ரெண்டு ரூபாய் டாக்டர்!
சென்னையில் இன்னும் இப்படி
பரபரப்பான தி.நகர் உஸ்மான் ரோட்டில் இருக்கிறது தர்மாபுரம். ஒரு காலத்தில் ரிக்ஷாக்காரர்களின் குப்பமாக விளங்கிய ஏரியா. மெட்ராஸ் பாஷை இன்னமும் மிச்சமிருக்கும் இந்தப் பகுதியில்தான் இருக்கிறது அந்த காம்பேக்ட் மருத்துவமனை.
‘‘டாக்டர் ஹரிசங்கர் கிளினிக் எது?’’ என அங்கிருந்த வயதான பெரியவர்களிடம் விசாரித்தால், ‘‘ரெண்டு ரூபா டாக்டர்தானே?’’ என உறுதி செய்துகொண்டு வழிகாட்டுகிறார்கள்.
கிளினிக் உள்ளே, போட்டோ ஒன்றில் கவர்னர் ரோசய்யா கையால் சிறந்த மருத்துவருக்கான விருதை வாங்கிக்கொண்டிருக்கிறார் டாக்டர் ஹரிசங்கர். தினமும் காலை 9.30 - 1.00 தி.நகர் ஏரியாவிலும் மதியம் 2 - 5 வரை கோடம்பாக்கம் பெரியார் பாதை ரோட்டிலும் உள்ள கிளினிக்குகளில் இருப்பார் இந்த ‘ரெண்டு ரூபாய் டாக்டர்’. 5 மணிக்கு மேல் அபிபுல்லா சாலையில் உள்ள கிளினிக்கில் திரையுலக வி.ஐ.பிகளின் ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிடுகிறார்.
‘‘ஒரு காலத்தில் தி.நகர்ல இந்த தர்மாபுரம் ஏரியாவில் குடிசைகள் ஜாஸ்தி.
ரவுடிகளும் கை ரிக்ஷாக்காரர்களும் அதிகம். கிட்டத்தட்ட 31 வருஷத்துக்கு முன்ன இந்த ஏரியாவுக்கு இந்த டாக்டர் வந்தார். அப்போ வைத்தியம் பார்த்தா, டாக்டர் காசு கேட்டு வாங்க மாட்டார். ‘குடுக்கறத குடுங்க’னு சொல்லிடுவார். வர்ற ஆட்களெல்லாம் ஏழை பாழைங்கதானே... அவங்க அஞ்சு பைசா, பத்து பைசானு கையில இருக்கற சில்லறையை டேபிள்ல வச்சிட்டுப் போவாங்க. எண்ணிப் பார்த்தால் ரெண்டு ரூபா தேறும். அப்புறம் அதுவே ஃபீஸ் ஆகிடுச்சு.
வெறுமனே மாத்திரை எழுதிக் குடுத்தா, ரெண்டு ரூபா... ஊசி போட்டா அஞ்சு ரூபா. அப்படிச் சேருற காசையும் ஏரியா ரவுடிங்க வந்து மிரட்டி வாங்கிட்டுப் போயிடுவாங்க. அதே ரவுடிங்க தண்ணி அடிச்சிட்டு உடம்புக்கு முடியாம ஆஸ்பத்திரிக்கு வந்தாலும்கூட, கொஞ்சமும் கோபப்படாம வைத்தியம் பார்ப்பார் எங்க டாக்டர்’’ - சிகிச்சைக்கு வந்த சீனியர்களில் சிலர் பெருமை பொங்க அந்தக் காலம் பேசினார்கள். பிறகே, சர்வ அடக்கமாக வாய் திறந்தார் டாக்டர்.
‘‘எங்க ஃபேமிலியே டாக்டர் ஃபேமிலி. எங்க தாத்தா, சித்தப்பா எல்லாம் டாக்டரா இருந்தவங்க. தாத்தா பிரிட்டிஷ் காலத்துல ‘ராவ் பகதூர்’ பட்டம் வாங்கினவர். அரசு மருத்துவமனையில ஒரு வார்டுக்கு துரைசாமி வார்டுனு அவரோட பெயர் இன்னமும் இருக்கு. ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்ல நான் எம்.பி.பி.எஸ் படிச்சேன்.
ஒரு பைசா கூட பணம் செலவழிக்காம மெரிட்லயே படிச்சவன். அதனாலேயே மக்களுக்கு சேவை செய்யணும்ங்கற எண்ணம் இயல்பா வந்துடுச்சு. அடிப்படையில நான் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட். காஸ்மெட்டாலஜி, செக்ஸுவல் மெடிசின், கவுன்சலிங், ரெய்கி, அக்கு பங்சரிஸ்ட்னு மற்றதையும் படிச்சு முடிச்சேன். இந்த மாதிரி எல்லா மெடிசினையும் கத்துக்கிட்டு வைத்தியம் பார்க்கிறதை ‘ஹோலிஸ்டிக் அப்ரோச்’னு சொல்வாங்க.
தர்மாபுரம் ஏரியாவுக்கு வந்ததில் இருந்து நான் மூணு தலைமுறை மக்களைப் பார்த்திருக்கேன். அப்போ கை ரிக்ஷா இழுத்த சிலரோட பிள்ளைங்க மெரைன் எஞ்சினியரிங் முடிச்சு, நல்ல வேலையில இருக்காங்க. இதையெல்லாம் பார்க்க சந்தோஷமா இருக்கு. இப்ப அவங்களே என் கிளினிக் வரும்போது நூறு ரூபா ஃபீஸ் கொடுக்குறாங்க. நானும் வேண்டாம்னு சொல்றதில்ல.
கோடம்பாக்கம் க்ளினிக் போற வழியில கை ரிக்ஷா இழுத்தவர் ஒருத்தர் இப்போ தள்ளுவண்டியில பிரியாணி கடை போட்டிருக்கார். அவரோட பசங்க ரெண்டு பேரும் நல்ல வசதியா இருக்காங்க. ஆனாலும் அந்தப் பெரியவர் இன்னமும் உழைச்சு சாப்பிடணும்னு நினைக்கிறார். அப்படிப்பட்டவங்களுக்காக என்னோட ரெண்டு ரூபா சேவை இன்னமும் தொடருது!’’ - சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சேலை முந்தானையில் முடிந்த சில்லறைக் காசை ஃபீஸாகக் கொட்டிவிட்டு, டாக்டரை எண்ணச் சொல்கிறார் சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்மணி.
‘‘நடிகர் விவேக் சார் கூட ஒருமுறை என்கிட்ட, ‘டாக்டர், உங்க ஏரியாவில் என்னைத் தெரிஞ்சவங்களை விட, உங்களைத் தெரிஞ்சவங்க அதிகமா இருக்காங்களே’னு காமெடியா சொன்னார். சில சமயம் மதியம் வீட்டுக்கு சாப்பிடப் போகும்போது கூட பேஷன்ட்ஸ் சிலர் அவசரம்னு வீடு வரைக்கும் வந்துடுவாங்க. காசைப் பெரிசா நினைக்காம அப்பவும் சிகிச்சை செய்து அனுப்புவேன்.
என் சர்வீஸை சின்ன வயசில இருந்து பார்த்து வளர்ந்த என் பசங்க ரெண்டு பேரும், ‘டாக்டரானா சம்பாதிக்க முடியாது’னு நினைச்சிட்டாங்க போல. ரெண்டு பேருமே எஞ்சினியர்கள். ஒருத்தர் அமெரிக்காவிலும், இன்னொருத்தர் பிரான்ஸிலும் இருக்காங்க. எனக்கு சிறந்த மருத்துவர் விருது கொடுத்ததெல்லாம் மேலும் மேலும் என்னை உற்சாகப்படுத்தியிருக்கு. ஆனா, என் மகன்களையும் டாக்டராக்கி இந்த சேவையைத் தொடர வைக்கணும்ங்கிற என் எண்ணம் மட்டும் நிறைவேறவே இல்லை!’’ - அதிரச் சிரிக்கிறார் ரெண்டு ரூபாய் டாக்டர்.
நன்றி குங்குமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக