில் 'ரவுண்டு-16' (அக். 16-18) போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதியில் (அக். 21-22) விளையாடும். காலிறுதியில் வெல்லும் அணிகள் அரையிறுதியில் (அக். 25) மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள், பைனலில் (அக். 28) பங்கேற்கும்.

சின்னம்

உலகின் அழிந்து வரும் விலங்கு பட்டியலில் உள்ள படைச்சிறுத்தை 17 வயதுக்குட்பட்ட, 17வது உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ சின்னமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

'கெலோ' என, பெயரிடப்பட்ட இந்த விலங்கு பூனை இனத்தை சார்ந்தது. இமயமலை மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்கின்றன.


மீன் வியாபாரி மகன்

இந்திய இளம் கால்பந்து அணிக்கு மணிப்பூரைச் சேர்ந்த அமர்ஜித் சிங், 16, தான் கேப்டனாக களமிறங்கிறார். இவரது அப்பா சந்திரமணி சிங் கியாம், விவசாயி மற்றும் தச்சர். அம்மா அஷ்கான்பி பேபி தெருக்களில் மீன் விற்கிறார்.

பள்ளியில் கால்பந்து விளையாடிய இவரை, அண்ணன் உம்கன்டா சிங் தான், அகாடமியில் சேர்த்துள்ளார் (2010). 2015ல் தேசிய தேர்வாளர்களை ஈர்த்த இவர், மத்திய கள வீரராக அசத்துவார். அணியிலுள்ள சக வீரர்கள் ஒட்டுமொத்தமாக ஓட்டுப் போட்டு அமர்ஜித் சிங்கை கேப்டனாக தேர்வு செய்தனர்.

பெற்றோருக்கு இலவசம்

இந்திய அணி விளையாடும் போட்டிகள் டில்லியில் நடக்கவுள்ளன. இதில் களமிறங்கும் இளம் வீரர்கள் பெரும்பாலும், பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான். இவர்களது பெற்றோர்களால் விமான டிக்கெட் வாங்கி, டில்லி வந்து நேரில் போட்டியை காண முடியாத நிலை உள்ளது.

இதனால், மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில், இந்திய வீரர்கள் அனைவரது பெற்றோர்களுக்கும் இலவச போக்குவரத்து வசதி செய்து தரப்பட்டு, டில்லியில் போட்டியை நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிக்கெட் விலை ரூ. 48

உலக கோப்பை போட்டிகள் டில்லி, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட ஆறு நகரங்களில் நடக்கவுள்ளன. இந்த போட்டிகளை காண, டிக்கெட் விலையில், 60 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு, ரூ. 48 க்கு விற்கபட உள்ளது. இது அந்தந்த மைதானங்களில் குறிப்பிட்ட அளவு மட்டும் விற்கப்படும்.

பெண் நடுவர்

'பிபா' உலக கோப்பை கால்பந்து அரங்கில் முதல் முறையாக, ஆண்கள் போட்டியில் துணை நடுவராக பெண்கள் செயல்பட உள்ளனர். இதற்காக, மொத்தம் 7 கண்டங்களிலிருந்து தலா ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், போட்டியின்போது ஆண் நடுவருக்கு உதவியாக செயல்படுவர்.

அலைபேசிக்கு கட்டுப்பாடு

இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களின் கவனம் சிதறக்கூடாது என்பதில் ஒவ்வொரு அணி பயிற்சியாளரும் தெளிவாக உள்ளனர். இதற்காக, சிலி அணியினருக்கு தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே அலைபேசியை பயன்படுத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

'ஷூ' தான் பிரச்னை

கடந்த 1950ல் பிரேசிலில் நடந்த 'பிபா' உலக கோப்பை சீனியர் தொடரின் தகுதிச்சுற்றில் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா உள்ளிட்ட அணிகள் கடைசி கட்டத்தில் விலகின. இதனால், ஆசிய நாடு என்ற அடிப்படையில் இந்தியாவுக்கு நேரடியாக பிரதான சுற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்திய வீரர்களை பொறுத்தவரை, 'ஷூ' அணியாமல் விளையாடி பழக்கப்பட்டவர்கள். 'பிபா' விதிப்படி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, வேறு வழியில்லாமல் தொடரிலிருந்து இந்தியா விலக நேரிட்டது.

பணம் இல்லை: தவிர, பிரேசிலுக்கு பயணம் செய்ய அதிக செலவாகும் என்பதை, அகில இந்தியா கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) உணர்ந்தது. பயணத்திற்கான செலவில், பெரும் சதவீதத்தை 'பிபா' தருவதாக உத்தரவாதம் அளித்தது. ஆனால், பயிற்சிக்கு போதிய நேரமின்மை எனக்கூறி இந்திய அணி தொடரிலிருந்து விலகியது. உலக கோப்பையை விட ஒலிம்பிக் போட்டியைத்தான் மிகவும் மதிப்பான தொடராக இந்திய அணி எண்ணியதும் மற்றொரு காரணம்.

ஒலிம்பிக்கை பொறுத்தவரை, இந்திய அணி 4 முறை (1948, 1952, 1956, 1960) பங்கேற்றுள்ளது. அதிகபட்சமாக 1956ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த தொடரின் அரையிறுதி வரை முன்னேறியது.


ஆறு பிரிவு

'பிபா' கால்பந்து தொடரில் இந்தியா, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் வீதம் 6 பிரிவுகளில் அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் விவரம்:

'ஏ' பிரிவு: இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா

'பி' பிரிவு: பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி

'சி' பிரிவு: ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா

'டி' பிரிவு: வட கொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின்

'இ' பிரிவு: ஹோண்டுராஸ், ஜப்பான், நியூ கேலிடோனியா, பிரான்ஸ்

'எப்' பிரிவு: ஈராக், மெக்சிகோ, சிலி, இங்கிலாந்து

இந்திய அணி விவரம்

அமர்ஜித் சிங் (கேப்டன்), தீராஜ் (கோல்கீப்பர்), போரிஸ் தாங்ஜம், ஜிதேந்திர சிங், அன்வர் அலி, சஞ்சிவ் ஸ்டாலின், சுரேஷ் வாங்ஜம், நின்தோயிங்பா, அன்கித் ஜாதவ், அபிஜித் சர்கார், கோமல், ஹென்ரி அந்தோணி, லாலெங்மாவியா, ரஹிக் அலி, ஜியாக்சன் சிங், நாங்டாம்பா, ராகுல் கன்னோலி, நமித் தேஷ்பாண்டே, முகமது ஷாஜகான், பிரபாசுகன், தல்வால்.

மைதானம் ஒரு பார்வை

டில்லி, கோல்கட்டா (மேற்குவங்கம்), மும்பை, கவுகாத்தி, மார்கோ, கொச்சி என 6 நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன. வட மாநிலங்கள் என்ற அடிப்படையில் டில்லி, கோல்கட்டா (மேற்குவங்கம்) நகரங்களில் நடக்கின்றன. மத்திய இந்தியாவுக்கு மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையும், வட கிழக்கு இந்தியாவுக்கு அசாமின் கவுகாத்தியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் கோவாவின் மார்கோவிலும் போட்டிகள் நடக்கின்றன. தென் இந்தியா சார்பில் கொச்சி (கேரளா) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணி விளையாடும் மூன்று போட்டிகளும் தலைநகர் டில்லியில்தான் நடக்க உள்ளன. காலிறுதியை பொறுத்தவரை, கவுகாத்தி (அக். 21), மார்கோ (அக். 21), கொச்சி (அக். 22), கோல்கட்டாவில் (அக். 22) நடக்கும். கவுகாத்தி(அக். 25), மும்பையில் (அக். 25) அரையிறுதி நடக்கவுள்ளன. விறுவிறுப்பான பைனலை கோல்கட்டா சால்ட் லேக் மைதானத்தில் வரும் 28ம் தேதி ரசிகர்கள் காணலாம். நன்றி தினமலர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக